நூலகர் செய்தி மடல் 1
தமிழகத்தில் உள்ள அரசுத் துறை / பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் தங்கள் துறைகளின் சேவைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பத்திரிகைகள் வெளியிடுகின்றன. பொது நூலக இயக்ககமும் பொது நூலக செய்தி மடல் என்னும் மாத இதழை பல ஆண்டுகளாக நடத்தி வந்தது. அந்த மாத இதழ் கடந்த 10 ஆண்டுகளாக வெளிவருவதில்லை. நூலகத் துறையின் திட்டங்கள், சாதனைகள், அரசாணைகள், நூலகர்களின் சேவைகள் முதலானவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் பொது நூலக செய்தி மடலின் பங்கு தனித்தன்மையுடன் இருந்தது. சில காரணங்களால் அந்த இதழ் நின்று போய்விட்டது. நின்று போன அச்சு ஊடகத்தை மீண்டும் கொண்டு வருவதில் நிர்வாக சிக்கல்கள் இருப்பது உண்மை. ஆனால், தனிச்சுற்றாக வெளியிடுவதில் சிக்கல் இல்லை. நின்று போன பொது நூலக செய்தி மடல் மீண்டும் வெளியிடப்பட முடியும் என்று நம்புகிறேன்.
நூலகர்கள் பலரும் தங்கள் அன்றாட பணிகளுக்கு இடையே, தங்கள் நூலகங்களில்
பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்சிகள் நூலகத்தை பயன்படுத்திக்
கொள்ள வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும்
தூண்டுகோலாக இருக்கின்றன.
இந்த நிகழ்சிகள் நூலகர்களின் இது போன்ற
செய்திகள் அந்தப் பகுதியோடு அல்லது அந்த மாவட்டத்தோடு நின்று விடுகின்றன. ஒரு
நூலகர் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி,
வாசகர்களுக்கு மட்டுமல்லாது, மற்ற நூலகர்களுக்கும்
தூண்டுகோலாக அமைய ஊடகம் ஒன்று கட்டாயம் தேவை.
இன்றைக்கு சமூக ஊடகங்கள் பெருமளவு
பெருகி உள்ளன. அதன் அபரிதமான வளர்ச்சியால்,
எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள
நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி / விழா போன்ற செய்திகள் மாநிலத்தில் பலரும்
தெரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் அவர்களது நட்பு வட்டாரங்கள் மூலமாகவே அறிந்து
கொள்ள முடிகிறது. அதுவே ஒரு பொது ஊடகமாக இருந்தால் மாநிலம் முழுதும் உள்ள
நூலகர்கள் அந்த நிகழ்ச்சியை/ விழாவைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதற்கான
முன் முயற்சிதான் "நூலகர் செய்தி மடல்" என்னும் இந்த மின்னிதழ்.
ஆன்லைன் வருகைப் பதிவு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஆண்ட்ராய்டு செல்போன்
இல்லாதவர்கள்கூட ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால், நூலகர் செய்தி மடல்
அனைத்து நூலகர்களையும் சென்றடையும் என்று நம்புகிறேன்.
"நூலகர் செய்தி மடல் டிசம்பர் 1
முதல் வெளிவரும்" என்ற அறிவிப்பு
வெளியிட்டவுடன், அதிக
எண்ணிக்கையிலான நூலகர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த இதழுக்கு நூலகர்கள் மத்தியில் நல்ல
வரவேற்பு இருக்கிறது.
இந்த இதழை அச்சு இதழாக வெளியிடலாம் என்றுதான்
இருந்தேன். அச்சு இதழ் வெளியிடுவதற்கு பல்வேறு சட்ட விதிகளை கடைபிடிக்க
வேண்டியுள்ளது. ஆனால், மின்னிதழ்
தொடங்குவதற்கு அப்படி எதுவும் சட்ட விதிகள் இல்லை என்பதால், மின்னிதழாக வெளியிட
முடிவு செய்யப்பட்டது.
இதில் வருவாய் நோக்கு இல்லை. ஒரு
சேவையாக, நூலகர்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறப்பாக செயல்படும் நூலகர்களை அடையாளப்படுத்தவும், நூலகர்களின்
படைப்பாற்றலை மேம்படுத்தவும், நூலகர்கள் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளவும்
இது ஒரு கருவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கல்லூரி நூலகர்கள் சிலரும் இந்த மின்னிதழுக்கு,
தொடர் கட்டுரைகள் எழுத முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பதினைந்து நாட்களில் ஒரு இதழை கொண்டு வர முடியுமா? என்று நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். என்னுள்ளும் அந்த
கேள்வி இருக்கிறது. முடியும்
என்று நம்புகிறேன்.
ஏற்கனவே, நூலகர் குரல் இதழில் இணை ஆசிரியராக இருந்து தொடர் கட்டுரைகள்
எழுதிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நூலகர் குரலில் வெளிவந்த என்னுடைய தொடர்
கட்டுரைகளை படித்த அன்றைய பொது நூலக இயக்குநர் முனைவர் க. அறிவொளி அவர்கள் என்னை
தொலைபேசியில் அழைத்து பெரிய பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுமாறு
அறிவுறுத்தினார். அவரின் அறிவுரைப்படி நான் எழுதிய முதல் கட்டுரை இந்திய நூலகத்
தந்தை எஸ். ஆர். ரங்கநாதன். இது தினமணி நாளிதழில் 12.8.2011
அன்று வெளியானது.
அந்தக் கட்டுரையில் நூலகர்களுக்கு
வழங்கப்படும் நல் நூலகர் விருதை இந்திய நூலகத் தந்தை எஸ். ஆர். ரங்கநாதன் பெயரில்
வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.
தமிழக அரசு, அந்தக் கட்டுரையை, பொது நூலக இயக்குநருக்கு
அனுப்பி கருத்துரு கேட்டது. அன்றைய இயக்குநர் முனைவர் க. அறிவொளி அவர்கள்
நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருதை இந்திய நூலகத் தந்தை எஸ். ஆர்.
ரங்கநாதன் விருது என்று வழங்கலாம் என்று அரசுக்கு கருத்துரு அனுப்பினார். சில
மாதங்களில் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு முதல் நூலகர்களுக்கு வழங்கப்படும்
விருது இந்திய நூலகத் தந்தை எஸ். ஆர். ரங்கநாதன் விருது என்று வழங்கப்படுகிறது.
அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாக அதை நான் பார்க்கிறேன்.
அதைத்தொடர்ந்து,
தினமணி,
தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும்
கட்டுரைகள் எழுதி வருகிறேன். அதனால்,
நூலகர் செய்தி மடல் இதழை குறித்த நாளில்
வெளியிட முடியும் என்று நம்புகிறேன். இந்த இதழை முழுவதுமாக படித்து தங்கள்
கருத்துகளை மின்னஞ்சல், வாட்ஸ்
ஆப் மூலமும் அனுப்புமாறு நூலக நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்தடுத்து வரும் இதழ்களில்,
புதிய புதிய பகுதிகள் சேர்ப்பதற்கு
முயற்சி செய்வோம். நூலக நண்பர்களின் அறிவுரைகள் ஏற்கப்படும். நூலகர்கள் தங்கள்
நூலகங் களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை செய்திகளாக அனுப்பலாம். நூலக நண்பர்கள் கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள்
போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். நூலகத் துறை சார்ந்த முக்கிய அரசாணைகளையும், அறிவிப்புகளையும்
நூலக நண்பர்கள் அனுப்பலாம். இந்த இதழில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதாக தாங்கள்
நினைத்தால், அதையும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம்.
இந்த இதழ் தொடர்ந்து சிறப்பாக வெளிவருவதற்கு உங்கள் அனைவரின்
ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். நன்றி!
- சி.சரவணன், ஆசிரியர், நூலகர் செய்தி மடல்.
கட்டுரை: |
தமிழும் இணையமும்
முனைவர் கரு. செந்தில்குமார், நூலகர்.
உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்று
உலகமே விரல் நுனிக்குள் வந்து விட்டது என்றும் கூறலாம். இதற்கு முக்கியக் காரணி
இணையம், கைபேசி ஆகியன. பல இடங்களில் உள்ள கணினிகளைச் செயற்கைக்கோள் மூலம் இணைப்பதே
இணையம் (இண்டர்நெட்). ஒரு சிலந்தியின் வலை போல் உலகின் பல பாகங்களை இணைப்பதால்
இதனை வலைதளம் அல்லது வலைப்பின்னல் என்கிறோம்.
1969இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 500க்கும் மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
செயற்கைக் கோளிலிருந்து தகவல்கள் தலைமைக் கணிப்பொறிக்கு முதலில் அனுப்பப்பட்டன.
தலைமைக் கணிப்பொறி, அதனுடன் இணைக்கப்பட்ட மற்றக் கணிப்பொறிகளுக்கு அத்தகவல்களை
அனுப்பியது. இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும்
அமெரிக்கர் ஆவார்.
கணினி தொழில்நுட்பம், இணையத் தொழில் நுட்பம் ஆகிய இரண்டும்
தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றன. ஆசிய அளவில் ஆங்கிலத்திற்கு
அடுத்தபடியாகத் தமிழுக்கே அதிகமான இணைய அமைப்புகள் உள்ளன. தமிழில் சுமார் 2000 இணைய
அமைப்புகளும் ஒரு கோடி பக்கங்களும் உள்ளன. இதனைத் தமிழில் படிப்பதற்காக அமுதம், லதா, பாமினி, மயிலை, பூபாளம், முரசு ஆகிய
மென்பொருட்களும் இணையம் மூலமாக கிடைக்கின்றன. இணையம் வந்த பிறகுதான் தமிழ்த்
தகவல்கள் கடல் கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் பரவின.
இன்று இணையம் உலகை ஒரு சிற்றூராக்கி விட்டது. நாம்
சொல்ல வேண்டிய புதிய செய்தியை தமிழில் மிக அழகாக இரண்டு மூன்று நிமிடத்தில் ஒரு
வலைப்பூ உருவாக்கி இளைஞர்கள் சொல்லிவிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பழங்கால இலக்கியங்கள் தொடங்கி தற்கால புதுமை படைப்புகள்
வரை அரிய நூல்கள், வார
இதழ்கள், சஞ்சிகைகள், என அனைத்தையும்
இணையத்தில் சேகரிக்க முடியும். இவ்வளவு நூல்களை தூசி தட்டி அடுக்கி வைக்கும் கடின
வேலை இல்லாமல் கரையான் அரிப்ப்பு இல்லாமல் ஆயிரக்கணக்கில் மிகவும் எளிதாக
இணையத்தில் சேகரித்து வைக்கமுடியும். எப்பொழுது வேண்டுமானாலும் மிகவும் எளிதாக
தேடி படிக்க முடியும். மின் நூலக இணையதளத்தை அமைப்பதற்கு இலவசமாக கிடைக்கும்
இணையத்தளத்தில் கூட பல அரிய புத்தகங்கள் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றன எனபது
மறுக்கப்படாத உண்மை.
எழுத்துரு சிக்கலும்
தட்டச்சுச் சிக்கலும் தொடக்க காலத்தில் இருந்தது உண்மை. அவற்றை எல்லாம்
தாண்டி, இயக்கு திட்டங்கள் என்னும் மென்பொருள்கள் பல தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் இவை
உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக அளவில்
அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும் பங்காற்றுகின்றன. செய்திகளையும்
வலைப்பூக்கள் தருகின்றன. மேலும் படங்கள் ஓவியங்கள், கதை, கவிதை, கட்டுரை, பயிலரங்கம், காணொலிகள்
ஒலிப்பதிவுகள் எனப் பல வடிவில் தமிழ்ச் செய்திகள் கிடைக்கின்றன. தமிழ்ப்
படைப்புகளின் வாசகர் தளமும் விரிவடைந்தது. ஆனால் தற்பொழுது பேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர் என
அடங்க மறுக்கின்ற வளர்ச்சியாக தமிழ் இன்று எல்லோர் கைகளில் தவழ்வது மகிழ்ச்சி
அளிக்கிறது. தமிழ் மின்னூல்களை நமது கைப்பேசியில் படிக்க பல நவீன கைஅடக்க கருவிகள்
சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாக கிண்டில், கோபோ, இ இங்கு, இ பப், மோபி இவை அத்தனையும் பிடிஎப் வடிவத்தில் நாம்
நினைக்கும் இடத்தில் அடிக்கோடுஇட்டு படிக்கவும் பயன்படுகின்றன.
பல்வேறு தமிழ் இணைய நாளிதழ்களும், இணைய
இதழ்களும் உடனுக்குடன் தகவலை தர செயலிகள் பல தரவிறக்கம் செய்து படித்தும்
மற்றவர்களுக்கு உடனுக்குடன் நமது தகவல்களைப் பிறருடன் பரிமாறிக் கொள்ள இணையத்தில்
பயன்படுகின்றது. அதுமட்டும்மல்லாது உலகப் புகழ்பெற்ற கூகிலில் தமிழுக்கான தனி
தட்டச்சு சுட்டி மற்றும் பல மென்பொருள்கள் தமிழை பல நாட்டுக்கும் கொண்டு போக
மிகவும் உதவியாக இருக்கும். இதனால் தமிழ் தட்டச்சு பற்றிய கவலைகள் இல்லை.
தமிழிணையம் மின்னூலகம் என்ற இணையதளம் அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய
காகிதச்சுவடிகள் கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வு ஆதாரங்கள் ஆகியன
இத்தளத்தில் உள்ளன. 11,250
அச்சு
நூல்கள், 6,213 பருவ
வெளியீடுகள், 21 சுவடுகள்
என தினமும் லட்சம் பார்வையாளர்களை கொண்ட தமிழக அரசின் தமிழ் இணையதளம். இது
மட்டுமல்ல தமிழ் இணையங்களினால் மிகப்பெரிய எடை அளவுள்ள காகிதங்களின்
பயன்படுத்துதல் தவிர்க்கப்படுகின்றன. அதன் மூலம் மரங்கள் அழிப்பில் இருந்து
தவிர்க்கப்படுகின்றன.
தமிழ்ச் சொற்களை அகர வரிசையில் தரும் மென்பொருட்கள்
இணையத்தில் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்கப் பல மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர்
சந்திப்புகள், வாசகர்
வட்டம் நடத்தப்படுகின்றன.
மதுரைத்திட்டம் என்னும் தளம் அரிய பல தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள்
எனத் தமிழில் மரபுச்செல்வங்களை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்துள்ளது. தமிழ் மரபுச்
செல்வங்களை வெவ்வேறு வடிவங்களில் தரும் வண்ணம் பல இணைய தளங்கள் தமிழ்ச்
செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன.
மத்திய அரசின் தேசிய மின் நூலகம் (National Digital Library of India) தளம்
2 கோடி
புத்தகங்களில் தமிழ் புத்தகங்கள் என தனி சுட்டிகளை வழங்கிவருகிறது. தமிழ் மின்னனு
புத்தகங்களுக்கேன பல சிறப்பு இணையதளங்கல் தமிழக அரசால் ஏற்படுத்தபட்டுள்ளன.
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக, அம்மா நூலகம் என்ற இணைய நூலகம் தொடங்கி, உலகில்
உள்ள அனைத்து செய்தித்தாள்களும் படிக்கும் வண்ணம் தமிழ் இணைய நாளேடுகள் நூலகம்
உருவாக்கப்பட்டு சிறப்பாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.
புத்தக அறிவில் ஒருவருக்கு எற்படும் அய்யங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள், போன்ற
வற்றிற்கான தீர்வுகளை இணையத்தின் வாயிலாக பெற இயலும். தீர்வுகளைப் பெற மின்னஞ்ல்
வாட்ஸப் சமூக ஊடகங்கள் வாயிலாக உதவுகின்றன. வீட்டிலுருந்தபடியே நேருக்கு நேர்
தொடர்பு கொண்டு கற்கும் வாய்ப்பும் உள்ளது. இன்று எத்தனையோ வெளிநாட்டின்வர்கள்
தங்களது கருத்துகளை தமிழில் உச்சரித்து அதை பதிந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை
நாம் பார்த்து வருகிறோம்.
அயல் நாட்டில் உள்ள தமிழர்கள் பொங்கல் விழா, கட்டுரைப்போட்டி, முத்தமிழ்
விழா, சங்கத்
தமிழ் விழா என கொண்டாடும் தமிழை மறவா மானத்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளதை நாம் இந்த தமிழ்
இணையத்தில்தான் பார்க்கிறோம். “நான் ஏன் தமிழை கற்க வேண்டும்?”
என்ற சீனப் பெண்ணின் பதிவுகள் உலக நாடுகளை தமிழின் பக்கம் ஈர்க்கும் அளவுக்கு,
இந்தத் தமிழ் இணையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
திருமூலர், வள்ளலார், அகத்தியர் என சித்தர்களின் சித்தமருத்துவ இலக்கியங்கள்
பல இன்று இணையத்தில் உலா வருகின்றன. புத்தகங்களை மேற்கோள்காட்டி யூடுயூபில்
கொடுக்கப்படும் குறிப்புகள் எல்லாம் தமிழ் இணையத்தைச்சாரும்.
மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் தொடங்கி - உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, கவிதை, பாடல், கடிதம், சுருக்கி
வரைதல், விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதி தேடல்
என – அனைத்து செயல்களிலும் இணையத்தின் வாயிலாக ஈடுபட முடியும். நமக்கு எதை பற்றி
வேண்டுமோ அதற்கான தளங்களில் நாம் அதை
எளிதில் கிடைக்கப்பெறலாம்.
பரந்து விரிந்த தமிழ் இணையமாக
முகப்புத்தகம், தரச்சுட்டிகள், வாட்ஸ் ஆப், லிங்கிடுஇன், யூடியுப், டிவிட்டர், இணையத்தமிழ் வானொலிகள், இணையத்தமிழ்
தொலைக் காட்சிகள், நேரடி
நிகழ்ச்சிகள், பட்டிமன்ற
விவாதங்கள் என பன்முக வளர்ச்சியோடு
வளர்ச்சியாக நமது தமிழ் இணையமும் வளர்வது மிகவும் போற்றுதலுக்கான முன்னேற்றமாக
கருதப்படுகிறது. பப்ஜியும் வீடியோ கேமும் விளையாடும் நம் இளைஞர்கள் இணையத்தில் நம்
தமிழை எப்படியும் படித்து விட்டுதான் செல்ல வேண்டும் எனற கட்டாயம் இன்றைய தமிழ்
இணையத்தில் உள்ளது.
இணைய வளர்ச்சியால் தமிழ் மொழிபெயர்ப்பு புதிய வேகம் பெற்றுள்ளது. தமிழ்க் கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. இன்றைய அனைத்து நிகழ்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி, வருங்காலத்தில் இன்னும் விரைவாக இருக்கும்.
Source:
drsenthilphd@gmail.com.
தமிழ் நூற்றொகை 2022 - தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா
நூலகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த...
- நூலகர் சி.சரவணன்
"தமிழகத்தில் பொது நூலகங்களின் செயல்பாடுகள் மோசம்" என்று ஒரு முன்னணி செய்தித்தாளில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது. இந்த செய்தி பல்வேறு நூலகர் குழுக்களில் பதிவு செய்யப்பட்டது.இந்தச்
செய்தித்தாள் செய்தி பற்றி என்னுடைய கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.
அண்ணா
நூற்றாண்டு நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய அன்றைய முதலமைச்சர் மு.
கருணாநிதி,
"நூலகத் துறையின்
செயல்பாடுகள் மன நிறைவாக இல்லை" என்று பேசினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நூலகத் துறை
நண்பர்கள் அந்த நிகழ்ச்சியை மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நூலகங்களின்
செயல்பாடுகளை விமர்சித்து,
பல ஆண்டுகளாக
பத்திரிகைகள் பலவும் எழுதி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பத்திரிகைச்
செய்தியையும் நான் பார்க்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக நூலகத்துறை கவனிப்பாரற்று இருந்தது
என்னவோ உண்மைதான். ஆனால்,
இந்த அரசு பொறுப்பேற்ற
பிறகு நூலகத் துறையின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நூலகத்துறை
இயக்குநர் பொறுப்புக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டது, இந்த அரசு நூலகத்துறை மீது காட்டும் அக்கறையையே காட்டுகிறது.
கடந்த நிதிநிலை
அறிக்கை கூட்டத்தொடரில்கூட, நூலகத் துறைக்கென்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அந்த அறிவிப்புகள் நூலகர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததோ இலையோ, பொதுமக்கள் / வாசகர்களுக்கு பெரிதும் பயன்படும்
அறிவிப்புகளாக இருந்தன.
பொது நூலக
இயக்குனராக திரு. க.இளம்பகவத், இ.ஆ.ப.
அவர்கள் பொறுப்பேற்ற பிறகு,
நூலகத் துறையில்
பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நூலக நிதி எந்தெந்த
வகையில் விரையம் ஆகிறது என்று கண்டுபிடித்து, அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிர்வாகம்
வெளிப்படையாக இருந்தால்தான் முறைகேடு நடக்க வாய்ப்பிருக்காது என்பதால், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை கொண்டு
வரப்பட்டுள்ளது. நூலகங்களுக்கு இதழ்கள், செய்தித்தாள்கள் வாங்குவதில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தரமான பத்திரிகைகள் கிராமபுற வாசகர்களையும் சென்றடைகின்றன.
பணி மாறுதல் / பதவி உயர்வு வழங்குதல்
போன்றவற்றில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதால், முறைகேடுகளுக்கும்
குற்றச்சாட்டுகளுக்கும்
இடமில்லாமல் இருக்கிறது. மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி, தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாசகர்கள் வாங்கிப்
படிக்க, வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
பொது நூலக
சட்டத்தை திருத்த உயர்மட்டக் குழு அமைத்து, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகள் கேட்டு, அதற்கேற்ப சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை
மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
மேலும், நூல்கள் கொள்முதல் இன்னும் தொடங்கப்பட வில்லை.
பத்திரிகைகள் கொள்முதலில் கொண்டுவரப்பட்ட நடைமுறைபோல், தரமான நூல்களை குறைந்த விலையில் கொள்முதல்
செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்று நம்புகிறோம். இவை போன்ற, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு
வருவதால் நூலகச் சேவை மேலும் மேம்படையும் என்பது உறுதி. நிலைமை இவ்வாறு இருக்க, நூலகங்களின் செயல்பாடுகள் மோசம் என்று சில
பத்திரிகைகள் எழுதுகின்றன. இருந்தாலும், பத்திரிகைகளின் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிவிட முடியாது. பொதுமக்கள் நூலகத்துறையில் இன்னும் நிறைய எதிர்பார்கிறார்கள்
என்றுதான் நாம் இந்த செய்தியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நூலகத்துறையில்
இன்றை பிரச்சினையே நூலகங்களில் கழிவறை இல்லாததும், சொந்த கட்டடம் இல்லாததும்தான். 10 - 15
ஆண்டுகளுக்கும் மேலாக
இயங்கி வரும் 70 - 80 சதவிகித ஊர்ப்புற நூலகங்களில் கழிவறை வசதி இல்லை.
50
ஆண்டுகளுக்கும் மேலாக
இயங்கி வரும் சில கிளை நூலகங்களுக்கு சொந்த கட்டிடமே இல்லை. வாடகை
கட்டடங்களில்தான் இயங்கி வருகின்றன.
இந்த
நிலைமை இத்தனை ஆண்டுகள் தொடர்வதற்கு என்ன காரணம்? நூலகத்துறை என்பது உற்பத்தித் துறை இல்லை. உற்பத்தித் துறையாக இருந்தால்
அரசாங்கம் முதலீடு செய்திருக்கும். இது சேவைத் துறை. மக்கள் செலுத்தும் நூலக வரி வருவாயிலிருந்துதான் இந்தத் துறை இயங்குகிறது.
நூலகங்களுக்கான
அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கம்தான் என்று பலரும்
நினைக்கிறார்கள். அரசாங்கம் என்றால் யார்? முதலமைச்சரும்,
கல்வி அமைச்சரும்
மட்டுமா? மாவட்ட நூலக அலுவலர்களும், நூலகர்களும் அரசாங்கத்தின் அங்கம்தானே?
இன்றைக்கு
நான் பணிபுரியும் நூலகக் கட்டடமும், நான் உட்கார்ந்து வேலை செய்யும் நாற்காலியும், எனக்கு முன்பு யாரோ ஒரு சிலர் எடுத்த முயற்சியால்
வந்தவை. தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கின்ற நான்காயிரத்துக்கும் மேற்பட்ட
நூலகங்கள் முகமறியாத பலர்,
பல்வேறு காலக்
கட்டங்களில் எடுத்த முயற்சிகளால் தொடங்கப்பட்டவை. அதனால், நூலகத்துறையை மேம்படுத்துவதில் நூலகச் சமூகத்திற்கு
பெரும் பங்கு உண்டு.
இன்றைக்கு
பெரும்பாலான நூலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. சில பாரம்பரியமிக்க கிளை
நூலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு காண
நூலகர்கள் பலரும் முயற்சி எடுத்திருக்கலாம். சில முயற்சிகள் பலன்
கொடுத்திருக்கும். சில முயற்சிகள் பலன் கொடுக்காமல் போயிருக்கும். யாரையும் குறை
சொல்ல முடியாது.
உயர்
அலுவலகங்களுக்கு நூலகர்கள் சென்றால் ஓரளவு மரியாதை இருக்கும். அதுவே மாவட்ட நூலக
அலுவலர் சென்றால் நல்ல மரியாதை இருக்கும். அதனால்தான் பல ஆண்டுகளாக நாம் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி
வருகிறோம்.
மாவட்ட
அளவில் மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் நூலக வளர்ச்சிக் குழுக்களை உருவாக்கி, அந்த குழு மூலம் சட்டமன்ற,
நாடாளுமன்ற
உறுப்பினர்கள்,
உள்ளாட்சி அமைப்பு
பிரதிநிதிகள்,
வட்டார வளர்ச்சி
அலுவலர்கள்,
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் என்று பல்வேறு அலுவலர்களை
தொடர்ந்து சந்தித்து வந்தால், எல்லா
நூலகங்களும் தன்னிறைவு பெற்ற நூலகங்களாக மாறி விடும்.
ஒரு
நூலகருக்கு சட்ட மன்ற உறுப்பினர் நன்கு அறிமுகமானவராக இருக்கலாம்; இன்னொரு நூலகருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நன்கு
தெரிந்தவராக இருக்கலாம்;
வேறு ஒரு நூலகருக்கு
மாவட்ட ஊராட்சி அலுவலர் நல்ல தொடர்பில் இருக்கலாம். இப்படி பல நூலகர்களின் பலவகை தொடர்புகள்
நூலகத் துறை வளர்ச்சிக்கு பயன்படும்.
தனி ஒரு நபராக செல்வதை விட, குழுவாக சென்றால் அதற்கு நல்ல மரியாதை கிடைக்கும். நூலகர்கள் குழுவாக செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.
கட்டுரையாளரை தொடர்புகொள்ள... மின்னஞ்சல்: saravanan.c.lib@gmai.com. Whatsapp:8668192839.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட, சட்ட மன்ற உறுப்பினர் விருப்ப நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு. |
பாரிவள்ளல் பற்றியும்,
பாரதியின் புலமையும் புரியும் பாரு!
பாரிமுனை வந்ததையும்
பாரி வள்ளல் பரம்பரையும்
பல நூலும் சொல்லும் பாரு!
பாண்டி நாட்டு தங்கமும்
பார்த்தசாரதி எண்ணமும்
பட்டுக்கோட்டை பாட்டும்,
பரபரப்பாய் இருக்கும் பாரு!
கல்கியின் கதைகளும்
புதுமைப்பித்தன் புனைவுகளும்
புத்தம் புதுசா இருக்கும் பாரு!
எண்ணங்களின் வண்ணமாய் எழுத்தில் சின்னமாய் மிளிரும் பாரு!
பாரு! பாரு! புத்தகத்தை படித்துப்பாரு!
நூலகமும் மாணவர்களும்
- சி. வெ. குமார், பெருமாள்தேவன்பட்டி, கமுதி,
இராமநாதபுரம் மாவட்டம்.
அறிவுச் சுரங்கமாகநூலகங்கள் இருக்க வேண்டும்.
- சி செல்வராஜ்
90% நூலகங்கள் சிறிய அளவிலான கட்டிடங்களில் நூல்கள் வைக்க இடமில்லாமல் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மைய நூலகங்களில் மட்டுமே போட்டித் தேர்வுக்கான வசதிகள் உள்ளதால், அங்கு மட்டுமே நூலக வளர்ச்சி சாத்தியப்படும். இன்றைய தலைமுறைக்கு கேட்ட உடன் கிடைக்கும் கூகுளுடன் நமது நூலகங்கள் எப்படி போட்டியிட முடியும் என்பதை ஆராய வேண்டும். நூலகர்களை நூலகங்களுக்குள் அடைத்து விட்டால் அனைத்து வாசகர்களும் நூலகத்தை நோக்கி வந்து விட மாட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நூலகர்களைப் பற்றிய ஊடங்கங்களின் பார்வை மாற வேண்டும்.
போட்டித் தேர்வுக்கான இடமாக மட்டுமல்லாமல், அனைத்து வகையான மக்களின் அறிவுச் சுரங்கமாக நூலகங்கள் இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.
- சி செல்வராஜ், மூன்றாம் நிலை நூலகர், கிளை நூலகம், அரசம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
சங்கரராமநல்லூர் கிளை நூலகத்தில்
நூலக வார விழா
சங்கரராமநல்லூர் கிளை நூலகத்தில் 55 வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.
நூலக வாரவிழா நிகழ்ச்சிக்கு நூலகர் கா.சக்திவேல் தலைமை வகித்தார். சங்கரமல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்பசாமி, துணைத் தலைவர் பிரேமலதா உத்தமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத் தலைவர் என். ராஜேந்திரன் வரவேற்றார். சங்கர ராமநல்லூர் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 50 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
சங்கராமநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமலதா புதிய நூல்கள் கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமலதா, பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்பசாமி துணைத்தலைவர் பிரேமலதா உத்தம ராஜ் பேரூராட்சி அலுவலக உதவியாளர் பார்வதி, தலா ரூ ஆயிரம் செலுத்தி நூலக புரவலர்களாக சேர்ந்தனர். மாணவர்கள் நூலகத்தில் நடைபெறும் போட்டி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து வாசிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து மாணவர்கள் வாசித்தனர். நூலக வார விழாவின் நிறைவில் நிறைவு நாளான வரும் 20ஆம் தேதி கட்டுரை ஓவியம் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. நிறைவாக நூலகப் பொருளாளர் அங்கமுத்து நன்றி கூறினார்.
55வது தேசிய நூலகம் வாரம் விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர், அண்ணா நகர் ஊர்ப்புற நூலகத்தில் 20-11-2022 அன்று ஓவியப் போட்டி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது. 55 ஆவது தேசிய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தினம் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சாலை குப்புசாமி ஓய்வு ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. அசனமா பேட்டை அக்னி சிறகுகள் லயன் சங்க தலைவர் தில்லை கார்த்தி மற்றும் ஆசிரியர் கு. தியாகராஜன் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை பெருங்கட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் அ. சரவணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக லயன் சங்க மாவட்ட தலைவர் ம. சிவானந்தம் குழந்தைகள் தினம் குறித்து பேசினார். குழந்தைகள் தினம் பண்டிதர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் என்றார். அவர் குழந்தைகள் மீது அளப்பரிய பாசத்துடன் பழகினார் என்றார். நிகழ்வில் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அசனமா பேட்டை அக்னிச் சிறகுகள் லயன்ஸ் சங்கத் தலைவர் தில்லை கார்த்தி சர்க்கரை நோய் விழிப்புனர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கினார். 55 ஆவது தேசிய நூலக வார விழா குறித்து நூலகர் ஜா. தமீம் கூறினார். |
தமிழ் மருத்துவ அறிவுரைப்பாமூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு சிறுசெருப்படையே தீப்புண்ணா குங்கிலியவெண்ணை சீழ்காதுக்கு நிலவேம்பு நாப்புண்ணிற்கு திரிபலாவேலன் நஞ்செதிர்க்க அவரிஎட்டி குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான் குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர் பெரும்பாட்டிற்கு அத்திநாவல் பெருவயிறுக்கு மூக்கிரட்டை கக்கலுக்கு எலுமிச்சைஏலம் கழிச்சலுக்கு தயிர்சுண்டை அக்கிக்கு வெண்பூசனை ஆண்மைக்கு பூனைக்காலி வெண்படைக்கு பூவரசு கார்போகி விதைநோயா கழற்சிவிதை புண்படைக்கு புங்கன்சீமையகத்தி புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல் கரும்படை வெட்பாலைசிரட்டை கால்சொறிக்கு வெங்காரபனிநீர் கானாகடிக்கு குப்பைமேனி உப்பே உடல்பெருக்க உளுந்துஎள்ளு உளம்மயக்க கஞ்சாகள்ளு உடல்இளைக்க தேன்கொள்ளு உடல் மறக்க இலங்கநெய்யே அருந்தமிழர் வாழ்வியலில் அன்றாடம் சிறுபிணிக்கு அருமருந்தாய் வழங்கியதை அறிந்தவரை உரைத்தேனே!! அன்புடன் சீ. முனிரத்தினம், மூன்றாம் நிலை நூலகர், கிளை நூலகம, இலக்கியம் பட்டி. (இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.)
|
அருமை
ReplyDeleteதங்களின் மின்னிதழ் தனித்தன்மை நன்று.
Deleteநூலகர் களின் ஆதரவும் ஆவலும் மென்மேலும் கிடைக்கப் பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்
சீ. முனிரத்தினம் மூன்றாம் நிலை நூலகர் கிளை நூலகம் இலக்கியம் பட்டி
சிறப்பு
ReplyDeleteCongratulation
ReplyDeleteCongratulation
ReplyDeleteமேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் அருமை நூலகர்களின் எண்ணங்கள் கருத்துக்கள் கோரிக்கைகள் படைப்புகள் நூலக செய்திகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள மிகவும் பயனாக இருக்கும் நான் பாஸ்கர் ஊர் புற நூலகர் மாவுத்தன் பட்டி திண்டுக்கல் மாவட்டம்
ReplyDeleteபாராட்டுகளும்
ReplyDeleteவாழ்த்துகளும்
மின் இதழ் அருமை சார் இதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி நூலகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை நாங்களும் அனுப்புகிறோம் இந்த இதழில் செய்தி வெளியிட்டதற்கு நன்றி.ம.அகிலன்முத்துகுமார் திருநெல்வேலி சந்திப்பு கிளை நூலகர்
ReplyDeleteSuper Initiation congrats by Kumanan
ReplyDeleteLibrarian
அருமையான முயற்சி ஐயா. நூலகத்தின் பயன்பாட்டை மேம்பாடுத்தவும் நூலகர்களின் நிலையை மேம்படுத்தவும் வாசகர்களை ஈர்க்க நல்ல முயற்சி
ReplyDeleteBest wishes sir
ReplyDeleteBest wishes sir
ReplyDeleteMy best wishes
ReplyDeleteநூலகர் செய்தி மின்னிதழ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஅருமையான முயற்சி வாழ்த்துக்கள் 💐
ReplyDeleteஅருமையான முயற்சி வாழ்த்துக்கள் 💐
ReplyDelete