நூலகர் செய்தி மடல் 2

ஆசிரியர் உரை: 

  நூலகர் செய்தி மடல் மின்னிதழ் வெளிவந்த முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதழைப் படித்திருப்பது, இந்த இதழுக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது. இந்த மின்னிதழுக்கு இவ்வளவு வரவேற்பு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    இந்த இதழை PDF வடிவில்தான் வெளியிடுவது என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. அந்த வடிவில் படிப்பது சிரமமாக இருக்கும் என்றும், அந்த பிடிஎப் வடிவ கோப்புகளைச் சேமித்து வைப்பதும் சிரமமாக  இருக்கும் என்பதால், இணைய வழியில் இதழை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
    அச்சு வடிவில் இதழை வெளியிட்டால் இவ்வளவு விரைவாக, இதனை நூலகர்களுக்குக் கொண்டு சேர்க்க இயலாது. வாசகர்களுக்கு இணைய வழியில் இதழைக் கொண்டு சேர்ப்பது எளிதாகவும், படிப்பவர்களுக்குச் செலவில்லாமலும் இருக்கிறது.
    மின்னிதழின் மேலுமொரு சிறப்பு என்னவென்றால், இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைத் தலைப்பை உலகில் உள்ள எந்த நாட்டவர் கூகுளில் தேடினாலும், இந்த கட்டுரை தேடுபவர் பார்வைக்குப் போகும்.  ஆக, இணைய வழியில் இதழ் வெளியிடுவதால், இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை வெளிநாட்டவர்களும் படித்துப் பயனடைய முடியும்.
     இந்த இதழ் பற்றித் தெரியாதவர்களுக்கு நூலக நண்பர்கள் அறிமுகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    இந்த இதழுக்குச் செய்திகள் அனுப்பிய நூலக நண்பர்களுக்கு நன்றி. தொடர்ந்து செய்திகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    இந்த இதழைப் படிக்க லிங்க் தேவையில்லை. கூகுள் குரோமில் நூலகர் செய்தி மடல் என்று டைப் செய்தால் போதும்; நூலகர் செய்தி மடல் பார்வைக்கு வரும். அதைச் சொடுக்கி இதழைப் படிக்கலாம்.
    இதழ் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.  இதழில் புதிய பகுதிகள் சேர்ப்பதற்கான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
    இந்த இதழில் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் நூலக நண்பர்கள் திட்டம்,  நூலக வாழ்வியல் -  ஓர் ஒப்பீடு என்னும் தலைப்புகளில் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளில் நூலகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன. அதனால், இந்தக் கட்டுரைகளைப் பொறுமையாகப் படித்து தகவல்களைத் தெரிந்து கொள்ளுமாறு நூலக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
    இந்த இதழில் வெளிவரும் கட்டுரைகளை பிழை திருத்தி, செம்மையாக்கிக் கொடுக்கும் சொல்லாக்கப் புலவர் நெடுமிடல் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    வழக்கம்போல் நூலகர்கள் இதழுக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

- சி. சரவணன், ஆசிரியர், 
நூலகர் செய்தி மடல்.

    நூல்கள் வாசிப்பது என்பதில் நூலகத்தின் பங்கை மறுக்க முடியாது; மறக்க முடியாது. நூலகத்தில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் புதிய தேவைகளையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நம் நாட்டில் கிராமம் முதல் நகர்ப்புறங்களிலும் நூலகங்கள் இருக்கின்றன. . ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன தேசிய நூலகம், பொது நூலகங்களும், நடமாடும் நூலகங்களும் இருப்பினும் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
    அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் நூலகத்தில் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும்.  நமது மொழி வளத்தைப் பெருக்குவதிலும் வாசிப்பைச் சரளமாக்குவதிலும் நூலகம் முக்கிய பங்கை வகிக்கிறது.
    “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே. தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.  மாணவர்களாகிய ஒவ்வொருவரும் நூலகம் தரும் பயன் அறிந்து, அங்குச் சென்று நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
    படிப்பில் ஆழ்ந்த படிப்பு, அகன்ற படிப்பு, என இருவகை உண்டு. பொதுத் தேர்வுக்குப் படிப்பதை ஆழ்ந்த படிப்பு; என்றும் போட்டித் தேர்வுக்குப் படிப்பதை அகன்ற படிப்பு என்றும் கொள்ளலாம். அதே போல சீரிய படிப்பும் உண்டு. பொழுது போக்குக்காகப் படிப்போரும் உண்டு.
    ஒரு மாணவன் நூலகம் சென்று பாட நூல்களோடு நூலக நூல்கள், மாத இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவற்றைப் படித்து வந்தால், நிச்சயம் அவன், பல்துறை அறிவுடைய சிறந்த மாணவனாக வருவான்.
    வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழக்கூடிய ஒன்று. ஒரு பயிர் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்தால் மட்டுமே அது நல்ல முறையில் வளர்ந்து பலன் கொடுக்கும். அதுபோல மாணவர்களின் மொத்த வளர்ச்சியும் சீராக அமைந்து உரியப் பலன் கிடைக்க நூல்களைப் படிப்பதை அன்றாடப் பணிகளில் ஒன்றாகக் கருத வேண்டும்.
    நூலகங்களைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நூலக புத்தங்களில் குறிப்புகள் எழுதுவதோ தாள்களை மடிப்பதோ,  கிழிப்பதோ,  எச்சில்தொட்டு புரட்டுவதோ கூடாது. ஒரு மலரைக் கையாள்வதுபோல் நூலக நூல்கள் ஒவ்வொன்றையும் மென்மையாகக் கையாள வேண்டும்.
    பெரும்பாலும் உயர் பட்டம் பெறுவதற்காகவும் சமுதாயத்துக்கு உபயோகமான பல அறிவுசார்ந்த கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதற்கான தளமாகவும் ஆராய்ச்சிகள் அமைகின்றன. அந்த ஆராய்ச்சிகளின் ஆக்கப்பூர்வமான மையங்களாக நவீன  நூலகங்கள் கருதப்படுகின்றன.
    ஆராய்ச்சி என்பது புதிய உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கான பழைய அறிவைத் தோண்டி எடுப்பதாகும். ஏற்கெனவே வெளிவந்த முடிவுகள்,  தற்போதைய தேடல். அதாவது, புதிய கண்டுபிடிப்புகளுக்கான கலவையாகும். ஆராய்ச்சிகளுக்கு நூலகங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன
    ஆய்வு மேற்கொள்ள - முதன்மைச்  சான்றுகள், துணைமைச் சான்றுகள், தரவுகள், ஆய்வு மூலங்கள், புள்ளிவிவரங்கள் சேகரித்தல் போன்றவை - விரிவடைந்துள்ளன. இத்தகு சூழலில் போதிய நூலக வசதியின்மை, நூலகம் பற்றிய அறியாமை காரணமாக ஆய்வாளர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் அல்லல்படும் நிலையைக் காண முடிகிறது.
    மெரியம்-வெப்ஸ்டர் அமெரிக்க அகராதி "ஆராய்ச்சி" என்ற வார்த்தைக்கு விடாமுயற்சியுடன் தேடுதல், நோக்கங்கள், சேகரித்தல், சோதனைகள், கண்டுபிடிப்புகள், கண்டுபிடிப்புகளுக்கான கோட்பாடுகள் நடைமுறைபடுத்துதல், திருத்தப்பட்ட கோட்பாடுகள் என பல்வேறு வகையான விளக்கங்களை கூறுகின்றது. ஆராய்ச்சியாளார்களின் பயணத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது சில விளக்கத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.
    ஆராய்ச்சியாளார்களின் தேடல்களை மிக எளிதாக்கி, ஆராய்ச்சியாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை அமைத்து தருவது நூலகர்களின் முதன்மை சேவையாகும்.  இன்றைய நாட்களில் பல காரணங்களுக்காக ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். கல்வி சார்ந்த ஆராய்ச்சி மட்டுமல்லாது, ஒன்றை வெளிக்கொணர்தல், புதிய உண்மையை உலகுக்கு உணர்த்துவது என ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.
    பிரச்னைகளுக்கான தீர்வைக் கண்டுபிடிப்பதே ஆராய்ச்சியின் முதன்மை லட்சியமாகும். இந்தச் சூழ்நிலையில் ஆய்வாளர்களின் ஆர்வத்தைப் நிறைவுபடுத்துவதே நூலகரின் சாதனையாகும். அந்தச்  சாதனையோடு - விரும்பிய எண்ணங்களை இணைக்கும்போது - அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எந்தவொரு கல்வி நூலகங்களிலும் ஆராய்ச்சிக்கான ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கிறது. நூலகர்களை தகவல் வல்லூநர்கள் என்றும் அழைக்க முடியும்.
     நூலகங்களுக்கான ஜந்து விதிகளை நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன்  ஏற்படுத்தியுள்ளார்.
1. நூல்கள் பயன்பாட்டுக்கானவை.
2. ஒவ்வொரு வாசகருக்கும் அவரது நூல் உண்டு.
3. ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர் உள்ளார்.
4. வாசகருடைய நேரத்தைச் சேமிக்க வேண்டும்.
5. நூலகம் ஒரு வளரும் உயிர் நிறுவனம்.
    இந்த ஐந்து விதிகளும் ஒவ்வொரு நூலகருக்கும் தெரியும். அதற்கு ஏற்ப இன்றளவும் நூலகர்கள் செயல்படுகின்றனர்.
    முனைவர் படிப்பு முடித்த ஒருவர்,  எந்த ஒரு கண்டுபிடிப்பு முடித்தவர் நூலகர்களைச் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டார். அவர் சந்தித்த நூலகர்கள் அனைவரும் தகவல் களஞ்சியமாக உள்ளனர் என்பதை அவர் உணர்வார்.
    எந்த ஒரு ஆராய்ச்சியாளரும், தனக்குத் தேவையான ஒவ்வொரு தகவலையும், முதலில் டிஜிட்டல் வடிவில் தேட ஆரம்பிப்பார். அது ஏற்கெனவே வெளிவந்திருந்தால் அதற்கு அடுத்தபடியாக நூலகரைச்  சந்திப்பார்.  முதலில் அந்த ஆராய்ச்சி ஏற்கெனவே வந்துள்ளதா என  நூலகர் சோதிப்பார். அப்படி வெளிவந்துள்ள நிலையில், அந்த ஆராய்ச்சியை எத்தனை பேர் எந்த முறையில் எப்படி முடித்தார்கள் என்னும் தகவல் அனைத்தையும் கொடுப்பார். அதற்குரிய சில தளங்கள் உதவியுடன், விரிவான அலசலுடன், ஆராய்ச்சியாளருக்குக் கொடுத்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவரித்துக் கொடுப்பார். ஆராய்ச்சியாளர் அவரின் படிப்பை முடிக்கும் வரை நூலகர் கூடவே பயணம் செய்வார்.
    புத்தகங்களைத் தேடி எடுக்கும் முயற்சியில் - மிக மிக எளிமையான முறையில் - இலகுவாக எடுப்பதற்கு நூலகத் தந்தை வகுத்த கோலன் பகுப்பு (கிளாசிபிகேஷன்) முறையை நூலகர்கள் பின்பற்றி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு புத்தகத்தின் பெயர்  "1990-இல் இந்தியப் பங்குச் சந்தை" என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புத்தகத்தை இந்தியா என்ற பகுதியில் வைத்து வந்தார்கள். ஆனால், கோலன் பகுப்பு முறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் "இந்தியப் பங்குச் சந்தை 1990" என்னும் தலைப்பை மிக எளிதாக பயன்படுத்த முடிகிறது.
     சில புத்தகங்கள் கிடைக்கவே கிடைக்காது என சில ஆய்வாளர்கள் கூறி இருந்தால் அவர்கள் இது வரை நூலகர்களைச் சந்தித்தது இல்லை என்று கூறலாம். இந்திய நூலகர்கள் யாரையும் பார்த்திருக்க மாட்டார்கள்.
    ஆனால், இவர்கள் அனைவரும், தங்கள் பணியிடங்களில் உள்ள நூல்களின் பட்டியலில் இந்திய அளவிலான வலைப் பின்னலில் - தங்கள் நூல்கள் அனைத்தையும் இணைத்திருப்பர். இந்த அலுவலகம் புது தில்லியில் அமையப் பெற்றது. நூலகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களைக் கேட்டு ஆராய்ச்சியாளருக்குத் தேவையான நகல்களைச் சிறு தொகைக்கு வாங்கித் தருவார். அதுமட்டுமல்ல, ஆராய்ச்சியாளருக்குத் தேவையான அனைத்து ஆய்விதழும் (வெளிநாட்டு ஆய்வுக் கட்டுரைகள்) நகல் எடுக்கும் செலவில் உங்களுக்குப் பெற்றுத் தருவார்.
    இந்த ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் தனியாக வாங்க வேண்டும் என்றால், அதிக தொகையைச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.  நூலகர்கள் அதற்குரிய சில எளிமையான வழிகளில் உங்களுக்குக் குறைந்த செலவில் செய்து தருவார். காஷ்மீரில் உள்ள நூலகர் ஒருவர் கன்னியாகுமரி நூலகருடன் தொடர்பு கொண்டு அவசரத் தேவைக்கு ஏதேனும் தகவல் கேட்டால், கன்னியாகுமரியில் உள்ள நூலகர் உதவி செய்வார்.
     அப்படிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் ஒவ்வொரு நூலகருக்கும் இருக்கும். நூலகங்களுக்கு இணையம் எந்த அளவுக்கு உதவுகிறது? என்னும் பாடம் நூலகர் படிப்பில் இருப்பதால், அவர்களுக்கு இணையத்தில் உள்ள அனைத்து வழிமுறைகளும் மிக எளிதாகத் தெரியும்.
    ஒரு புத்தகம் தேவையா? அதை எப்படி வாங்குவது? எப்படிப் பயன்படுத்துவது? யாருக்குப் பயன்படும்? எப்படிப் பயன்படுத்த வைக்கலாம்? புத்தகத்தின் பயன்கள் என, அறிவுசார் மதிப்பீட்டில் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து ஆராய்ச்சியாளருக்கு உதவும் வகையில் அவற்றை உபயோகம் உள்ளதாக இணையப் பகுதிகளை அமைப்பர்.
    மிக அதிகம் தேவையான இ புத்தகத்தை வாங்கி, ஒவ்வொரு நூலகத்திலும் கணினி உதவிக் கொண்டு அதை வகைப்படுத்தி மிகக் குறைந்த கட்டணத்தில் பயனாளிகளுக்குக் கொடுப்பர்.  மேலை நாடுகளில் நூலகங்கள் இரவு, பகலாக 24மணிநேரமும் செயல்படுகின்றன. இந்திய ஆராய்ச்சியாளர் உள்பட அனைவருக்கும் தேவைப்படும் தகவலை ”ஆஸ்க் ஏ லைப்ரரியன்” என்ற தலைப்பில் இன்றளவும்  தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
     சில நூலகங்கள் இரண்டு கிலோமீட்டர் அளவு தொலைவில் உள்ளன.  போட்டித் தேர்வு பற்றிய குறிப்புகள், இணையத்தில் புத்தக முன்பதிவு, நூலகங்களுக்கு இடையே புத்தகப் பரிமாற்றம், கணினி - இணையம் மூலம் கற்றல், ஒலி - ஒளியில் பாடங்களின் பதிவு, புத்தகங்கள் ஆய்விதழ் போன்றவற்றுக்கு நிரந்தர எண் வாங்கிக் கொடுத்தல் போன்றவை அனைத்தும் நூலகர்களுக்குப் பாடமாகச் சொல்லப்பட்டுள்ளது.
    இன்றளவும் பல கிராமத்து நூலகங்கள் இயங்குவதற்குப் புரவலர் என்று சொல்லக்கூடியவர்களிடம் நூலகர்கள் வாங்கிய நன்கொடைகள்தான் காரணம். அழியக்கூடிய பல புத்தகங்களை அழியாவண்ணம் நூலகர்கள் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  நவீன தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள திறன்களை தங்களது பாரம்பரிய திறன்களைத் தாண்டி நூலகர்கள் பின்பற்றுகின்றனர்.
    இந்த நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம், ஆராய்ச்சியாளர்களின் தேவைகளை நூலகர்கள் நிறைவு செய்து வருகின்றனர். நூலக கலாச்சாரத்தை ஊக்குவிக்க, புதிய நூல்கள் வாங்குவது, பழைய நூல்களைப் புதுப்பிப்பது, ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்துவது, என நூலகர்களின் கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றுவது இந்திய ஆராய்ச்சியை அடுத்தகட்டத்துக்கு வழிநடத்திச் செல்லும். இந்திய மின் நூலக தளம், அரசாங்க மின் நூலக தளங்கள், மற்ற கல்லூரி இணைய நூலகங்கள் எத்தத்தனைத்தான் இருந்தாலும், நம் கைகளால் புத்தகத்தைப் புரட்டுவது தாயின் மடியில் குழந்தை தவளுவது போல அமையும்.




அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் 
நூலக நண்பர்கள் திட்டம்
நூலகர்  சி. சரவணன், 
ஆசிரியர்நூலகர் செய்தி மடல்.

கடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் தமிழக அரசு நூலக நண்பர்கள் திட்டம் என்னும் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்  வழிமுறைகளை நூலகத் துறை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டம் பற்றி நூலகர்களிடையே பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.

திட்டத்தின் நோக்கம்:

 சமூகத்தில் அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலகச் சேவையை வழங்குவது - மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியன பொது நூலகத்துறையின் குறிக்கோள்களாகும்.

சமூக பங்களிப்புடன் நூலகச் சேவையை விரிவாக்கம் செய்வதுதான் நூலக நண்பர்கள் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

நூலகத்திற்கு நேரடியாக வர இயலாத வாசகர்களுக்கு, தன்னார்வலர்கள் வழியாக நூலக நூல்கள் வழங்குவது இந்தத் திட்டத்தின் செயல்முறை ஆகும்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறை:

முதலில் தன்னார்வலர்களை நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட வேண்டும். காப்புத் தொகை, ஆண்டு சந்தா இவர்களுக்கு வசூலிக்கத் தேவையில்லை.

தங்கள் பகுதியில் உள்ள புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களை நூலக உறுப்பினர்களாகத் தன்னார்வலர்கள் சேர்ப்பர். ஒருமுறைக்குக் குறைந்தது 25 புத்தகங்கள் வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதால், ஒரு தன்னார்வலர் குறைந்தது 25 வாசகர்களையாவது நூலக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

தன்னார்வலர்கள், மாதத்திற்கு இரண்டு முறை நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துச் சென்று உறுப்பினர்களுக்கு வழங்கி, அவர்கள் படித்த பிறகு திரும்பப் பெறுவர்.

தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டையும், புத்தகங்கள் எடுத்துச் செல்வதற்கு பை ஒன்றும் நூலகத் துறை சார்பாக வழங்கப்படும்.

சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 500 ரூபாய் மதிப்புக்கு மிகாமல் பரிசுகள் வழங்கப்படும்.

தன்னார்வலர்களுக்குப் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக ஒரு பதிவேடு நூலகரால் நூலகத்தில் பராமரிக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு புத்தகங்கள் இரவல் வழங்குவது தொடர்பாக ஒரு பதிவேடு தன்னார்வலரால் பராமரிக்கப்படும்.

கைப்பேசி செயலி:

இந்தத் திட்டத்திற்கு என்று புதிதாக ஒரு கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கைப்பேசி செயலி உருவாக்கம் செய்து, பயன்பாட்டுக்கு வந்த பிறகு, தன்னார்வலர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட நூல்கள் பற்றிய விவரத்தை நூலகர்கள் கைப்பேசி செயலியில் பதிவு செய்வர். உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நூல்கள் விவரத்தைத் தன்னார்வலர்கள் உடனுக்குடன் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்வர்.

இதன் மூலம் இந்தத் திட்டம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்று பொதுநூலகத் துறை இயக்குநர் அவர்கள் எளிதாகக் கண்காணிக்க முடியும்.   இந்த திட்டத்தில் எந்த குளறுபடியும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

இருந்தாலும், இந்தத் திட்டம் தொடர்பாக நூலகர்கள் பலரும் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். “தன்னார்வலர்கள் எடுத்துச் சென்று புதிய உறுப்பினர்களுக்குக் கொடுக்கும் புத்தகங்கள் திரும்பி வரவில்லை என்றால், அதற்கான நூல் இழப்புத் தொகை நூலகர்கள்தானே கட்ட வேண்டும்?” என்று கேட்கின்றனர்.

இதற்கான பதில் என்னவென்றால், “நம் நூலகத்தில் இருக்கும் புத்தகத்தை எடுத்துச் சென்ற வாசகர் ஒருவர், புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அந்த புத்தகத்தை நாம் எந்த கணக்கில் வைத்து இருப்பு நீக்கம் செய்வோமோ அதே போலத்தான், தன்னார்வலர்கள் எடுத்துச் சென்று, திரும்பப்பெறாத புத்தகங்களையும் இருப்பு நீக்கம் செய்யலாம்.

அதாவது, அந்த உறுப்பினர் எடுத்துச் சென்ற புத்தகம் பற்றிய விவரத்தைக் காலக் கடப்பு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவு செய்து, அவருக்கு மூன்று நினைவூட்டல் கடிதங்கள் அனுப்ப வேண்டும். அப்படியும், புத்தகம் திரும்பப்படவில்லை என்றால், அவருடைய காப்பு தொகையை ஈடு செய்து, உறுப்பினர் நீக்கம் செய்வதுடன், நூல் இருப்பு நீக்கம் செய்யலாம். இது ஏற்கனவே இருக்கும் நடைமுறைதான். இதனால், நூலகர்கள் அச்சப்படத் தேவையில்லை.

தன்னார்வலர்கள் ரசீது போடுவதைத் தவிர்த்து, அவர்கள் வசம் உறுப்பினர் சேர்க்கைப் படிவம் கொடுத்து, அவர்கள் வாங்கி வரும் தொகைக்கு நூலகர் ரசீது போட்டுக் கொடுப்பதுதான் நூலகர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். 

மேலோட்டமாகப் பார்த்தல் இந்தத் திட்டம் நூலகர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையாகத் தெரிகிறது.  ஆனால், சமூகக் கண்ணோட்டத்தில் பார்த்தல், இந்தத் திட்டம் ஒரு சிறந்த திட்டம்தான். ஏனென்றால், கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நூலகப் பயன்பாடு பெருமளவில் குறைந்து விட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மீண்டும் பழைய நிலைக்கு, அல்லது அதைவிடக் கூடுதலான பயன்பாட்டுக்கு நூலகங்களைக் கொண்டு வரவேண்டுமானால், இவை போன்ற திட்டங்கள் அவசியம்.  இந்தத் திட்டம் மூலம் நூலகச் சேவை விரிவடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நூலகர்கள் முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டால் மட்டுமே  இத்திட்டம் முழு வெற்றி அடையும். அதற்கு மாவட்ட நூலக அலுவலர்கள் நூலகர்களுக்கு  ஊக்கம் அளிக்கும் வகையில் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தித் தக்க ஆலோசனைகள் வழங்கலாம்.

புத்தகங்கள் கேட்டு நூலகங்களுக்கு வரும் வாசகர்களுக்குப்  புத்தகங்கள் கொடுப்பவர்களாக மட்டும் நூலகர்கள் இல்லாமல், உரியப் பயனாளர்களைத் தேடி புத்தகம் வழங்கும் வகையில் படிப்பறிவிக்கும் இறைவர்களாகச் செயல்பட்டால் நூலகர்களின் அந்தஸ்து மேலும் உயரும்.  

இந்த சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக உருவாக்குவதில் எழுத்தறிவிக்கும் இறைவர்களுக்கு (ஆசிரியர்களுக்கு) இணையானவர்கள் நூலகர்கள்.

ஆக, இந்த சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக உருவாக்கும் பணியில் தங்களை மேலும் அர்ப்பணித்துக் கொள்ள இருக்கும் நூலகர்களைப்  பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!

LIBRARY SCIENCE

1. National Science Library of India is situated in
a) JNU, New Delhi     b) National Library, Calcutta
c) National Reference Library, Calcutta   d) Delhi University, Delhi

2. Central Reference Library is situated in
a) Delhi    b) Kanpur    c) Lucknow     d) Calcutta

3. Which is not the non-depositary library
a) Delhi Public Library   b) Asiatic Society Library, Bombay
c) British Council Library, Calcutta  d) Connemara Public Library, Madras

4. What type of Khudabaksha  Oriental Library  is
a) National library          b) District Library    
c) Public library             d) Academic library

5. Where is Khudabaksha Oriental Library situated                 
a)   Calcutta    b) Bombay     c) Patna     d)   Madras   

6. In which year Raja Ram Mohan Roy Library Foundation was set up
a) 1970       b) l972     c)1979    d) 1980

7. Raja Ram  Mohan  Roy Library  Foundation  is mainly concerned with the improvement of 
a) Public libraries    b) Academic libraries
c) Government   libraries      d) Special libraries

8. Which is the largest University Library in the World
 a) Hardware University Library, USA     b) New York University Library, USA
c) Delhi University Library, India      d) Madras University Library, Madras

9. Primary sources are those which have
a) Abstract of the research b)0riginal. reports of research
c) Information regarding all     d) Bibliography of bibliography

10. Staff Exchange is a part of
a) Resource sharing                b) Cooperative Cataloging             
c) Personal Management        d) Inter-Library Loan
 

            Ans. 1. (a)   2. (d)  3. (c) 4. (c) 5. (c) 6. (b) 7. (a)   8. (a) 9. (d)  10. (a)

-    S. POYEL SELVI., Librarian, Department of Public Libraries, Tirunelveli 

MALA AWARDS 2022 RECEIVED FROM HIGHER EDUCATION MINISTER OF TAMILNADU DR. K. PONMUDI IN TAMIL NADU PHYSICAL EDUCATION SPORTS UNIVERSITY ON 12.08.2022   - Kumanan, Medical College Librarian, Mahatma Gandhi Medical College and Research Institute, Pondicherry.

"குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட: Click Here "

 https://sites.google.com/view/branchlibrarykadathur/home?authuser=0#:~:text=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%3A%20Click%20Here%C2%A0

கடலூர் மாவட்டம்விருத்தாச்சலம் முழுநேர கிளை நூலகத்தில்  26/11/2022 நூலக வளர்ச்சிக் குழு மற்றும் வாசகர் வட்டக் கூட்டம் நூலகர்/ செயலாளர் திரு இர.கொளஞ்சிநாதன் வரவேற்பில் நடைபெற்றது. இதில் வாசகர்கள் முன்னிலையில் ஒருமனதாக நூலக வளர்ச்சிக் குழு மற்றும் வாசகர் வட்டத் தலைவராக திரு அரிமா. ஜெ.சந்திரசேகர் அவர்களும். துணைத் தலைவராக இளவேனில் பதிப்பக நிறுவனர் முனைவர் திரு. இரத்தின புகழேந்தி அவர்களும்பொருளாலராக ஏ.கே.சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் திரு.சு.அகிலன் அவர்களும் .தமிழ் இலக்கிய எழுத்தாளரும் தமிழ்ப் பல்லவி நூல் வெளியீட்டாளர் திரு.பல்லவிகுமார் நூலக வளர்ச்சிக் குழு ஆலோசகராகவும் வழக்கறிஞர்.திரு அ.வடிவேல் முருகன் துணைச் செயலாளராகவும் கெளரவத் தலைவராக திரு.எம்.முருகன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  மேற்கண்ட நிர்வாகிகள் பணிசிறக்க வாழ்த்துகிறேன். - இரா.கொளஞ்சிநாதன் நூலகர்.

நூலகர் செய்தி மடல்  
மின்னிதழ் தொடக்க விழா

தருமபுரி மாவட்டம் கடத்தூர் முத்துலட்சுமி சரவணன் வளாகத்தில் இன்று (1.12.2022) வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நூலகர் தீ. சண்முகம் தலைமை வகித்தார். கடத்தூர் கிளை நூலக நூலகரும், மின்னிதழ் ஆசிரியருமான நூலகர் சி. சரவணன் வரவேற்புரை வழங்கினார். கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் முனைவர் பி. செந்தில் மின்னிதழை தொடங்கி வைத்து பேசும்போது, பொது நூலகத் துறையில் பணிபுரியும் நூலகர்களுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் இந்த மின்னிதழ் பயனுள்ளதாக இருக்கும் என்றார். நூலகர்கள் எம். குமரன், சி. சரவணகுமார், கி.தங்கம்மாள், கே. சிவகாமி உள்ளிட்ட நூலகர்கள் வாழ்த்திப் பேசினர். முடிவில் நூலகர் எம். ஜாகிர் உசேன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட நூலகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படித்ததில் பிடித்தது...
நல்ல புத்தகமாக எடுத்துக் கொடுங்கள்!
 நூலகர் பணி சிறந்த பணி. பலருடைய அறிவும் ஆற்றலும் மேம்பட எதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறோம் என்கின்ற மன நிறைவு. நிறையப் புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
    இன்றைய காலகட்டத்தில் அரசு ஊழியர் பணி என்பது பெரும் சவாலாக இருக்கிறது. அலுவலகத்திற்கு வருபவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அரசு ஊழியருக்கு என்றைக்கு என்ன பிரச்சினை வரும்என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள்  அலுவலகத்தில் நடைபெறும் சம்பவங்கள் ஏதுவாக இருந்தாலும்அவற்றை எளிதாகக் கடந்து விடுவது நல்லது. இல்லையென்றால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.  நூலகர்களின் நிலையும் அப்படியே.
    நூலக அனுபவங்களை நகைச்சுவையோடு கடந்து விட வேண்டும் என்பதுஎனக்கு அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடம். சில சுவையான நூலக நிகழ்வுகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   
  நான் கடலூர் மாவட்டம் புவனகிரி நூலகத்தில் பணிபுரிந்தபோதுசில கதைப் புத்தகங்களின் இறுதிப்பகுதியில் குறிப்புகள் எழுதப்பட்டு இருந்தை எதேச்சையாகப் பார்த்தேன். பிறகுகதைப் புத்தகங்களை எல்லாம் எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். 90 சதவிகித கதை புத்தகங்களில் எதாவது எழுதப்பட்டிருந்ததைக் கண்டு வியந்தேன்.
    சில புத்தகங்களில் வாசகர்கள் தாங்கள் படித்த புத்தகம் என்பதற்கு அடையாளமாக ஏதாவது ஒரு பக்கத்தில்ஏதாவது ஒரு அடையாளத்தை வைத்துவிடுவது உண்டு.
    பெரும்பாலான கதைப் புத்தகங்களில் வாசகர்கள் அந்த கதையைப் பற்றி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்கள். அவற்றில் சில:
    ஒரு புத்தகத்தின் இறுதியில் வாசகர் ஒருவர் நன்று என்று எழுதியிருந்தார். அதன் அடியில் மற்றொரு வாசகர் போர்போர் என்று எழுதியிருந்தார். வேறு ஒரு வாசகர் சிறப்பு என்று எழுதி இருந்தார். இன்னொரு வாசகர் அறுவை என்று எழுதியிருந்தார். மற்றொருவர் மிகச் சிறப்பு என்று எழுதி இருப்பார். ஒரே புத்தகம்ஆனால்வாசகர்களின் பார்வை வேறு வேறாக இருப்பதைப் பார்த்து வியந்தேன்.
    ஒரு புத்தகத்தில் supper என்று ஒருவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்தார். அதன் அடியில் இன்னொருவர் “supper இல்லையடா, super என்று எழுது; supper என்றால் இரவு உணவு” என்று எழுதி இருந்தார். எதோஒரு எழுத்துப் பிழைஅதற்கு இப்படியா எழுதுவது?
    நூலகத்தில் புதியதாகச் சேரும் உறுப்பினர்கள்எந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்வது என்று திகைப்பது உண்டு. காரணம், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களில் எந்த புத்தகத்தை எடுப்பது என்று அவர்களுக்குப் பிரமிப்பாக இருக்கும்.
    நூலகத்தில் உறுப்பினராகச் சேருபவர்களுள் சிலர்உறுப்பினர் தொகையைச் செலுத்தி விட்டுஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டும் என்று கேட்பர். அந்தப் புத்தகம் நூலகத்தில் இருக்கலாம்அல்லது இல்லாமல் போகலாம். அந்தப் புத்தகம் இல்லை என்றால் வருத்தப்படுவார்கள். அதனால்பொதுவாக ஒரு வழக்கத்தை நான் வைத்திருக்கிறேன். நூலகத்தில் உறுப்பினராகச் சேர வருபவர்களை முதலில் நூலகத்தைச் சுற்றிப் பார்க்கச் சொல்வேன். பிறகுதான் உறுப்பினர் படிவம் கொடுப்பேன்.
    புதியதாகச் சேரும் உறுப்பினர் எதாவது ஒரு புத்தகம் கேட்டால் எத்தனையாவது நூலடுக்கில்இதனையாவது தட்டில் இருக்கிறது என்று சொல்வேன். அவர் கேட்ட புத்தகம் எடுத்து வராமல்வேறு ஒரு புத்தகம் எடுத்து வருவதுண்டு.
     “நீங்கள் கேட்ட புத்தகம் எடுத்துத் தரட்டுமா?” என்று கேட்டால்இதை முதலில் படிக்கிறேன். அதை இன்னொரு நாள் எடுத்துச் செல்கிறேன் என்பதும் உண்டு.
    நூலகத்திற்கு அடிக்கடி புத்தகம் எடுக்க வரும் வாசகர் ஒருவர், “உங்களுக்குப் பிடித்த கதைப் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொடுங்கள்” என்றார்.
    உங்களுக்கு வேண்டிய புத்தகத்தை நீங்களே எடுத்துக் கொள்ளலாமே!” என்றேன்.
     இல்லைஇல்லை. உங்கள் ரசனைக்கு ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுங்கள்” என்று வற்புறுத்தினார்.
    வேறு வழியில்லாமல் ஜெயகாந்தன் எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றார். அன்று இரவு 11:30 மணி அளவில் அவரிடமிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது.
    நீங்கள் எடுத்துக் கொடுத்த புத்தகம் நன்றாக இருந்ததுமகிழ்ச்சி” என்றார்.
    எனக்கு அவர் நற்சான்று வழங்கியதில் மகிழ்ச்சிதான். அதற்காக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கான நேரமா இதுஎன்னை அவர் விடவில்லை. அந்த கதையைப் பற்றி கொஞ்சம் பேசினார். நான் அந்தக் கதையை படிக்காததால், எனக்கு ஒன்றும்  புரியவில்லை.
    இறுதியாக ஒன்றைக் குறிப்பிட்டார், “கதை சூப்பராத்தான் இருந்தது. ஆனால்முடிவு என்னவென்று தெரியவில்லைஅதனால்தான் உங்களுக்கு போன் போட்டேன்” என்றார்.
    ஜெயகாந்தன் கதைகள் எல்லாம் அப்படிதான் இருக்கும்!” என்றேன்.
    நீங்க எடுத்துக் கொடுத்த புத்தகத்தில் கடைசி நான்கு பக்கங்கள் இல்லைசார்!” என்றார்.
    வாசகர்கள் திரும்பிக் கொடுக்கும் புத்தகங்களில் பேருந்து பயணச் சீட்டோவேறு ஏதேனும் துணுக்குச் சீட்டோ இருப்பதுண்டு. எதுவரை படித்தோம் என்பதற்கான அடையாளம் அது.
    ஒரு பெண்மணி திருப்பிய புத்தகத்தில் வீட்டுக் கணக்கு எழுதிய துண்டுத் தாள் இருந்தது. வரவு செலவு கணக்கு வைப்பதில் பெண்கள் திறமைசாலிகள்.
    அவர் எழுதியிருந்த தாளில் பால்மின் கட்டணம்மளிகை சாமான்கள்காய்கறிகள்ராஜா திருடியது என்று எழுதிகடைசியில் மொத்தம் என்று ஒரு தொகை போடப்பட்டிருந்தது.
    அதனடியில் வரவு - செலவு சுருக்கம் இருந்தது. மாமனார் கொடுத்தது இவ்வளவுசெலவு இவ்வளவுகையிருப்பு இவ்வளவு என்று இருந்தது.
    எல்லா சரி! அது என்ன ராஜா திருடியதுஎனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை அவரது மகன் கேட்காமல் எடுத்து செலவு செய்திருப்பானோஎன்று நினைத்தேன். அவருடைய உறுப்பினர் அட்டையை எடுத்துப் பார்த்தேன். அவருடைய கணவர் பெயர் ராஜா என்று இருந்தது.
- நூலகர் சி. சரவணன் அவர்கள் எழுதிய கத்தரிக்காய் சாம்பார் - நகைச்சுவைக் கட்டுரைகள் என்னும் நூலிலிருந்து...
- (கி. தங்கம்மாள், நூலகர்ஊர்ப்புற நூலகம்ஒபிளினாயகனஹள்ளிதருமபுரி மாவட்டம்.)


திருச்சிராப்பள்ளி மாவட்டம் தளுகை கிளை நூலகத்தில் சார்பாக 19.11.22 அன்று த.மங்கப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 55 வது தேசிய நூலக வாரவிழா நனடப்பெற்றது பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி. பேச்சு போட்டி. கட்டுரை போட்டி நடைபெற்றது திருமதி ஜெயந்தி தலைமையாசிரியர் அவர்கள் பரிசுகள் வழங்கி உரையாற்றினார் திருமதி வசந்தி ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் நூலகர் வீ.கனகராஜ் நன்றி கூறினார். 
ஈரோடு நவீன நூலகத்தில் நடைபெற்ற நூலக வாரவிழா.
 

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில்    மாநில அளவில் உறுப்பினர், புரவலர், நன்கொடை அதிக அளவில் சேர்த்த மைய நூலகம், தாலுக்கா நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் என்று வகைப்படுத்தி கேடயம் வழங்கபடுவது வழக்கம்.  2021-2022 ஆண்டில்    ஊர்ப்புற நூலகம் பிரிவில், மாநில அளவில் அதிக புரவர்கள் சேர்த்த நூலகமாக திருப்பூர் மாவட்டம் கே. ஆண்டிபாளையம் ஊர்ப்புற நூலகம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நூலகத்துக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 3-12-2022  அன்று  நடைபெற்ற    டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழாவில், மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கேடயம் வழங்கினார். கேடயத்தை நூலகர் அ.கு.கலைச்செல்வன் பெற்றுக் கொண்டார்.

    ஊர்ப்புற நூலகர் திரு. அ.கு.கலைச்செல்வன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதும் வழக்ங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு விருதுகள் பெற்ற நூலகர் அ.கு. கலைச்செல்வன் அவர்களை மாவட்ட நூலாக அலுவலர் வே. மாதேஸ்வரன், நூலகர்கள், அலுவலகப் பணியாளர்கள், வாசகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ONLINE STORY TELLING COMPETITION 
இணைய வழியில் கதை சொல்லும் போட்டி.


தமிழ் நாடு என்பதன் சரியான ஆங்கில spelling என்ன?

சொல்லாக்கப் புலவர் நெடுமிடல் 

தமிழ் நாடு என்பதை, ஆங்கிலத்தில் டமில் நடு என்று தவறாக எழுதுகிறோம்.

Tamil nadu  என்னும் பெயரில் மூன்று இடங்களில்  spelling  தவறுகள் உள்ளன. அவற்றை திருத்த வேண்டும்.

TA என்பதை ட என்றுதான் படிக்க முடியும். THA  என்று திருத்தினால்தான் த என்று படிக்க முடியும்.

L என்பது ல். அது ழ் ஆகாது.

L என்பதை ழ் என்று படிக்க, அத்துடன் ஓர் அடையாள எழுத்து அல்லது துணை எழுத்து சேர்க்க வேண்டும்.

L என்பதற்கு முன் Z என்னும் துணை எழுத்து சேர்த்து, ZL என்று எழுதினால், அதை ழ் என்று படிக்க முடியும்.

Z என்பது, ஆங்கில மொழியில் மிக மிக மிக மிகக் குறைவாகப் பயன்படும் எழுத்து. எனவே, அதை ஒலிப்பு இல்லாத துணை எழுத்தாக பயன்படுத்த முடியும்.

ZL என்று எழுதி, “ழ் என்னும் தமிழ் எழுத்தின் ஒலி பெயர்ப்பு அடையாளம் இதுதான்”   என்று தமிழக அரசு அறிவிக்க முடியும்.

ழ் என்னும் ஒலிப்பு, ரஷ்ய மொழியிலும் பிரஞ்சு மொழியிலும் உள்ளது. ZH என்னும் வடிவத்தில் அது எழுதப்படுகிறது. பிரழ்னேவ் என்னும் பெயர்  Brezhnev என்று எழுதப்படுகிறது.

ஆங்கில எழுத்துகளையும் சொற்களையும் படிக்கத் தெரிந்த மிகப் பெரும்பாலோருக்கு-- உலக மக்களில் மிகப் பெரும்பாலோருக்கு – ZH  என்னும் ஒலிபெயர்ப்பு குறியை – ழ் என்று படிக்க வேண்டும் என்பது தெரிவதில்லை. Brezhnev என்னும் பெயரை பிரஸ்னேவ் என்று தவறாகப் படிக்கின்றனர்.

ZH என்பதுதான் ழ் என்பதற்கு உரிய சரியான ஒலிபெயர்ப்பு அடையாளம் என்று தமிழர்களாகிய நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ZL என்பதை ழ் என்று படிக்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

ZL என்பதுதான் ழ் என்பதற்கு உரிய சரியான எழுத்து அடையாளம். என்று உலகுக்கு அறிவிக்க வேண்டும். அரசு ஆணையாக வெளியிட வேண்டும்.

NA என்பதை ந என்றுதான் படிக்க முடியும். NAA என்று திருத்தினால்தான் நா என்று படிக்க முடியும்.

எனவே, TAMIL  NADU என்பதை spelling திருத்தம் செய்து, THAMIZH NAADU என்று மாற்றி, அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் என்பதையும், தமிழ்நாடு என்பதையும் எந்த முறையில் ஒலி பெயர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து அறிவிக்கும் கடமையும், பொறுப்பும், உரிமையும் தமிழக அரசுக்கு உண்டு என்பதை, தமிழக அரசு நிலை நாட்ட வேண்டும்.

ழ் – ZL,         ழ – ZLA,         

 ழி – ZLI,           ழை - ZLAI  



திருநெல்வேலியில் நவம்பர் 26, 27 ல் நடைபெற்ற பொருநை இலக்கிய திருவிழா வில் இயக்குநர் அவர்கள்  திருநெல்வேலி  மாவட்ட நூலக அலுவலர் திரு.இல. மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

வாழ்த்துச் செய்திகள்

  🙏  மிகவும் அருமை. நூலகர்களின் எண்ணங்கள், கருத்துக்கள், கோரிக்கைகள், படைப்புகள், நூலக செய்திகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள மிகவும் பயனாக இருக்கும்,
 -  பாஸ்கர், ஊர் புற நூலகர், மாவுத்தன் பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

   🙌 தங்களின் மின்னிதழ் தனித்தன்மை நன்று. நூலகர் களின் ஆதரவும் ஆவலும் மென்மேலும் கிடைக்கப் பெற வாழ்த்துக்கள். 
- அன்புடன் சீ. முனிரத்தினம் மூன்றாம் நிலை நூலகர் கிளை நூலகம் இலக்கியம் பட்டி

    🙋மின் இதழ் அருமை சார் இதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி நூலகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை நாங்களும் அனுப்புகிறோம் இந்த இதழில் செய்தி வெளியிட்டதற்கு நன்றி.ம.அகிலன்முத்துகுமார் திருநெல்வேலி சந்திப்பு கிளை நூலகர்.

 🙌Very nice magazine for the library department .R.Dasaradan librarian Agaram, Vellore dist.7418314375

 🙌வாழ்த்துக்கள். தங்களது இனிய முயற்சி நூலக சமுதாயத்திற்கு பயனளிக்கும். 
- -வெ.தர்மராஜ், நூலகர் ஓய்வு தலைமைச்செயலகம், சென்னை.

   🙏 அருமையான முயற்சி ஐயா. நூலகத்தின் பயன்பாட்டை மேம்பாடுத்தவும் நூலகர்களின் நிலையை மேம்படுத்தவும் வாசகர்களை ஈர்க்க நல்ல முயற்சி.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நூலகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், செலக்கரிச்சல் மூன்றாம் நிலை நூலகர்,திரு.வே.செந்தில்குமார் அவர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது  வழங்கப்பட்டது. அவருக்கு வாழ்த்துகள்.  
மாநில அளவில் அதிக உறுப்பினர் சேர்த்த தூத்துக்குடி  மாவட்ட மைய நூலகத்திற்கான விருதை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி, பி.கீதா ஜீவன் அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்  மாவட்ட நூலக அலுவலர் திரு.ராம் சங்கர்.  உடன் நூலகர் திரு.சங்கரன்


டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன்  விருது பெற்ற ஈரோடு மாவட்ட நூலகர் திருமிகு.ஷீலாவிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.


 
நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள் கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
கால தாமதமாக பெறப்பட்ட செய்திகளில் சில இந்த இடம்பெறவில்லை. அவை அடித்த இதழில் இடம்பெறும். 

மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.

இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.





















Comments

  1. நூலக நண்பர்கள் திட்டம் பற்றிய கட்டுரை தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது.
    நூலகர்கள் ஐயப்பாடுகளை களையும் நோக்கத்தில் இன்று துவங்குகிற நூலக நண்பர்கள் திட்டம் பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் கட்டுரை சிறப்பாக உள்ளது.
    அன்புடன்
    சீ.முனிரத்தினம்.
    மூன்றாம் நிலை நூலகர்
    கிளை நூலகம்
    இலக்கியம்பட்டி
    தருமபுரி மாவட்டம்

    ReplyDelete
  2. நன்று

    ReplyDelete
  3. நன்று

    ReplyDelete
  4. நன்று

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் 🎉

    ReplyDelete
  6. Comments எழுதும் நண்பர்கள் தங்கள் பெயர் முகவரியை தவறாமல் எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. நூலகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் அருமை நன்று வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31