நூலகர் செய்திமடல் 31
ஆசிரியர் உரை:
அனைவருக்கும் வணக்கம்,
2023-24 ஆம் நிதியாண்டு முடிவடைந்து 2024 - 25 ஆம் நிதியாண்டு தொடக்கி உள்ளது. வருமான விரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் வருமா என்னும் எதிர்பார்ப்பில் இருக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தல் திருவிழா தொடக்கி உள்ளது. இந்த திருவிழாவில் யார் யாருக்கோ வாக்குறுதி கொடுக்கிறார்கள். இந்த சமூகத்திற்கு ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களுக்கு மாதம் 1,௦௦௦, 2,௦௦௦ தருகிறோம் என்கிறார்கள். வெற்றிப் பெற்றால் மாதம் 6,௦௦௦ தருகிறோம் என்றும் சொல்கிறார்கள். இந்த அரசுக்கும், மக்களுக்கும் மாடாய் உழைத்து, ஓடாய் தேய்ந்து, ஓய்ந்து போனவர்களுக்கு ஒன்றும் இல்லை என்கிறார்கள். கேட்டால் நிதி இல்லை என்கிறாகள். வேடிக்கையாக உள்ளது.
நமக்கு உரிமைத் தொகை (ஓய்வூதியம்) பெற உரிமை இல்லையா? தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. யாருக்காவது நம் ஞாபகம் வருகிறதா? என்று பார்ப்போம்.
அடுத்து, இந்த இதழில் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தில் நூலகர்களின் பங்கு என்னும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதி இருக்கிறேன். அணைத்து நூலகர்களும் வாசிக்க வேண்டிய ஒன்று. நூலக நண்பர்களுக்கு இந்த கட்டுரையை பகிருங்கள்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
- சி.சரவணன், ஆசிரியர்,நூலகர் செய்திமடல்,
- 8668192839.
--------------------------------------------------------------------
வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தில் நூலகர்களின் பங்கு
நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் புத்தகங்கள் இனி வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணையையும் வெளியிட்டு இருக்கிறது. இதனை வடிவமைக்க பொது நூலகத்துறை இயக்குநர் திரு க. இளம்பகவத் அவர்கள் பெரும் முயற்சி எடுத்துள்ளார்.
பதிப்பாளர்கள், வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தக ஆர்வளர்கள் என்று பல்வேறு தரப்பினர் இந்தத் திட்டத்திற்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.
சிறப்பு மிக்க இந்தத் திட்டத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்:
நூலகங்களுக்கான புத்தகங்கள் தேர்வு செய்வதற்கு என்று ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் பல துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற்று இருப்பர். இந்தக் குழு ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். நூலகங்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்ய விரும்பும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் இதற்கான இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் 20 - 25 பக்கங்கள் இதற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணைய தளத்தில் பெறப்பட்ட புத்தக விண்ணப்பங்கள் துறை சார் வல்லுநர்கள் / புத்தகத் தேர்வு குழுவினர் மதிப்பீடு செய்து, மதிப்பீட்டுப் புள்ளிகள் அளிப்பர்.
நூல் தேர்வுக் குழு தேர்வு செய்த புத்தகங்கள், வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? என்று மதிப்பீடு செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில நூலகர்களுக்கும், வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும். இந்தக் குழு அடுத்தடுத்த ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்படும்.
நூல் தேர்வுக் குழுவினர் / துறை சார்ந்த வல்லுநர்கள், நூலகர்கள்/ வாசகர் வட்டத்தினர் அளித்த மதிப்பீட்டுப் புள்ளிகள் அடிப்படையில் புத்தகங்கள் தேர்வு செய்யப்படும்.
அடுத்து, ஒவ்வொரு நூலகத்திற்கும் ஒரு குறிப்பிட்டத் தொகை புத்தகங்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்படும். மைய நூலகம், முழுநேர நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் ஆகிய நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் தங்கள் நூலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு ஏற்றவாறு பட்டியலில் உள்ள நூல்களில் தங்கள் நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாசகர் வட்டத்தோடு கலந்தாலோசித்து தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நூல்களின் தலைப்புகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நூலகர்கள் காலாண்டுக்கு ஒரு முறை புதிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
நூல்கள் வைக்க இடவசதி இல்லாத நூலகங்களுக்கு நூலடுக்குகள் வாங்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதுவும் இணையதளத்தில் நூலகர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
புதிய புத்தகங்கள் மாவட்ட மைய நூலகத்திற்கு செல்லாமல் நேரடியாக சம்பந்தப்பட்ட கிளை / ஊர்ப்புற நூலகங்களுக்கு பதிப்பாளர்கள் அனுப்பி வைப்பர். பதிப்பகங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்களுக்கு மைய நூலக சேர்க்க எண் (DCL accession number) நூல் பகுப்பு எண் (classification number) ஆகியவை இணையதளம் மூலமாகவே ஒவ்வொரு நூலகத்திற்கும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் விவரம் நூலகங்கள் வாரியாக இணையதளத்தில் வெளியிடப்படும். இவையெல்லாம் வெளிப்படையான நூல் கொள்முதல் திட்டத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
நூல் தேர்வுக் குழுவில் நூலகர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் சார்பில் பல முறை கோரிக்கை வைத்து இருக்கிறேன். நீண்ட காலக் கனவு, நனவாகி இருக்கிறது. மகிழ்ச்சி. நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் புத்தகங்கள் மட்டுமல்லாது, பத்திரிகைகளும் சம்பந்தப்பட்ட நூலகர்களின் கருத்துகள் அடிப்படையில் வாங்கப்படும் என்னும் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பார்கள். இங்கு 'எல்லாப் புகழும் இளம்பகவத்க்கே' என்றால் அது மிகையாகாது.
புதிய நூல் கொள்முதல் கொள்கையில் நூலகர்களின் பங்கு அலாதியானது.
ஆனால், இந்த அரசாணையை எத்தனை நூலகர்கள் முழுமையாக வாசித்து இருப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தத் திட்டம் பற்றி எத்தனை நூலகர்கள் விவாதித்து இருப்பார்கள் என்றும் தெரியவில்லை.
இப்படி ஒரு மகத்தான திட்டத்தை செயல்படுத்தும் பொழுது ஊழியர்களை தயார் படுத்த வேண்டியது அவசியம். தங்களுடைய நூலகங்களுக்கு வாங்கப்பட வேண்டிய புத்தகங்களை நூலகர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்வது சற்று சவாலானது.
ஏனென்றால் நூலகர்கள் மத்தியில் போதிய கணினி அறிவு இல்லை. அனைத்து கிளை நூலகங்களிலும் கணினிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான நூலகங்களில் கணினிகள் பயன்பாட்டில் இல்லை. காட்சிப் பொருளாகத்தான் இருக்கிறன.
இந்தத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்தி வாசகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற நூலகர்களுக்கு உடனடியாக கணினி பயிற்சி வழங்க வேண்டியது அவசியம். கணினி பயிற்சிக்கு என்று தனியாக கணினி பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டியதில்லை. மாவட்டத்திற்கு ஒன்று இரண்டு கணினி அறிவு பெற்ற நூலகர்களுக்கு கணினி பயிற்சி அளித்து, அந்த நூலகர்கள் மூலம் மற்ற நூலகர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கலாம் . இது நிதிச் சுமையைக் குறைக்கும்.
ஏற்கனவே, நூலகர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு என்று நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை கணினி பயிற்சிக்கு பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
பல நூலகங்களுக்கு இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி வாய்ப்புகளை எல்லாம் நூலகர்கள் பயன்படுத்திக் கொண்டு, புதிய நூல் கொள்முதல் திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் மூன்றாம் நிலை நூலாக பணிபுரிந்து வந்த ராமச்சந்திரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நூலகங்களில் நூல் கொள்முதல் செய்ய வெளிப்படை தன்மை பற்றிய தகவல்கள் தங்கள் கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன்.நூலகர்களுக்கு போதிய கணினி அறிவு இல்லை என்பதை மறுக்க முடியாது.மேலும்கணினி பயிற்சி தர வேண்டும் என்ற கருத்தை இயக்குனர் பரிசீலனை செய்து நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்
ReplyDelete