நூலகர் செய்திமடல் 29

   ஆசிரியர் உரை: 

அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட நூலகத்துறை சார்பான அறிவிப்புகளை துரிதமாக செயல்பப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இலக்கியத் திருவிழா:
மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு இலக்கியத் திருவிழாக்களுடன்  இளைஞர் இலக்கியத் திருவிழாக்களும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
    இந்த ஆண்டு  அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள் நடத்துவதற்கு இயக்குநர் அவர்கள் வழிவகை செய்துள்ளார். இது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சி அளிக்கிறது.
     இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இளைஞர் இலக்கியத் திருவிழா தொடர்பாக நூலகர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் சிறப்பாக பயிற்சி வழங்கினர். இந்தப் பயிற்சி  மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  அனைத்து மாவட்டங்களிலும்  இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள்  நடத்துவதற்கு இயக்குநர் அவர்கள் வழிவகை செய்து, வழிகாட்டி வருகிறார்.  மாவட்டங்களில் இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளை மாவட்ட நூலக அலுவலர்களும் பயிற்சியில் கலந்து கொண்ட  நூலகர்களும்  சிறப்பாக செய்வார்கள் என்று நம்புகிறேன்.

 பொது நூலகத்துறை நூலகங்கள் புத்தகங்களை வாசகர்களுக்கு அளிக்கும் இடமாகவும் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான இடமாகவும் மட்டுமே இருக்கும் நிலையை மாற்றி, பொது நூலகங்கள் கலாச்சார மையங்களாக உருவாக்குவதற்கான பணிகளை நூலகத்துறை சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.  இதற்கான திட்டங்களை இயக்குநர் அவகர்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறார். 

அடுத்து,  மாவட்டங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  சர்வதேச புத்தகக் காட்சி நடத்தப்பட்டு தமிழ் நூல்கள் பிற மொழிகளுக்கு கொண்டு செல்வதும், பெற மொழி நூல்களை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலமும் செய்யாத பணிகளை நமது நூலகத்துறை செய்து வருவது பாராட்டுக்குரியது.

    மத்திய அரசு நிதி உதவியுடன் 800க்கும் மேற்பட்ட நூலகங்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நூலகத் துறை வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். 

    பொது நூலகத் துறையின் சேவைகள் எளிதாக  மக்களை சென்றடைய, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கணினி பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதற்கு வசதியாக நூலகர்களுக்கு கணினி பயிற்சிகள் அவசியம்.  அந்த வகையில் நூலகர்களுக்கு கணினி பயிற்சிகள் வழங்குவதற்கு இயக்குநர் அவர்கள் திட்டம் வகுத்து இருக்கிறார். புத்தக காட்சிகள், இலக்கிய திருவிழாக்கள் நடந்து  முடிந்த மாவட்டங்களில் நூலகர்களுக்கான கணினி பயிற்சிகள் வழங்கப்படும் என்று இயக்குநர் அவர்கள் தெரிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நூலகர்களும் நூலகத்துறை மேம்பாட்டிற்கும், நூலகச் சேவை மேம்பாட்டிற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் நன்றி.

மீண்டும் சந்திப்போம்!
- சி.சரவணன், ஆசிரியர்,
 நூலகர் செய்திமடல்.
 இளைஞர் இலக்கியத் திருவிழா தொடர்பாக நூலகர்ளுக்கான பயிற்சி முகாம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட நூலகர்கள்:
இந்த பயிற்சி முகாமில் எனக்கு overall performance prize  வழங்கிய பொது நூலகத்துறை இயக்குநர் திரு. க இளம்பகவத் அவர்களுக்கும் இணை இயக்குநர் திருமதி அமுதவல்லி அவர்களுக்கும், உதவி இயக்குநர் திரு. இளங்கோ சந்திரகுமார் அவர்களுக்கும் நன்றி, நன்றி.  
- சி. சரவணன்
நெல்லை பொருநை இலக்கிய திருவிழா  நிறைவு விழா     பொதுநூலக இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுடன் நூலக பணியாளர்கள்.
திருப்பூர் புத்தகத் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வருகை!
திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பாக 20 திருப்பூர் புத்தகத் திருவிழா 2024 திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் பின்புறம் உள்ள மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
புத்தகத் திருவிழா:
பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் வார இறுதி நாளும் விடுமுறை நாளுமான இன்று திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் குழந்தைகளுடன் திருப்பூர் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்தனர்.
150-க்கும் மேற்பட்ட ஸ்டால்:
புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர்.
விளையாட்டு அரங்கம்:
இந்த புத்தகத் திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டு அரங்கில் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
சிந்தனை அரங்கு:
மேலும் புத்தகத் திருவிழா அரங்கில் நடைபெற்ற சிந்தனை அரங்கில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா கலந்து கொண்டு கீழடி சொல்லும் தமிழரின் தொன்மை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இன்று இலக்கியம்பட்டி கிளை நூலகத்தில் திரு N.சுவாமிநாதன். MBA ( Advisor for Shri Narayani Finance) அவர்கள் ரூபாய் ஆயிரம் செலுத்தி 66வது புரவலராக இணைந்துள்ளார் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  சீ.முனிரத்தினம் மூன்றாம் நிலை நூலகர் கிளை நூலகம் இலக்கியம் பட்டி 
    திருநெல்வேலி டான் சிட்டி லயன்ஸ் சங்கம், தாமிரபரணி வாசகர் வட்டம், தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து கொண்டாடிய குடியரசு தின விழா. ஜனவரி 26  அன்று காலை 10 மணிக்கு மீனாட்சிபுரம் அரசு கிளை நூலகத்தில் திருநெல்வேலி டான் சிட்டி லயன்ஸ் சங்கம், தாமிரபரணி வாசகர் வட்டம், தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து குடியரசு தின விழாவை  கொண்டாடியது.  விழாவுக்கு திருநெல்வேலி டான் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் லயன் I.ஜவஹர் துரை  தலைமை தாங்கினார். பட்டயத் தலைவர் MJF லயன் S.V ஜானகிராம் அந்தோணி, முன்னிலை வகித்தார். தேசிய வாசிப்பு இயக்க தலைவர் லயன் எஸ் தம்பான்  வரவேற்புரை ஆற்றினார்.
     டான் சிட்டி லயன் சங்க செயலாளர் பாவலர் லயன் இரா முத்துவேல் குடியரசு தின சிறப்புரை ஆற்றினார். லயன் சங்க பொருளாளர் லயன் ஜான் ஆசீர் தயாளன், நூலக குழு தலைவர்  முனைவர் சரவணகுமார், நூலகப் புரவலர்  பொன்னையா பிள்ளை வாழ்த்துரை வழங்கினர். விழாவில் குடியரசு தின ஓவியம், கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. ஐம்பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், லயன்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவர்களுக்கும் பிஸ்கட் இனிப்புகள் வழங்கப்பட்டன. கிளை நூலகர் அகிலன் முத்துக்குமார் நன்றி கூறினார். 
 16.1.2023 அன்று செவ்வாய்க்கிழமை மாலை சென்னை புத்தகக் காட்சிக்கு  நானும் சென்னை மாவட்ட நூலக நண்பர் திரு . அண்ணாதுரையும் சென்றோம் . தருமபுரி புத்தகத் திருவிழாவில் கிடைக்காத மூ.வரதராராசனாரின் நூல்கள் சிலவற்றை வாங்கினேன்.  திரு. அண்ணாதுரை எனக்கு  புத்தகம்  ஒன்றையும் நாள்காட்டி ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினார். 
நவஜீவன் பதிப்பகத்தில்  சில புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினேன். அவர்கள் ஏனோ ஸ்டால் போடவில்லை. தமிழ் நாடு பாடநூல் நிறுவனம், மத்திய அரசின் வெளியீட்டுப் பிரிவு உள்ளிட்ட சில அரசுத் துறைகள் ஸ்டால் போட்டு இருந்தன.

தற்காலிக கழிவறை குறைந்த செலவில் சிறப்பாக அமைந்து இருக்கிறார்கள். ஸ்டால்களின் பட்டியல் கட்சிப் படுத்தப்பட்டது சிறப்பு.
 கூட்ட அரங்கில் திரு கி. வீரமணி பேசிக்கொண்டு இருந்தார். அரங்கில் 100 பேர் கூட இல்லை. 
வெளியில் சாலையோரம் பழைய புத்தகங்கள் கடைகள் பல இருந்தன. அவற்றிலும் வாசகர்கள் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு இருந்தனர்.
(கொசுறு செய்தி: ஒரு அப்பளம் 60 ரூபாய், தேநீர் 30 ரூபாய். விலை அதிகம்தான்.) 
- நூலகர் சி. சரவணன், 
கடத்தூர், தருமபுரி 
    தென்காசி மாவட்ட மைய நூலகம்  சென்னை வேளச்சேரி லயன்ஸ் கிளப், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தென்காசிஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து தென்காசி மாவட்ட அளவில்  எட்டாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவ செல்வங்களுக்கு  NMMS தேர்விற்கான  இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் நான்காவது  இலவச மாதிரி தேர்வினை தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது. இதில்  872  பள்ளி மாணவச் செல்வங்கள் இத்தேர்வினில் கலந்து கொண்டனர். 
26.01.2024 அன்று 75 வது குடியரசு தின விழா முன்னிட்டு நவீன நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா. யுவராஜ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நூலகர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.
கம்பம் கிளை நூலக வாசகர் வட்டமும் கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவையும் இணைந்து நடத்திய தைத்திருநாள் விழா, நேதாஜி பிறந்தநாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா 21-1-2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை கம்பம் கிளை நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவினை தி.பொப.சுருளிவேல் நிலக்கிழார் அவர்கள் தலைமையிலும், எம்.கே.எஸ் சந்திரசேகர் தொழிலதிபர் அவர்கள், பொன்காட்சி கண்ணன் இண்டேன் வாயு முகவர், வின்னர் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அ.அலீம் அவர்கள் முன்னிலையிலும் நூலகர் மொ.மணிமுருகன் நூலகர் அவர்கள் வரவேற்க இனிதே விழா துவங்கியது. இவ்விழாவில் இளையவர் அரங்கம் நிகழ்வில் இரா.தவமணி, ரோஹித், யுவாதி ஆகியோர்கள் உரையாற்றினார்கள்.  கவிஞர் ஷர்ஜிலா பர்வீன் யாஹூப் அவர்கள் எழுதிய "சரக்கொன்றை நிழற்சாலை" என்ற நூலை தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மா.முகம்மது அலி ஜின்னா அவர்கள் நூலை வெளியிட  திரு.தி.பொ.சுருளிவேல் நிலக்கிழார் அவர்கள் பெற்றுக் கொண்டார் . இந்நூலினை கவிஞர்.சோமநாதபாரதி அவர்கள் நூல் மதிப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கலந்து கொண்ட எஸ்.சேதுமாதவன்,கவிஞர் பஞ்சுராஜா, கவிதா, ஜான்சிராணி காயத்ரி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவின் நிகழ்வில் சிறப்புரையாக நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு "வங்கம் தந்த சிங்கம்" என்ற தலைப்பில் பாரதிச்செல்வர் கவிஞர்.பாரதன் தலைவர் பா.த.இ. பேரவை மற்றும் வாசகர் வட்டம் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை உறுப்பினர்களும், கம்பம் கிளை நூலக வாசகர் வட்ட உறுப்பினர்களும், இலக்கிய ஆர்வலர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியினை வழக்கறிஞர் இரா சத்தியமூர்த்தி அவர்கள் தொகுத்து வழங்கினார். திரு.ராஜா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.                             
26.1.2024 அன்று தருமபுரியில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில், தருமபுரி மைய நூலகத்தில் பணிபுரிந்து வரும் நூலகர் திரு. ராமச்சந்திரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சிச் தலைவர்  நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். அவருக்கு நூலக நண்பர்கள் பாராட்டு தெரிவித்தபோது.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவிற்கு வந்து‌ இருந்த மணிமேகலை பதிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் மதிப்பிற்குரிய ரவி தமிழ்வாணன் மற்றும் மதுரை சர்வோதய இலக்கிய பணனையின் மேலாளர் மதிப்பிற்குரிய புருஷோத்தமன் ஆகியோரை சந்தித்து பேசிய பொறுப்பு மாவட்ட நூலக அலுவலர் த. இளங்கோ.
-----------------------------------------------------------------------------
    ஈரோடு வாசல் - அந்தி முற்றம் மற்றும் நவீன நூலகம் இணைந்து வழங்கிய நானும் வேல் பாரியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேச்சாளர் ராதா மனோகரன் முதல்வர் (ராஜேந்திரன் கல்வி நிறுவனங்கள்) சிறப்புரையாற்றினார்.
    இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பேரி கிளை நூலகத்தின்  புரவலர் திருமதி ராஜேஸ்வரி பாஸ்கர் அவர்கள் இல்லம் தேடி கல்வியில் பயிலும் 50 மாணவ/ மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டைக்கான தொகை ரூபாய் 1500-/  கடப்பேரி நலச் சங்கத் தலைவர் சீ.கணபதி முன்னிலையில் நல் நூலகர் தி. சுந்தரமூர்த்தி இடம் வழங்கினார் .
    75வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நூலக வளாகத்தில்  நடத்தப்பட்டது நிகழ்ச்சியினை கடப்பேரி நல சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர் 
    நிகழ்ச்சியின் நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் வாசகர் வட்ட துணைத்தலைவர் மா.சுப்பு நன்றி தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசிய நடன கலைஞர்களுடன் தாம்பரம் கிளை நூலக நூலகர் தி. சுந்தரமூர்த்தி.
திருச்சி, வரகனேரி கிளை நூலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
என்கிரிஷ் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்  என்.கே. ரவிச்சந்திரன்  தனது தந்தையார் வட்டாட்சியர். NK.அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வரகனேரி.வ.வே.சு.அய்யர் நினைவு இல்லத்தில் உள்ள கிளை நூலகத்திற்கு  புத்தகங்களும். இயக்குனர் செல்வி. யோகலெட்சுமி. அவர்களுடன் ரூபாய் 1000 வழங்கி புரவலராகவும் இணைத்துக் கொண்டார். நூலகர் மு. செந்தில் குமார் நன்றியுரை வழங்கினார்.
பட்டுக்கோட்டை தாலுக்கா நூலகத்திற்கு தேவதாஸ் அவர்கள் 5 மின்விசிறி வழங்கினார் ,M  .சுவாமிநாதன் நூலகர்,ஆ.ஜெயந்தி பெற்றுகொண்டார் உடன் ரோட்டரி சங்க நிர்வாகிகள்.

திருக்கோவலூர் நூலகத்தை பயன்படுத்தி சார்பு ஆய்வாளர் ( SUB-INSPECTOR OF POLICE ) பதவிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேரும்  நூலக வாசகர் நே.நீதியரசன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை, ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு, திருக்கோவலூர் நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று 26.01.2024 சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 75 வது குடியரசு தின விழாவில், *முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களை பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்களிடத்தில் கடந்த 18 வருட காலமாக பரப்புரை செய்துவரும் கன்னங்குறிச்சி கிளை நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகர் ச.மணிவண்ணன் அவர்கள் சிறந்த பொது சேவை புரிந்தமைக்காக பொன்னாடை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ், கேடயம் நினைவு பரிசினை சேலம் வணக்கத்திற்குரிய மேயர் திரு. இராமச்சந்திரன் அவர்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு. பாலசந்தர் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளனர்.
24.01.24 அன்று இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் இணைந்து வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
 26.1.2024 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில், செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆணைக் குழுவில் சிறப்பாக பணிபுரிந்து  வரும் நூலகர்களுக்கு நற்சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. 
எப்பேர்ப்பட்ட ஆத்மா - மகாத்மா!
1982-ம் ஆண்டு வெளியான "காந்தி" ஆங்கிலத் திரைப்படத்தில் மகாத்மா காந்தியாக நடித்தவர் ஆங்கில நடிகர் BEN KINGSLEY (பென் கிங்ஸ்லி)._

காந்தி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வென்றவர்.

அவர் ஒரு பேட்டியில் சொன்னது:
"காந்தி திரைப்படத்தில் மகாத்மா காந்திஜியாக நடித்த பிறகு இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலும் நான் சென்ற இடங்களிலெல்லாம் சிறியவர், பெரியவர், பெண்கள் என வித்தியாசம் இன்றி எல்லோரும் என் காலில் விழுந்து வணங்குவது என்பது வழக்கமாகவே ஆகிவிட்டது."

"காந்திஜி கதாபாத்திரத்தில் நடித்ததற்கே எனக்கு இவ்வளவு மரியாதை கிடைக்கிறது என்றால், மகாத்மா அவர்கள் எப்பேர் பட்ட தூய்மையான, மனிதகுலத்திற்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்பதை நான் ஆழமாக உணருகிறேன்"

காந்திஜியின் நினைவு தினம்: 30 ஜனவரி (1948).

30.01.24 மகாத்மா காந்தி அவர்களின்  76 ஆவது.நினைவு தினத்தையொட்டி தியாகிகள் தினமாக, வரகனேரி. வ.வே.சு.ஐயர்.நினைவு இல்லத்தில் உள்ள வரகனேரி கிளை நூலகத்தில் அண்ணல் மகாத்மா காந்தி திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. புரவலர் NK.ரவிச்சந்திரன். . (என்கிரிஷ் அறக்கட்டளை நிறுவனர்)  கிளை நூலகர் திரு.மு.செந்தில்குமார்.மற்றும் .வாசகர்கள் கலந்துகொண்டனர்.
 நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள்,  கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.



Comments

  1. நன்றி...

    ReplyDelete
  2. இந்த இதழ் புத்தகத் திருவிழா சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31