நூலகர் செய்தி மடல் 3



ஆசாரியர் உரை:

நூலக நண்பர்களுக்கு,  வணக்கம்.

பொது நூலகத்துறை இயக்குநராக திருமிகு க. இளம் பகவத் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நூலகத் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும், வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயக்குநர் அவர்கள் நிர்வாகத்தை வெளிப்படைத் தன்மையாக்கியது பாராட்டுக்குரியது.

     உரியச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கலந்தாய்வு மூலம் நூலகர்களுக்கு பதவிஉயர்வு மற்றும் பணி மாறுதல்கள் வழங்கப்பட்டன.  இது நூலகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

   பொது நூலக இயக்குநர் அவர்களின் கலந்தாய்வு நடைமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட நூலக அலுவலர்களும், மாவட்டத்திற்குள் கலந்தாய்வு  மூலம் நூலகர்களுக்குப் பணி மாறுதல் வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதுதான் அனைத்து நூலகர்களின் விருப்பம்.

     ஆண்டுதோறும் நூலக வார விழாவில் நூலகர்களுக்கும் நூலகங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பாகப் பணி புரியும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் விருதும், அதிக உறுப்பினர் / புரவலர் / நன்கொடை திரட்டிய நூலகங்களுக்குக் கேடயம் உள்ளிட்ட  விருதுகளும் வழங்கப்பட்டன.

   பொதுவாக, விருது என்றாலே உடன் வருவது சர்ச்சை. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாவட்டத்தில் விருது பற்றிய சர்ச்சை எழுவது உண்டு. ஆனால், இந்த ஆண்டு எந்த மாவட்டத்திலும், எந்த ஒரு சர்ச்சையும் எழுத்ததாக தெரியவில்லை. இந்த நிலை இனி வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நம்புவோம்.

    காலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர்கள் பணியிடங்களை ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவிஉயர்வு வழங்கி, விரைவில் நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அத்துடன், ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்னும் நமது கோரிக்கையை அரசு விரைவில் நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

     நூலக நண்பர்கள் திட்டத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அண்மையில் திண்டுக்கல்லில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநர், மாவட்ட நூலக அலுவலர், நூலகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த விழாவைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் நூலக நண்பர்கள் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுவதற்கான பணிகளை  மாவட்ட நூலக அலுவலர்களும் நூலகர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்ட நூலக அலுவலராகவும்அண்ணா நூற்றாண்டு நூலக பொறுப்பு அலுவலராகவும் திறம்பட பணிபுரிந்து, பல்வேறு சாதனைகள் படைத்த திரு. இளங்கோ சந்திரகுமார் அவர்களுக்கு பொது நூலக துணை இயக்குநராக பதவிஉயர்வு வழங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  துணை இயக்குநராக அவர் பணிபுரியும் காலத்தில்மேலும் பல சாதனைகள் புரிவார் என்று நம்புவோம்.  அவருடைய பணி சிறக்க வாழ்த்துகள்!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

-     சி.சரவணன், ஆசிரியர், நூலகர் செய்தி மடல்.

 

பொது நூலக துணை இயக்குனராக திரு. இளங்கோ சந்திரகுமார் அவர்கள் பொறுப்பேற்பு;
     சென்னை மாவட்ட நூலக அலுவலராகவும், அண்ணா நூற்றாண்டு நூலக பொறுப்பு அலுவலராகவும் திறம்பட பணிபுரிந்து, பல்வேறு சாதனைகள் படைத்த திரு. இளங்கோ சந்திரகுமார் அவர்கள் பொது நூலக துணை இயக்குனராக பொறுப்பேற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. துணை இயக்குனராக அவர் பணிபுரியும் காலத்தில்,  மேலும் பல சாதனைகள் புரிவார் என்று நம்புகிறேன். அவருடைய பணி சிறக்க என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 -  நூலகர் சி. சரவணன், ஆசிரியர், நூலகர் செய்தி மடல்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலக் கட்டடம் கட்ட பூமி பூஜை



    கடத்தூர் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ. 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டட கட்டுமானப் பணிகளை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி பூமி பூஜை செய்து இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் யசோதா மதிவாணன், பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா,  பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன், நூலகர் சி. சரவணன், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ், ரவீந்திரன், அம்பேத்கர், கணேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் வாசகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

     முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி அவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் சார்பாக, நூலகர் சி. சரவணன் நல்லாடை அணிவித்து வரவேற்பு அளித்தார். அப்போது, சட்ட மன்ற உறுப்பினர் அவர்களிடம் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
1). கடத்தூர் கிளை நூலக கட்டடத்திற்கு குளிர்சாதன வசதி மற்றும் தளவாடங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கித்தருமாறு கோரிக்கை வைத்தோம். மேலும் ரூ. 5 லட்சம் வரை ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார். 
2). பொ. மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி  நூலகங்களுக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தருமாறு மாவட்ட நூலக அலுவலர் சார்பாக  கோரிக்கை வைத்தோம். அடுத்த நிதி ஆண்டில் இரண்டு நூலகங்களுக்கும் கடத்தூர் கிளை நூலகத்தைப் போன்று குளிர்சாதன வசதியுடன் கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படும் என்று சட்ட மன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.

   'நூலக நண்பர்கள்' திட்டம்  அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

    பொது நூலகத் துறை சார்பில் "நூலக நண்பர்கள் திட்டம்" மாநிலத்திலேயே முதன்முறையாக  15.12.2022 அன்று திண்டுக்கல்லில் தொடங்கி வைக்கப்பட்டது. 

       இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  "அறிவுசார்ந்த சமூகத்தை கட்டமைக்கநூலக நண்பர்கள் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார்.

       அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், “பள்ளிக் கல்வித் துறையில் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். இடைநிற்றல் மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். காலை உணவு திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக கொண்டு வந்தவர் நமது முதல்வர். ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா விரும்பினார். அவரது கனவை நிறைவேற்றும் விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கிராமங்களில் நூலகங்களை கொண்டுவந்தார். தற்போது வீடு தேடி புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். தென் மாவட்டங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மதுரையில் ரூ.100 கோடியில் கலைஞர் நூலகம் அமையவுள்ளது என்றார்.

    திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார்பொது நூலகத் துறை இயக்குனர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் இ.பெ.செந்தில்குமார்எஸ்.காந்திராஜன்மேயர் இளமதிதுணைமேயர் ராஜப்பாபள்ளி தாளாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் நன்றி கூறினார். 








நூலகத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வாசகர் வட்ட குழு தலைவர் கு.ஐயாக்கண்ணு பாரதியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்று பேசினார். அரிமா சங்க மாவட்டத் தலைவர் அம்மு.ரவி, சாந்தா சக்கரவர்த்தி, சமூக ஆர்வலர் சரவணன், பேரூராட்சி மன்ற குத்தகைதாரர் நா.பெரியான், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர்களுக்கு நூலகப் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கி பேசினார். நூலகத்தைப் பயன்படுத்தி குரூப் 2 தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. நூலக புரவலர் எம்.ஆர்.சேவி ராஜா, வாசகி பவானி, பணியாளர்கள் மு.கோவிந்தன், கி.பாஸ்கரன், பெ.விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனவரி 2023 முதல் புது மலர் - சிறுவர் மின் இதழ்

  மாணவர்கள் பாடப் புத்தகங்களுடன்,  வேறு பல புத்தகங்களைப் படிப்பது அவர்கள் அறிவை மேம்படுத்தும். பள்ளி நூலகமும், பொது நூலகமும் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. நூலகங்களுக்குச் சென்று புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை.
 அந்தக் குறையைப் போக்கத்தான் புது மலர்  மின் இதழ் தொடங்கப்பட்டுள்ளது.
   இது  2023 ஜனவரி முதல், மாதம் ஒன்று என்று வெளிவரும்.  மாணவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கைப்பேசி மூலம் இந்த மின் இதழைப் படிக்கலாம்.
"கைப்பேசியை விடு! புத்தகத்தை எடு!" என்பதுதான் நமது தாரக மந்திரம். "கைப்பேசியை விடு!" என்பதன் பொருள், "பொழுதுபோக்கு அம்சங்களுக்குக் கைப்பேசி பயன்படுத்துவதை விட்டுவிடு!" என்பதாகும்.
   நாம் எவ்வளவுதான் சொன்னாலும் மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்க முடிவதில்லை. கைப்பேசியை விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் மாணவர்களை, புது மலர் கொஞ்சம் படிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
     புது மலரில் வண்ணப் படங்களுடன் செய்திகள் இடம் பெறும். இதனால்,  மாணவர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்று நம்புகிறேன். 
    புது மலருக்கு ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
   புது மலர்  பெயருக்குத்தான் மின் இதழ். உண்மையில் இது ஒரு மின் நூல் தொடர். இதில் வெளியீடு நாள் இருக்காது.  வெளியீடு வரிசை எண் மட்டும் இருக்கும்.   வெளியீடு வரிசை எண்படி மாணவர்களை ஆசிரியர்கள் படிக்க வைக்கலாம். 
   இன்றைக்கு பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மின் நூல்கள் படிப்பதற்கு வசதியாக லேப்டாப், டேப், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போர்ட் போன்ற சாதனங்கள் உள்ளன. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்தி புது மலர் படிக்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தலாம்.
    மாணவர்கள் விடுமுறை நாட்களில் இணைய வசதி உள்ள கிளை நூலகங்களுக்குச் சென்று புது மலர் மின் இதழை வாசிக்கலாம். 
புது மலர் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமைய,  கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர் முதலானோர் ஆலோசனைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  நன்றி.

https://puthumalar2023.blogspot.com/2022/12/blog-post_12.html

- நூலகர் சி. சரவணன், ஆசிரியர், புதுமலர் மின் இதழ்.
வாட்ஸ் ஆப்: 8668192839.
மின்னஞ்சல்: puthumalar2023@gmail.com

  படித்ததில் பிடித்தது.......
 - தனலட்சுமி,  மூன்றாம் நிலை நூலகர், 
பழனி. (98650 07207)
        மனைவி இறக்கும்போது, அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம்  செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால், அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
        என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை. அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து,  அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்கு போதும். அவனுக்காக வாழ போகிறேன்
        இன்னொரு துணை எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.
வருடங்கள் உருண்டோடியது. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும்  மகனிடம் எழுதி கொடுத்து விட்டு ஓய்வு பெற்றார்.
        மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார்.  ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம்  சீக்கிரமாக காலை உணவு உண்ண, மருமகளிடம் ரொட்டியில் தடவ வெண்ணெய் தருமாறு கேட்டார். மருமகளோ வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்
        மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார,தகப்பன் வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்.
        மகன் உணவருந்தும் போது, மேஜையில் வெண்ணை கொண்டு வந்து வைத்தாள் மனைவி. ஒன்றும் பேசாமல், மகன் தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். அந்த வெண்ணையை பற்றிய சிந்தனையே அந்நாள் முழுதும் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டு  இருந்தது.
        மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான். ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க...
        நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும், உங்கள்பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள்.
        இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன்.
மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன், என்றான்..
        ஏன்  இந்த திடீர் முடிவு?. இல்லை அப்பா உங்கள் மதிப்பு என்னவென்று  என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
        சாதாரண வெண்ணைக்காக நீங்கள் கையேந்தும் நிலை வரக்கூடாது
ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை  அவள் உணர வேண்டும். மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...
        பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு  ATM கார்டாக இருக்கலாம்.. 
        ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப்பொருள்.
        பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை.




திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் 141 பிறந்த நாள் விழா நடைபெற்றது நூல்கத்தில் உள்ள பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது வாசகர் வட்டத்தின் தலைவர் முனைவர் சரவணகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார் ஆசிரியர் பாப்பாக்குடி செல்வமணி முன்னிலை வகித்தார் முனைவர் கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்து நூலகத்தில் புரவலராக சேர்ந்தார்கள் கவிஞர்கள் பிரபு முத்துசாமி சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் நூலகர் அகிலன் முத்துகுமார் நன்றி கூறினார் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது வாசகர் வட்டத்தின் இசக்கிமுத்து சுடலைகண்ணு சுப்பிரமணியன் பத்ரிநாராயணன் கண்ணன் செய்யது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நூலக வாசகம்
நூலகம் _ ஓர் ஆலயம்!
நூலகம் _ நம் தாயகம்!
நூலகம் _ அறிவின் சாளரம்!
நூலகம் _ வாசகர்களுக்கு பாலம்!
நூலகம் _ அறிவொளி பரப்பும் ஆலயம்!
நூலகம் _ அறிவை நுகரும் நந்தவனம்!
நூலகம் _ இரண்டாவது கல்விக்கூடம்!
நூலகம் _ அன்பின் ஊற்று அரவணைக்கும் தாய்!
நூலகம் _ அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோல்!
நூலகம் _ செல்வத்தை செலவில்லாமல் தருவது!
நூலகம் _ அறிவு பால் ஊட்டும் அற்புத காமதேனு!
நூலகம் _ மனிதரைப் புனிதராக மாற்றும் வல்லமை பெற்றது!
நூலகம் _ குன்றாத பெறும் செல்வம்குறையாத நிறை வளர்மதி!
நூலகம் _ படித்தோர் வருகை தரும் சிந்தனை பூந்தோட்டம்!
நூலகம் _ அழிவை அகற்றி அறிவினை புகட்டும் அறிவாலயம்!
நூலகம் _ அறிவுப் பசிக்கு அருமருந்துஅள்ள முடியாத அமுதசுரபி!
நூலகம் _ இறந்த சிந்தனையாளர்- இன்னும் இறவாமல் வாழும் இல்லம்!
நூலகம் _ உறங்குவதற்கான இடமல்ல: நீ விழித்துக் கொள் வதற்கான இடம்!
நூலகம் _ பாமரனுக்கும் படிப்பறிவை பணமின்றி பகிர்ந்தளிக்கும் பகுத்தறிவுக் கூடம்!
நூலகம் _ புத்தகம் சேகரிக்கும் இடமல்ல: புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இடம்!
நூலகம் _ வாசிப்பவர்களை பெருக்குவதல்லவாசிப்பவர்களின் திறமையை பெருக்குவது!
நூலகம் _ தேசத் தந்தையும்தேசியக் கவியும்கம்பனும்கண்ணகியும்கர்மவீரரும் வாழும் இல்லம்!
நூலகம் _ திறன்களை மேம்படுத்தும் திறவுகோல்: சான்றோர்களை உருவாக்கும் சமுதாய கூடம்!
 
- த. புவனேஸ்வரிமூ . நி . நூலகர். முழு நேர கிளை நூலகம், காசி பாளையம், ஈரோடு 


திருச்சிராப்பள்ளி மாவட்டம் தளுகை கிளை நூலகத்தில் மருத்துவ முகாம் 3.12.2022 அன்று நடைபெற்றது திருமதி சி. மாலினி இடைநிலை சுகாதார பணியாளர்கள் அவர்கள், திருமதி வி.பர்மிளா அவர்கள் கலந்து கொண்டு சக்கரை நோய், இரத்த அழுத்தம் நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது வாசக வட்ட தலைவர் திரு.க.மோகன் அவர்கள் தலைமை தாங்கினார் புரவலர் திரு.பொ.பெரியசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார் நூலகர் வீ.கனகராஜ் நன்றி கூறினார் திரு.செல்லையா அவர்கள் ,திருமதி பார்வதிஅவர்கள், திரு கே.பி.சிவா அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
கோயமுத்தூர் மாவட்ட நூலக ஆனைக்குழுவின் கீழ் புதிய பகுதி நேர நூலகம் கிட்டாம்பாளையம் கிராமத்தில் 9.12.2022 இன்று கோயமுத்தூர் மாவட்ட நூலக அலுவலர் திரு. யுவராஜ் அவர்களால் தொடங்கப்பட்டது
இவ்விழாவில் சவுரிபாளையம் கிளை நூலகர் திரு. லக்ஷ்மண சாமி வரவேற்றார் கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வி. எம். சி. சந்திரசேகர்
ஒன்றிய செயலாளர் கே வி அன்பரசு மற்றும் திரு தங்கராஜ் ஊராட்சி கவுன்சிலர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர் இவ்விழாவிற்கு வாகராயம்பாளையம் கிளை நூலகர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் நன்றி தெரிவித்தார்
இந் நூலகத்தில் 1027 உறுப்பினர்களும் 13 புரவலர்களும் ரூபாய் 60,000 மதிப்பில் நன்கொடை தளவாடங்களும் பெறப்பட்டது மேலும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட 5 இடம் பெறப்பட்டது. 
2022ம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது பெற்ற திரு. வே. செந்தில் குமார் (மூன்றாம் நிலை நூலகர் செலக்கரிச்சல்)  (12.12.2022) மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக, நூலக ஆய்வாளர் மற்றும் வாசகர் வட்டத்தலைவர் அவர்களுடன் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அப்பொழுது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தான் எழுதிய புத்தகங்களை வழங்கி ஊக்கப்படுத்தியதுடன்,மேலும் சிறப்பாக பணியாற்றும் படியும் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், வேம்பார்பட்டி கிளை நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா.

 இரண்டாம் நிலை நூலகராக பதவி உயர்வு பெற்று, வைத்தீஸ்வரன்கோயில் கிளை நூலகத்தில் பணியில் சேர்த்த  திரு. பி. ரகுநந்தனன்  அவர்களுக்கு,  சீர்காழி முழு நேர நூலக இரண்டாம் நிலை  நூலகர்  திருமதி.ஜெ.ஜோதி பொன்னாடை போர்த்தி, இனிப்பு வழங்கி   வாழ்த்து தெரிவித்தார். 

மூன்றாம் நிலை நூலகர்கலாக பணிபுரிந்து இரண்டாம் நிலை நூலகர்க்லாக பதவிஉயர்வு பெற்று பணியில் சேர்த்துள்ள நூலகர்கள் அனைவருக்கும் வாழ்த்த்கள்! 



தருமபுரி மாவட்டம், தென்கரைக் கோட்டை கிளை நூலகத்தில் மூன்றாம் நிலை  நிலை நூலகராகப் பணிபுரிந்து வரும் திரு. எம். ஜாகிர் உசேன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் உலாவும் 
சிந்திக்கத் தூண்டும் பதிவு:

நான் இன்று காலை jogging ( ஜாகிங்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.
அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.
அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.
நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.
சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு,
எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.
எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.
இறுதியாக, சாதித்து விட்டேன்!
அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.
எனக்குள் "அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.
ஆனால் அந்த நபருக்கு ,
நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.
அவரைக் கடந்த பிறகு, நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....
1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.
2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.
3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.
4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.
5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.
அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையும் இதே போலத் தானே?
நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டிருக்கிறோம்.
நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது,
ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.
எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.

நீங்கள் யாருடனும் போட்டி போடாத போது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் போதுதான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.
நாம் யாருக்கும் போட்டி இல்லை.
யாரும் நமக்கு போட்டி இல்லை.
அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.
ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.
மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்.
உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.
'வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.
வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில்'


செங்கோட்டை நூலகத்தில் மத்திய அரசின் தேசிய திறனாய்வு(NMMS) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
    நூலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் திரு. சுடலை அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
   ஜே .பி கல்வியியல் கல்லூரி மாணவிகள் பயிற்சி வகுப்பை நடத்திக் கொடுத்தார்கள்.
    எல் என் சேரி  ட்ரபிள் டிரஸ்ட்   இயக்குனர் நீலகண்டன் ஆகாஷ் அகாடமி இயக்குனர் மாரியப்பன் ஆசிரியர் சித்தாய்   ஜே பி கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி எஸ் எம் எஸ் எஸ் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
   வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ்தாசன்பா.சுதாகர் வரவேற்புரை வழங்கினார். நூலகர் ராமசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
   செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 10 பள்ளிகளில் இருந்து 122 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூரில் புத்தாண்டு, பொங்கல் முன்னிட்டு உமா டெக்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் மற்றும் ஊர்புற  நூலகம் பெருங்கட்டூர் இணைந்து மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெம்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பக்தன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உமா ஏசு மற்றும் ஓவியர் வி. விஜயகுமார் முன்னிலை வகித்தனர். உமா டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஏசு சாந்தாமணி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக பெருங்கட்டூர் மின்வாரிய உதவி பொறியாளர் மு. செல்வராஜ் அவர்கள் மாணவர்கள் இடையே ஊக்க உரை நிகழ்த்தி பரிசுகள் வழங்கி பேசினார். நானும் சிறுவயதில் தங்களை போன்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றதை நினைவு கூர்ந்து பேசினார். இந்த நிகழ்வில் நூலக  புரவலர் பா. பிரகாஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் செய்து இருந்தார்.
கடையநல்லூர் கிளை நூலகத்தில் முதல் நாள்  ஓவியப் பயிற்சி இன்று  தொடங்கியது இதில்  ஜாய் பள்ளி மற்றும் இதர பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்தார்கள் ஓவிய ஆசிரியர் திரு . கோ. ஜெயராம் அவர்கள் சிறப்பாக  ஓவியப் பயிற்சி கொடுத்தார். இதில்  ஜாய் பள்ளி ஆசிரியர் திரு. ஸ்டாலின்& விதை நெல் வாசகர் வட்ட செயலர் திரு  செல்லக்குமார் ஆசிரியர் அவர்கள்  கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு ஊக்கமும், பாராட்டும்  தெரிவித்தார். நூலகர்  சி.நாகராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி கிளை நூலகத்தில் 55-வது  தேசிய நூலக வார விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னங்குறிச்சி கிளை நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகர் ச.மணிவண்ணன் வரவேற்புரை ஆற்றினார். கன்னங்குறிச்சி கிளை நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் திரு. குமரேசன் அவர்கள் தலைமை தாங்கி கட்டுரைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற  கன்னங்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கன்னங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் திரு சேலத்து பாரதி சொல்லரசர், உயிர்மெய்ச் தமிழ்சங்கம் மாநிலத் தலைவர், இன்ஜினியர் திரு. இராமலிங்கம், டாக்டர். அனுராதா, வாசகர் வட்ட முன்னாள்  தலைவர் திரு. செல்வம்,  சமூக ஆர்வலர் திரு. முருகன்,  திரு. ஓ.எஸ். கணேஷ், மக்கள் சிந்தனையாளர் சங்கம், கவிஞர். மோகனராஜ் ஆகியோர்  நூலகத்தின் பயன்கள்  குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சிறுமி யாழினி இறை வணக்கம் பாடலை சிறப்பாக பாடினார். அவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர் திரு. ராஜா,  ரத்தினவேல், அகமத், சச்சிதானந்தம், ஷாஜகான் பாய், வாசகர்கள் மற்றும் மாணவ-   மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழா இறுதியில் கவிஞர். சித்து கந்தசாமி  அவர்கள் நன்றியுரை ஆற்றினார்


திரு.  இரத்தனக்குமார், 2008 - ஆம் ஆண்டு ஊர்ப்புற நூலகராக பணியேற்று, 31.12.2022 அன்று பணிநிறைவு பெற்றார்.  அவருக்கு  31.12.2022 அன்று சின்னமனூர் முழுநேர நூலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

குறிப்பு: விருது பெரும் நூலகர்களுக்கும், பணி நிறைவு பெரும் நூலகர்களுக்கும் மாவட்ட நூலக அலுவலர்கள் தலைமையில் பாராட்டு விழாக்கள் நடைபெற்று வந்தன. கடந்த சில ஆண்டுகளாக, பெரும்பாலான மாவட்டங்களில்  அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.  மீண்டும்  அது போன்ற நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்.  
நூலகர்களிடையே பல சங்கங்கள் இருக்கலாம். நிகழ்ச்சிக்கு வருமாறு யாரையும் வற்புறுத்த வேண்டியதில்லை. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளட்டும்.

நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள் கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
கால தாமதமாக பெறப்பட்ட செய்திகளில் சில இந்த இடம்பெறவில்லை. அவை அடித்த இதழில் இடம்பெறும். 

மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.

இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31