நூலகர் செய்திமடல் 30

  ஆசிரியர் உரை: 

அனைவருக்கும் வணக்கம்,

2024 ஆம் ஆண்டு பொது நூலகத் துறைக்கு சிறப்பான ஆண்டு என்றால் அது மிகை ஆகாது. ஆண்டின் தொடக்கத்தில் இளைஞர் இலக்கியத் திருவிழா தொடர்பான  பயிற்சி நூலகர்களுக்கு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டங்களில் இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்பட்டன. 

கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழாக்கள் மாவட்ட நிர்வாகம் (மாவட்ட ஆட்சியர்) சார்பில் நடத்தப்பட்டன. 'இலக்கியத் திருவிழாக்கள் நூலகத் துறை சார்பில் நடத்தப்பட வேண்டும்' என்று நம்மை போன்றவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நூலக அலுவலர்கள் இலக்கியத் திருவிழாக்கள் நடத்துவதற்கு வழிவகை செய்த பொதுநூலத் துறை இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளை நூலகர்கள் சரியாக நடத்துவார்களா? என்ற அச்சம் பலர் மனதில் இருந்தது. ஆனால், போட்டிகளை நூலகர்கள் சிறப்பாக நடத்தி முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு இளைஞர் இலக்கியத் திருவிழாக்கள் மாவட்ட அளவில் நடத்துவதற்கு இயக்குநர் வழிவகை செய்வார் என்று நம்புகின்றேன்.

 பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊர்ப்புற நூலகர்களாக  பணிபுரிந்த நூலகர்களில்  446 பேருக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவிஉயர்வு அளிக்கப்பட்டது.  மூன்றாம் நிலை நூலகர்கள் சிலருக்கு, இரண்டாம் நிலை நூலகர்களாக பதவிஉயர்வு அளிக்கப்பட்டது.  முதல் நிலை நூலகர்கள் சிலருக்கு மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது,  துணை இயக்குநருக்கு இணை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்ட நூலக அலுவலர்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவையெல்லாம் நூலகத் துறையில் வரலாற்றுச் சாதனைகள் என்று சொல்லலாம். 

அத்துடன், மத்திய அரசு நிதி உதவியுடன் பல நூலகங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

  நூலகங்களுக்கு நூல் கொள்முதல்  செய்வதில் சீர்திருத்தங்கள் செய்து தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கும் வகையில் உள்ளது.

 இவ்வாறாக, பொது நூலகத் துறை கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.  நூலகத் துறை மேம்பாட்டிற்கு அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் இயக்குநர் அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்!

- சி.சரவணன், ஆசிரியர், 
நூலகர் செய்திமடல்.
10 ஆண்டுகளுக்கு மேலாக ஊர்ப்புற நூலகர்களாக பணிபுரிந்து, மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு பெற்ற நூலகர்களுக்கு ஆணை வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் இயக்குநர் மற்றும் அலுவலர்கள். 

நூலகர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
துணை பொதுநூலக இயக்குநராக பணியாற்றி வந்த திரு. இளங்கோ சந்திரகுமார் அவர்கள் பதவி உயர்வு பெற்று இணை பொதுநூலக இயக்குநராக பணி ஏற்றுள்ளார். அவர் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
- ஆசிரியர், நூலகர் செய்திமடல்.

நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க இணையதளம் துவக்கம்:

நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக, புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. துறை சார் நிபுணர்களின் கருத்துக்கள், வாசகர்களின் தேவைகள் போன்றவை புத்தக கொள்முதலில் பரிசீலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நுாலகங்களுக்கான புத்தக கொள்முதல் கொள்கை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இதன்படி, புத்தக கொள்முதலுக்கு, https://bookprocurement.tamilnadupubliclibraries.org/ என்ற இணையதளம் துவக்கப்பட்டு உள்ளது. இணையதளத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் துவங்கி வைத்தார். 
முக்கிய அம்சங்கள்: இணையதளத்தில், புதிய புத்தகங்களின் விபரங்களை பதிவு செய்யலாம். அவற்றை புத்தக மதிப்பீட்டு குழு மதிப்பீடு செய்து, கொள்முதல் செய்ய பரிந்துரைக்கும் ஒவ்வொரு புத்தகமும், பன்னாட்டு புத்தக குறியீட்டு எண்ணான ஐ.எஸ்.பி.என்., பெற்றிருக்க வேண்டும். புத்தகத்தை வாங்க வேண்டுமா என, தனி மனித சார்பற்ற முறையில் முடிவு செய்யப்படும். புத்தகங்களை தேர்வு செய்ய, தேர்ந்த விமர்சகர்கள், வாசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்படும். புத்தக தேர்வு முறையில், தேர்வு குழுவின் சார்பில், துறை சார் நிபுணர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். வாசகரின் புத்தக பயன்பாடு மற்றும் தேவை அடிப்படையிலும், புத்தக தேர்வு பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், சிறுவர் மற்றும் தமிழ் புத்தகங்கள் மட்டும், வாசகர்கள் படிப்பதற்கு இரவல் எடுத்தும் செல்லும் வசதி துவக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன், பொது நுாலக இயக்குநர் திரு.இளம்பகவத், நுாலக இணை இயக்குனர் திரு .இளங்கோ சந்திரகுமார், சென்னை மாவட்ட நுாலக ஆணைக்குழு தலைவர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி, சென்னை மாவட்ட நூலக அலுவலராக புதிதாக   பொறுப்பேற்றிருக்கும் திருமதி  கவிதா மற்றும் சேலம் மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பேற்றிருக்கும் விஜயகுமார் ஆகியோர்  என்னை மரியாதை நிமித்தமாக நூலக ஆணைக்குழு  அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
- மனுஷ்யபுத்திரன், தலைவர்,
 சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு .
தருமபுரி மாவட்டம் ஜெயம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இளைஞர் இலக்கியத் திருவிழா பரிசளிப்பு விழா 
14/3/24 வியாழக்கிழமை  தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் ஒடசல்பட்டி  ஊர்ப்புற நூலகம் கூடுதல் கட்டடம் கட்ட  பூமி பூஜை செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி , மாவட்ட நூலக அலுவலர் அர. கோகிலவாணி, ஆய்வாளர் டி. மாதேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தேன்மொழி, நூலகர்,  
ஊர்ப்புற நூலகம், ஒடசல்பட்டி .

14/3/24 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மாதேமங்கலம் ஊராட்சி வெங்கட்டம்பட்டி ஊர்ப்புற நூலகம் கூடுதல் கட்டிடம் கட்ட  ஒப்பந்ததாரர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியினை துவக்கி உள்ளனர்.
- சி. சரவணகுமார், நூலகர், 
ஊர்ப்புற நூலகம், வெங்கட்டம்பட்டி.
திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில்  நடைபெற்ற இளைஞர் இலக்கிய திருவிழாவில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தி பரிசுத் தொகை வழங்கப்பட்டன. 
திருப்பூர் மாவட்ட நூலக அலுவலகத்திற்கு புதிய கண்காணிப்பாளராக திருமதி M.சாந்தி அவர்கள் 14.3.2024 அன்று பணியேற்று கொண்டார். அவரது பணி சிறக்க வாழ்த்துகள் .
பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்துடன் பொது நூலகத்துறையும் இணைந்து 24 x 7 பணி என்று பாராட்டி பேசப்படும் அளவில் பணி செய்த மாவட்ட முதன்மை நூலகர்கள் முன்னிலையில் பணி பகிர்வுடன்  அனைத்து ஊதியமையநூலகர் மற்றும் பல்வேறு பிரிவுகளில் செயல்பட்ட அனைத்து நூலகர்களுக்கு பாராட்டும் நன்றியும் 
...
திருநெல்வேலி இளைஞர் இலக்கிய திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா முன்மாதிரி முதலில் நடத்தி சிறப்பு சேர்த்தது மட்டுமில்லை...
பொது நூலக இயக்ககத்தின் பார்வையில் தற்போது பொருநை புத்தகத் திருவிழாவும் பதிப்பாக்கம் செய்யும் திருவிழாவாக மாற்றிய பெருமையில் நம் பொது நூலகத்துறை பங்களிப்பு தனித்துவம் பெற்றமைக்கு நூலக பணியாளர்கள் 
அனைவருக்கும் மிக்க நன்றி!

- மாவட்ட நூலக அலுவலர், திருநெல்வேலி.

கம்பம் கிளை நூலகத்தில் 9-3-2024 ஆம் நாள் காலை "வகை வகையாய்  வாசிப்போம்" எனும் திட்டத்தின் கீழ் பொது நூலகத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து கிராமப்புற குழந்தைகளை கிராமப்புற நூலகங்களுடன் இணைக்கும் திட்டத்தை   கவிஞர் என். மாதவன் அவர்கள் வருகை புரிந்து இந் நிகழ்வின் நோக்கம் பற்றி கலந்துரையாடல் மற்றும் சிறப்புரை ஆற்றினார். இந் நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் அவர்களும், தேனி மாவட்ட அறிவியல் இயக்கம் பொறுப்பாளர்களும், மற்றும் இல்லம் தேடி கல்விப் பணியாளர்கள்,  ஒருங்கிணைப்பாளர்களும், மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட நூலக அலுவலருக்கு வரவேற்பு:
தருமபுரி மாவட்ட நூலக அலுவலராக பொறுப்பேற்ற திருமதி அர. கோகிலவாணி அவர்களுக்கு தருமபுரி மாவட்ட நூலகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முழு நேர கிளை நூலகம் நெல் வயல் சாலை பெரம்பூர் சென்னை-11 , 12 /3/ 2024 அன்று உலக மகளிர்  தின நிகழ்ச்சி  சிறப்பாக நடைபெற்றது. மகளிர்கள் கலந்துகொண்டு கவிதை வாசிப்பு, கதை சொல்லுதல் மற்றும் அழகி நூலின் மதிப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் இலக்கியச் சோலை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் அஞ்சல் துறை மகளிர் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் மூவர் நூலகத்தில் தலா ரூபாய் 1000/- வழங்கி நூலகப் புரவலர்களாக இணைந்துள்ளனர். திருமதி பே. விஜயலட்சுமி அவர்கள் திரு. நம்ம ஊரு கோபிநாத் அவர்கள் மற்றும் திரு கே எம் கோபிநாத் அவர்கள். அவர்களுக்கு  நூலகத்தின் சார்பாகவும் மற்றும் பொது நூலகத்துறை சார்பிலும் நன்றி கலந்த வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கிறோம்.
 - என். செல்வம், இரண்டாம் நிலை நூலகர். 
நூலகருக்கு அந்தமான் தமிழர் சங்கம் வழங்கிய 'மொழிக் காவலர்' விருது:
ந்தமான் தமிழர் சங்கம் சார்பில் உலகத் தாய்மொழி தின விழா  தலைநகர் போர்ட் பிளேயரில் 21.2.2024 அன்று  நடைபெற்றது. இந்த விழாவில் கடத்தூர் கிளை நூலக நூலகரும், தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கத் தலைவருமான திரு. சி.சரவணன் அவர்களுக்கு 'மொழிக் காவலர்' விருது வழங்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாவது புத்தக கண்காட்சியின் நிறைவு ‌நாள்‌ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன் தேனி மாவட்ட பொறுப்பு மாவட்ட நூலக அலுவலர் திரு. சரவணகுமார் மற்றும் நூலகத் துறையினர்.

பொது நூலக இயக்கத்தில் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் என பல்வேறு பதவிகளில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற திருமதி மு. சுமதி அவர்களுக்கு மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்கள் தலைமையில், மரியாதைக்குரிய இணை இயக்குனர் அவர்கள் முன்னிலையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்குரிய சகோதரர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலக சகோதரிகளுக்கு நினைவு பரிசும், மதிய உணவும் வழங்கி சிறப்புரை ஆற்றிய இனிய தருணம்.
மதிப்பிற்குரிம், மரியாதைக்கும் உரிய பொது நூலக இயக்குனர் அவர்களின்‌ ஆணையின் பேரில் பல்வேறு மாவட்டங்களை‌‌ சேர்ந்த ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர்களாக‌ இன்று (29.02.24) இராமநாதபுரம் மாவட்டத்தில் பணி பொறுப்பு ஏற்று கொண்ட இனிய தருணம்.
காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைகுழு கீழ்செயல்படும் மேற்கு தாம்பரம் கிளை நூலகத்தில் வாசகர்களை பயன்பாட்டிற்காக 12/03/ 2024 அன்று திரு .M இளங்கோவன் அவர்கள் பத்திரிக்கை மற்றும் பருவ இதழ்கள் வைப்பகம் நன்கெடையாக வாங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைகுழு கீழ் செயல்படும் மேற்கு தாம்பரம் கிளை நூலகத்தில் 11.3.2024 இன்று திரு. N. அசோக் அவர்கள் ரூபாய் 1000/-செலுத்தி நூலக புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார்.
கருங்குழி கிளை நூலகத்திற்கு, கருங்குழி திரு.சு. உமாபதி நல்லாசிரியர் (பணி நிறைவு) அவர்கள் ரூபாய் 1000 வழங்கி புரவலராக இணைந்தார். 

 நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள்,  கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

Comments

  1. எழுத்துப்பிழை தவிர்ப்பீர்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ஒரே நாளில் தயாரித்து. எழுத்துப்பிழை சரிபார்க முடியவில்லை. அடுத்த இதழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் வெளியிடுவோம்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 31