ஆசிரியர் உரை:
நூலக நண்பர்களுக்கு வணக்கம்.
இது ஐந்தாவது செய்தி மடல். செய்தி மடலை நூலக நண்பர்கள் பலரும் படித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இதழில் குடியரசு தின விழா தொடர்பான செய்திகள் பல இடம் பெற்றுள்ளன. ஊர்ப்புற நூலகங்களிலும் குடியரசு தின விழாக்கள் நடந்திருப்பது பாராட்டுக்குரியது.
👉 கிடைக்கப் பெற்ற செய்திகள் மட்டும் இந்த இதழில் இடம்பெற்று இருக்கின்றன. மற்ற நூலக செய்திகள் கிடைக்கப் பெறாததால், இதழில் இடம் பெறவில்லை. நூலக நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் நூலக செய்தி மடல் லிங்க்கை பார்வர்ட் செய்தால் மற்ற நூலகர்களும் இதழை படிக்க வசதியாக இருக்கும்.
👉 பொங்கல் விடுமுறையில், நான் பணிபுரியும் கடத்தூர் கிளை நூலகத்திற்கு ஒரு இணைய தளத்தை (website) உருவாக்கலாம் என்று நினைத்தேன். நான்கு நாள் முயற்சிக்குப் பிறகு ஒரு முழு வடிவம் வந்தது. அதை வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்தேன்.
இணையதளம் சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். குறிப்பாக, திருச்சி மாவட்ட நூலக அலுவலர் திரு.சிவக்குமார் அவர்கள் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இணையதள லிங்க்:
👉 இது மட்டுமல்ல, நூலகர் செய்தி மடலை பிளாக்கரில் தான் வெளியிட்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் அதற்கான லிங்கை அனுப்ப வேண்டி இருக்கிறது. நூலகர்களும் அதற்கான லிங்கை எதிர்பார்க்கிறார்கள். இந்த குறையை போக்க, நூலகர் செய்தி என்னும் வெப்சைட்டை https://www.noolagarseithi.co.in/ உருவாக்கி, அதில் நூலகர் செய்தி மடல் இதழ்களை வெளியிட்டுள்ளேன்.
இந்த இணைய தளத்தில் நூலகர் செய்தி மடல் இதழ்கள் அனைத்தும் இருக்கும். அவற்றைப் படிக்கலாம். நண்பர்களுக்கு பகிரலாம். மேலும், இந்த இணைய தளத்தில் நூலகர்களுக்கு தேவையான அரசாணைகள் / அறிவிப்புகள் தொகுத்து வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.
அதனால் சில அரசாணைகளை இந்த இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறேன். நூலக நண்பர்கள் தங்கள் வசம் இருக்கும் நூலகர்களுக்கு பயனளிக்கும் அறிவிப்புகள் / அரசாணைகள் noolagarseithi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அதையும் இணையதளத்தில் சேர்த்து விடுவேன்.
முக்கிய தகவல் வேண்டி நூலகர்கள் எங்கும் சொல்ல வேண்டியதில்லை. இந்த இணையத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
ஆசிரியர்களுக்கு கல்வி தொடர்பான பல இணைய தளங்கள் இருக்கின்றன. ஆனால், நூலகர்களுக்கான இணைய தளம் எதுவும் இல்லை. அந்த குறையை போக்கும் வகையில் நூலகர் செய்தி என்னும் இந்த இணைய தளம்https://www.noolagarseithi.co.in/ இருக்கும் என்று நம்புகிறேன்.
👉 இந்த ஆண்டு குடியரசு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர்களிடம் நூலகர்கள் சிலர் நற்சான்றிதழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. இனி வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இது போன்று நூலகர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் நற்சான்றிதழ் பெற மாவட்ட நூலக அலுவலர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி. மீண்டும் சிந்திப்போம்.
- சி. சரவணன்.
இணையதள லிங்க்:
சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு புத்தக கண்காட்சியில்...
சென்னை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் நூலக பணியாளர்கள்.
|
SALIS gave a representation today to Honorable Speaker of Tamil Nadu Assembly Thiru M. Appavu to appoint Qualified Librarians in Schools, to fill up vacant Librarians post in Colleges and issues related to Public Librarians during the inaugural session of SALIS National Conference at St. Xavier’s College of Education, Palayamkottai.
|
|
26.01.23 -ஈரோடு நவீன நூலகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட நூலக அலுவலர் திரு.வே. மாதேஸ்வரன் அவர்கள் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
|
|
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட நூலக அலுவலர் திருமதி மா. தனலட்சுமி அவர்களுக்கு சிறப்பான சேவைக்கான விருது, மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது |
திருநெல்வேலியில் பிறந்த இவர், கல்லூரியில் 30 ஆண்டுகள் நூலகராக உழைத்து பணியாற்றிக் கிடைத்த தொகை, ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டுப் பணிக்கு கொடுத்தார். பாலம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சமூக சேவை ஆற்றி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் ஒருமுறை இவரை வளர்ப்பு தந்தை என்று குறிப்பிட்டார்.
இந்திய அரசின் ‘இந்தியாவின் சிறந்த நூலகர் விருது பெற்றவர்..
சுபாஷ் கலியன் இயக்கியத்தில் வெளியான "பாலம் கல்யாணசுந்தரம்" பற்றிய ஆவணப்படம், 2012 ஆண்டு நடைபெற்ற மூன்றாவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்குத் தேர்வானது
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?.
35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.
உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடதுக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகூறி விட்டு திரும்பினார்.
ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.ஆனால் இதை எதையும் தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளாதவர்
ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.
வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.
ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.
பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.
கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்..
இத்தகைய உத்தமருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது.
|
வாசித்தேன் சுவாசித்தேன் நூலாசிரியர் சு. த. குரலினி, நூல் வெளியிட்டவர் புலவர் செ ராசு தொல்லியல் அறிஞர் நவீன நூலகத்தில் ஞாயிறு காலை 10 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் திரு வே மாதேஸ்வரன் அவர்கள் தலைமை உரை வாசித்தார், உரை பொலிவு நிகழ்த்தியவர்கள் முனைவர் வி அன்புமணி எழுத்தாளர் பணி சரிதா ஜோ எழுத்தாளர் வே ஷங்கர் எழுத்தாளர் ஈரோடு சர்மிளா எழுத்தாளர் கலைக்கோவன் எழுத்தாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். |
திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நூலக நண்பர்கள்...
19வது புத்தக திருவிழாவில் எழுத்தாளர் மகுடேஸ்வரன் அவர்களுடன் நூலகர்கள் பரமேஸ்வரன், பாலராஜசேசர்.
கரூரில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 74 - ஆவது குடியரசு தின விழாவில் இனாம் கரூர் கிளை நூலக நூலகர் திரு. மோகன சுந்தரம் அவர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழம்பி - காஞ்சிபுரம்
புத்தகத் திருவிழா 2022
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புத்தகக் கண்காட்சி (Book Fair - 2022) நடைபெற்றது. இப்புத்தகத்திருவிழா 2022- ஆம் ஆண்டு 23.12.2022 முதல் 02.01.2023 வரை 11 நாட்கள் நடைபெற்றன. அங்கு பல்வேறு புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக காஞ்சிபுரத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களால் கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடத்தப்பட்டன. இதில் எம் கல்லூரி மாணவ மாணவியர்கள் 30.12.2022 அன்று தமிழர் கலாச்சாரமாகப் போற்றப்படும் சிலம்பாட்டம், பரதம், நடனம், mimes மற்றும் பாடல் போன்றவற்றில் கலந்துக் கொண்டு அதன் வாயிலாக மாணவ மாணவியர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். கல்லூரி முதல்வர் முனைவர் கு.வெங்கடேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி துணை முதல்வர் முனைவர் M.பிரகாஷ் அவர்களும் கல்லூரியிலுள்ள துறைத்தலைவர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தினர். மேற்படி நிகழ்வுகளை கல்லூரி நூலகர் முனைவர் K.விஜி அவர்கள் ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகளாக தொகுத்து வழங்கினார். மேலும் கல்லூரியின் துணை முதல்வர் அவர்களும் துறைத்தலைவர்களும் பேராசிரியர்களும் மற்றும் மாணவ மாணவியர்களும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியினை பார்வையிட்டும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு இரசித்தும் பயன்பெற்றனர்.
|
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 75 ( எழுபத்தைந்து) கிளை மற்றும் ஊர்புற நூலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி மூலம் 14 லட்சம் மதிப்புள்ள தளவாட பொருள்கள் வாங்க, செங்கல்பட்டில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நூலக ஆய்வாளர் த. இளங்கோ அவர்களிடம் ஆணை வழங்கினார். |
|
முழு நேர கிளை நூலகம் காசிபாளையத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
|
|
சூலூர் கிளை நூலகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் இரண்டாம் நிலை நூலகர் ஆ.இளங்கோவன் கொடி ஏற்றி கொடி வணக்கம் செய்தார். உடன் நூலகர் வசந்தாமணி, பகுதி நேர நூலகர் பார்த்திபன், வாசகர் வட்ட தலைவர் சின்ன சாத்தன் பங்கேற்றனர். டால்பின் ஸ்டுடியோ உரிமையாளர் மாரிமுத்து சிறப்புரையாற்றினார் விழா ஏற்பாடுகளை டால்பின் ஸ்டுடியோ உரிமையாளர் சிறப்பாக செய்திருந்தார்.
|
- நீங்கள் தனிமையில் இருக்கும் போது உங்களுக்கு மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றனவோ அவைகள்தான் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
- கடவுள் எப்போதும் ஒரு கதவை மூடும் போது பல கதவுகளை திறக்கிறார். ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதனால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
- துன்பங்களை அனுபவித்த காலங்களை மறந்துவிடுங்கள்.. ஆனால் அவைகள் உங்களுக்கு கற்பித்த பாடங்களை மறந்து விடாதீர்கள்..! - பெஞ்சமின் பிராங்க்ளின
வரலாற்றில் வெற்றி பெற்றவருக்கும் இடம் உண்டு.... வரலாற்றில் தோல்வி அடைந்தவருக்கும் இடம் உண்டு.....
வேடிக்கை பார்ப்பவர்கள் ஒருபோதும் இடம் பெற முடியாது...."
|
31.1.2023 அன்று பணி நிறைவு பெற்ற இரண்டாம் நிலை நூலகர் திரு. பெ.பிரபாகரன் அவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பாக பணி நிறைவு பாராட்டு விழா மாவட்ட நூலக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திரளான நூலகர்கள் கலந்து கொண்டனர். |
|
18.01.2022 அன்று கொளக்குடி கிளை நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தின்படி நூலக நண்பர் அப்பணநல்லூர் ஊராட்சியை சேர்ந்த திரு. மா. ராஜ்குமார் M. A, M. Phil அவர்களுக்கு நூலகர் செல்வகுமார் அவர்கள் கொளக்குடி கிளை நூலகத்தின் நூலக நண்பர் அடையாள அட்டை வழங்கி சேவை செய்ய வாழ்த்தினார். |
கவிஞர் தாமரை பாரதி யின் "காசினிக்காடு" நூல் வெளியீட்டு நிகழ்வில்...
|
தென்பெண்ணை ஆற்றங்கரையை ஒட்டிய "உவர்மணல் சிறு நெருஞ்சி" யை கடந்து, அதியந் நெடுமான் அஞ்சி யின் பெயர்தாங்கிய கி.பி ஒன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு பொறித்துள்ள ஜம்பை மலைக்குன்றை திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் உதியன் அவர்களோடு அடைந்தபோது, அங்கே எழுத்தின் இமயத்தோடு சல்லிகையின் வேர்களான ( Kstalin Kannan ) க.ஸ்டாலின், திருக்கூனன் கண்டராதித்தன், அசதா ஆகியோரை கண்டு அகம் மகிழ்ந்தோம். -மேலந்தல் அன்பழகன். |
|
சென்னையில் இன்று 20.01.2023 நடைபெற்ற 46 ஆவது புத்தகக் கண்காட்சியில் முனைவர் இரத்தினம் இராமசாமி ஐயா எழுதிய புத்தகத்தை திரு ஒளிவண்ணன் ஐயா வெளியிட்ட விழா புகைப்படங்கள்... |
|
K.ஆண்டிபாளையம் அறிவொளி இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய 28 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழாவினை முன்னிட்டு 18-1-2023 அன்று இளைஞர்கள், மாணவர்கள், ஊர் பொது மக்கள் என. 100 பேர் ரூ 2000/ செலுத்தி தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். - நூலகர் சி. சரவணன்.
*மனிதனின் ஐந்து கடமைகள்*
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பல கடமைகள் உள்ளன. கடமைகள் பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படுபவை. ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து உருவாகலாம்.
கடமைகளைச் செய்யும்போது சில வேளைகளில் சொந்த நலன்களைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுவது உண்டு. எனினும் சிலரால் தன்னலம் கருதியும் கடமைகள் செய்யப்படுவதுண்டு. கடமைகள் சரிவர செய்யும் போதுதான் உரிமைகள் தானாகவே கிடைக்கப்பெறும்.
ஆனால் மனிதனாய்ப் பிறந்த எல்லோரும் தமக்கான கடமைகளை செய்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே! மனிதனது ஐந்து கடமைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
தான் குடும்பம் சுற்றம் ஊரார் உலகம் 1. தான்
முதலில் பிறர் நமக்கு செய்யும் கடமைகளை விட நமக்கு நாமே செய்யும் கடமைகள் தான் முக்கியம் பெறுகின்றது. அந்த வகையில் நமது முதல் முக்கியத்துவம் உடலில் வேண்டும்.
மனிதன் முதலில் தனக்கான கடமையை செய்தால்தான் பிற கடமைகளை அவனால் திறன்படச் செய்ய முடியும். தன்னைப் பற்றிய கடமைகளை விடுத்து செயற்படும்போது பிற கடமைகளை செய்திட முடியாது.
2. குடும்பம்
ஒவ்வொரு மனிதனுக்கும் என குடும்பம் உண்டு. தனி மனிதன் ஒவ்வொருவரினதும் பிறப்பிடம் குடும்பமாகும். அத்தகைய குடும்பத்திற்கு தனது கடமைகளை செய்வதென்பது ஒவ்வொருவரது தலையாய கடமையாகும்.
தன்னையும், குடும்பத்தையும் சரிவரப் பார்க்கும் ஒருவனால் தான் சமுதாயத்திற்கான கடமையை செய்ய முடியும்.
3. சுற்றம்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்தான் உதவி தேவைப்படும் போது முதலில் வந்து உதவுவார்கள். இவர்கள் மீதான கடமை என்பது முக்கியமானதொன்றாகும்.
நம்மை சுற்றியுள்ள சுற்றத்தார்களுக்கு துன்பம் ஏற்படும்போது அவர்களுக்கு துணையாய் இருப்பது எமது கடமையாகும். இதுவே நம்மை சமுதாயம் சார்ந்த கடமைகளில் ஈடுபட வைக்கின்றது.
மனிதனுக்கு முதலில் தனக்கான கடமை அதன்பின் குடும்பம் மீதான கடமை அதனை அடுத்து மூன்றாவது கடுமையாக சுற்றத்தவர் மீதான கடமை உள்ளது. இவை மூன்றையும் தவிர நான்காவது கடுமையாக ஊரார் கடமை உள்ளது.
4. ஊரார்
ஊராருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யும் போதுதான் சமூகத்துக்கான கடமைகளை தயக்கமின்றிச் செய்ய முடியும்.
5. உலகம்
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாள் முழுவதிலும் ஏதோ ஒரு வகையில் கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்றான்.
தனிமனிதன் ஒருவன் குடும்பம், சுற்றம், ஊரார் இவை அனைத்திலும் தனக்கான கடமைகளை செய்யும்போது அது தானாகவே உலகத்திற்குச் செய்யும் கடமைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை உலக நல்வாழ்விற்கும், அமைதிக்கும் வித்திடுகின்றன.
|
|
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிலுக்குவார்பட்டி கிளை நூலகத்தில் 74 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு .அசோகன் இரண்டாம் நிலை நூலகர் வத்தலகுண்டு அவர்களும், வரவேற்புரை திரு. தங்கபாண்டி அவர்களும், வாழ்த்துரை திரு .அழகர் அவர்கள், நூலக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் நூலகர் திரு.பாஸ்கர் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
|
*தேனிமாவட்டம் தென்கரைபெரியகுளம் முழுநேர கிளைநூலகத்தில் இன்று 74- வது குடியரசு தினவிழா & பள்ளிமாணவர்கள் அஞ்சல் அட்டையில் கவிதை எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு விழா* வாசகர்வட்டத்தினர்,பள்ளிமாணவர்கள் ,ஆசிரியர்கள்,கலந்து கொண்டனர். தேசிய கொடியினை பறம்பு வாசகர்வட்டத் தலைவர் தென்கரை நூலகப் புரவலர் திருப்பதி வாசகன் ஏற்றினார். குடியரசு தினம் கொண்டாடப்படுவதின் சிறப்புகளை வழக்கறிஞர் G.K.மணிகார்திக், நூலக ஆர்வலர் மு.அன்புக்கரசன்,முனைவர் பதிமினிபாலா,பொறியாளர் ராமநாதன்,நேசம் முருகன்,ஆசிரியர் மெஹபூப் பீவீ எடுத்துரைத்தனர். வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் நல்நூலகர் வெ. விசுவாசம் வழங்கினார். அனைவருக்கும் நன்றி நல்நூலகர் ஆ.சவடமுத்து தெரிவித்தார்.
|
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தளுகை கிளை நூலகத்தில் 74வது குடியரசு தின விழா சிறப்பாக நடைப்பெற்றது. வாசகர் வட்ட தலைவர் திரு.க.மோகன் அவர்கள் கொடியேற்றினார். பள்ளி மாணவ மாணவிகள் நூலகர் வீ.கனகராஜ் கலந்து கொண்டார்கள்.
|
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா முழுநேர கிளை நூலகத்தில், 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தேசியக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. கிளை நூலகர் இரா.மகாலிங்க ஜெயகாந்தன் கொடி ஏற்றினார். வாசகர் வட்டத் தலைவர் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நூலகர் கண்ணன், ஜெயபிரகாஷ், தொண்டுநிறுவன மேலாளர் திருமதி ரமா, கார்மேகம், RS. சண்முகம், செந்தில், R. ராசு, தமிழன் மற்றும்
நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
|
திருமங்கலம் முழு நேர கிளை நூலகத்தில்பெரிய பாண்டி அவர்கள் ரூ 10,000 .செலுத்தி பெரும் கொடையாளராக இனணந்துகொண்டார். |
|
46 வது சென்னை புத்தக கண்காட்சியில் (22.01.2023) தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பாக, சிறந்த நூலகர் விருது திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகர் ஜா.தமீம் அவர்களுக்கு மாண்புமிகு நீதியரசர் திரு. அரங்க மகாதேவன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. உடன் தலைவர் வைரவன், செயலாளர் முருகன், பொருளாளர் குமரன் ஆகியோர் உடன் இருந்தனர். |
செங்கோட்டை இராணுவ வீரருக்கு அஞ்சலி
செங்கோட்டையில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைந்த செங்கோட்டை சந்திரசேகரின் நினைவிடத்தில் செங்கோட்டை நூலக வாசகர் நிர்வாகிகள் நன்னூலகர் இராமசாமி தலைமையில் ஆதிமூலம், ஆசிரியர் சுதாகர், விழுதுகள் சேகர், முத்தரசு, மாரீஸ், விக்னேஷ் ஆகியோரும் முன்னாள் மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களான ஜவஹர்லால் நேரு, துரைராஜ், ஆறுமுகம், அசோக், அரசரமரம் மன்சூர் அலி, பஷீர் ஆகியோரும் ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை செயலாளர் வழக்கறிஞர் அபு, மதினா ஹோம் அப்ளையன்ஸ் காதர் மைதீன், அரசு விரைவு போக்குவரத்து பணிமனை தம்பு ஆகியோரும் கலந்து கொண்டு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் இராணுவ வீரரின் மனைவி மற்றும் சகோதரர் கலந்து கொண்டனர். |
|
கோபால்பட்டி கிளை நூலகம் மற்றும் இணைப்பு தி,வடுகபட்டி பகுதிநேர நூலகம் இணைந்து இன்று 24.01.23 நூலக நண்பர்கள் திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் நூலக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழாவில் 1.சே.பாலமுருகன் ( சமூக ஆர்வலர்) 2.P.நாகராஜன் (BUSINESS TEXTILES MEN) 3.A.மாதவன்(BUSINESS MEN) 4..ச.கோகிலா லெட்சுமணன் (9வது வார்டு உறுப்பினர்) தி,வடுகபட்டி பகுதி நேர நூலகத்திற்க்கு தன்னார்வலர்கள் மூலம் 4 புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளது மொத்த 18 புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பகுதி நேரநூலகர் ரா,கண்மணி கலந்து கொண்டனர் ,கோபால்பட்டி "நல்நூலகர்" விழாவில் நன்றி கூறினார் |
|
கூமாப்பட்டி அரசு கிளை நூலகத்தில் 22.1.2023 அன்று ரூ.1000 செலுத்தி 102வது புரவலராக சேர்ந்தார் கிளைநூலக வாசகர் திரு பாலமுருகன். |
|
குடியரசு தின விழா வை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மாவட்ட நூலக அலுவலகத்தில் கொடியேற்றி சிறப்பு செய்த இனிய தருணம்.
*குழந்தையின் சிந்தனை திறனை அதிகரிக்க கேள்வி கேளுங்கள்...*
பிள்ளைகள் எந்நேரமும் எந்த பயத்தினை, கவலையை மனதில் கொண்டுள்ளார்கள் என்று கவனியுங்கள். அவர்களுக்கும் தன் வாழ்வை தன் சுய விருப்பப்படி முறையாய் அமைத்து கொள்ள உரிமை உண்டு. நாம் நம் குழந்தைகளை அறிவாளிகளாக, திறமை உள்ளவர்களாக, புத்தி கூர்மை உடையவர்களாக உருவாக்க ஆசைப்படுகின்றோம். அது சரிதான். அதற்காக நல்ல பள்ளியில் சேர்க்கின்றோம். செஸ் போன்ற விளையாட்டுகளில் சேர்க்கின்றோம். கூடுதல் நேர வகுப்புகளில் சேர்க்கின்றோம். கூடவே நாமும் அலைந்து, விழித்து, நொந்து நூலாகி, பின் மதிப்பெண் வரும் பொழுது அவர்களைத் திட்டுகின்றோம்.
ஆனால் நாம் செய்யும் முயற்சி அவனை ஒரு தன்னம்பிக்கை உடைய, சிந்திக்கும் திறன் கொண்ட, உலகை அறிந்து எதிர் கொள்ளும் மனிதனாக உருவாக்குகின்றதா? என்றால் சற்று யோசிக்க வேண்டி உள்ளது.
பிறந்த குழந்தை முதல் புத்தகம் வைத்து பல கதைகளை இன்றைய நாகரீக உலகத்திற்கேற்ப கற்றுக் கொடுக்கும் தாய்மார்கள் ஏராளம். 3-4 வயதில் குழந்தை புரிந்து பேச ஆரம்பிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு சில கேள்விகளைக் கேட்டு அக்குழந்தையின் சிந்தனைத் திறனையும் கூட்டலாமே.
உதாரணமாக இந்த கதையின் முக்கிய கதாநாயகன் இவ்வாறு எதிரியினை வென்றான். நீ இந்த ஹீரோவாக இருந்தால் எந்த முறையில் எதிரியினை வெல்வாய் என்று என்றாவது கேட்டிருக்கிறோமா? அக் குழந்தை எந்த வயதாயினும் சிந்திக்க வைத்திருக்கிறோமா? அதனை எழுதச் சொல்லி படித்திருக்கிறோமா? இல்லையே!
உலகத்தினையே சிறு பெட்டிக்குள் கொண்டு வந்து உலக நாடுகளைப் பற்றி பேசியிருக்கின்றோமா? பலர் செய்திருக்கலாம். வாய்ப்பிருந்தால் நீ எங்கு வசிக்க விரும்புகின்றாய்? ஏன்? என கேட்டிருக்கின்றோமா? 18 வயது ஆனாலும் கொஞ்சம் அம்மா புடவை தலைப்பும், அப்பாவின் பாதுகாப்பும் தேடும் பிள்ளைகளாகத்தான் நம் நாட்டு பிள்ளைகள் உள்ளனர். இத்தகைய கேள்விகள் உலகினைப் பற்றி அவர்களை அறிய வைக்கும்.
வீட்டில் ஒரு அவசரம், விபத்து, ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எப்படி கையாள வேண்டும்? எந்தெந்த எண்களை அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கின்றோமா? வளரும் குழந்தைகளின் மனதில் அவனுக்குப் பிடித்த பிரபலம் யார் இருக்கின்றார்? என்ன காரணத்திற்காக அவரை பிடிக்கும் என உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை தெரிந்து கொண்டவர்களா? இல்லையே!
வாழ்க்கையில் 40-50 வயதினை கடந்தவர்களாகிய நாம் எந்த கால கட்டத்தில் துணிச்சலாக, தன்னம்பிக்கையுடன் ஒரு சவாலை, ஒரு சோதனையை ஏற்று சாதித்தோம் என எண்ணி பார்த்தோமா? அதனை இன்னும் கூடுதல் சிறப்பாக செய்திருக்க முடியுமா? மன கலக்கம் எப்படி கீழே தள்ளியது என்று ஆராய்ந்தால் ஒரு முறை உங்கள் பிள்ளைகளிடம் (ஓயாமல் நான் கஷ்டப்பட்டேன், உழைத்தேன் என்று சொல்லி நச்சரிக்க வேண்டாம்) எடுத்துச் சொன்னால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். உங்கள் மீதான மதிப்பும் உயரும்.
இளம் வயது குழந்தைகளிடம் அவர்கள் நாட்டின் தலைவராக ஆனால் நாட்டிற்காக என்னென்ன செய்வார்கள் என்று கேலி செய்யாது கேட்டிருக்கின்றீர்களா? உங்களைப் பற்றி உங்களுக்கு பிடித்தது என்ன என்ற கேள்வியினை முதலில் உங்களிடமே நீங்கள் கேட்டுப் பாருங்கள். நம் திறமை என்ன என்று முதலில் நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நம் லட்சணம் நமக்கு புரியும். அடுத்தவரிடம் சதா குறை காண்பது வெகுவாய் குறையும். முன் பின் அறியாதவர் பிள்ளைகளை அணுகும் பொழுது என்ன செய்ய வேண்டும் என விவரமாக நன்கு மனதில் பதியும் அளவு சொல்லிக் கொடுத்திருக்கின்றீர்களா?
ஒரு நண்பனுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என உங்கள் பிள்ளைகள் விரும்புகின்றார்கள் என தெரிந்து கொள்ளுங்கள். கல்லூரி படிப்பை முடித்தாலும் கூட இனிய நாட்களாக அவர்கள் படிக்கும் காலத்தில் இருந்தது எது? என்று கேளுங்கள்.
வகுப்பில் ஆசிரியர் என்றால் எவ்வளவு மரியாதையுடன் அணுக வேண்டும், பண்போடு பேசி கற்க வேண்டும் என உருட்டி மிரட்டி பிள்ளைகளிடம் வலியுறுத்துங்கள். பொங்கல், தீபாவளி, இப்படி எந்த விடுமுறையினை அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்? டி.வி. முன் அமர்வதற்காக மட்டும் தானா? அல்லது தன் உறவுகளை சந்திக்கும் மகிழ்ச்சியால் விரும்புகிறார்களா? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
யாரை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்? உங்களுக்கு பிடிக்காத நபராக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் மனதில் என்ன உண்மைகள் இருக்கின்றது என்பதனை உண்மையாய் அறிந்து கொள்ளுங்கள். சிலர் அவர்களுக்கு பிடித்த சிறுவயது பொம்மையினை தொடர்ந்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். அதன் ஆழமான காரணத்தினை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்கள் மீது வீண்பழி, தவறு சுமத்தப்பட்ட போது நீங்கள் எத்தனை வேதனையினை அனுபவித்தீர்கள். அதனை சற்று யோசித்தால் உண்மை தெரியாமல் பிறர் மீது வீண் பழி போட மாட்டீர்கள்.
உங்களுக்கு பிடிக்கும் இசை, அதன் தன்மை இது கூட உங்கள் மனநிலையினை காட்டும் அளவுகோள்தான். ஒரு ஹீரோ என்பவர் உங்கள் பிள்ளைகளின் மனதளவில் என்ன எண்ணங்களாய், கருத்தாய் இருக்கிறார் என என்றாவது கேட்டுள்ளீர்களா? இங்கு ஹீரோ என குறிப்பிடுவது வாழ்வின் ஹீரோவினை பற்றியதாகின்றது. வாழ்நாளில் நாம் எதற்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் என்று எண்ணிப் பார்க்கின்றோமா? முதலில் நம் பெற்றோர்களுக்கு நன்றி உடையவர்களாக இருக்கின்றோமா என்று நினைத்துப் பாருங்கள். பல நன்றியாய் இருக்க வேண்டிய விஷயங்களை நாம் நினைத்து பார்க்கின்றோமா?
நீங்கள் ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது யாருடன் பேசுவீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். நமக்கு ஒருவராவது இருக்கின்றார்களா என்று நினைத்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் பிரச்சினை என வரும்பொழுது அவர்கள் உங்களது குடும்பத்தில் யாரை அணுகுகின்றார்கள் என்று கவனியுங்கள். இது உங்கள் பிள்ளைகளை மேலும் புரிந்து கொள்ள உதவும்.
* சதா எதனைப் பற்றியாவது நீங்கள் கவலைப்படுகின்றீர்களா என்று உங்களையே ஆராய்ந்து கொள்ளுங்கள். அதுபோல உங்கள் பிள்ளைகள் எந்நேரமும் எந்த பயத்தினை, கவலையை மனதில் கொண்டுள்ளார்கள் என்று கவனியுங்கள். பணம் சேமிப்பின் அவசியம் பற்றி உங்கள் பிள்ளைகள் எவ்வளவு புரிந்து கொண்டு உள்ளார்கள்? ஆரோக்கியமான உணவு என்பது அவர்களின் மனதில் எந்த அளவு பதிந்து உள்ளது என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
* திடீரென அதிக பணம் வழியில் கண்டெடுத்தால் எப்படி நீங்களும், உங்கள் பிள்ளைகளும் சிந்திப்பீர்கள்? பேசிப் பாருங்கள். இதில் இருக்கும் ஆபத்தினையும் அவர்கள் உணர வேண்டும். உதாரணம் 100 ரூபாயில் 99 ரூபாயினை திருப்பிக் கொடுத்தாலும் ஒரு ரூபாயினை இவன் எடுத்து விட்டானோ என்ற சந்தேகம் தான் தலை தூக்கும். எனவே முதலில் யாருடைய பணமும் நமக்கு வேண்டாம். இன்றைய சின்ன ஆசை நாளைய பெரிய ஆசையினைத் தூண்டி ஒருவரை அழிக்கும். முறைப்படி ஒப்படைப்பது நமக்கு புகழ் தர வேண்டாம். இகழ் இல்லாமல் இருந்தால் போதும் என்பதனை புரிய வைக்க வேண்டும்.
* நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எந்த விதத்தில் எந்த விஷயத்தில் என சற்று அமைதியாய் யோசித்துப் பாருங்கள். பிள்ளைகளுக்கு பிடிக்காத பிரிவு பாடம் எது? அதனை சரி செய்ய பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? நமக்கு பிடித்த எழுத்தாளர் இவர் என சொல்லும் அளவு பல புத்தகங்களை நாம் படித்து இருக்கின்றோமா?
* நேர்மை என்பதன் பலத்தினை பிள்ளைகள் உணர்ந்து செயல்படுத்த முனைகின்றார்களா? இல்லையெனில் அதனை அவர்களே உணர எப்படி வழிகாட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்னமும் இப்படி பல கேள்விகள் நாம் நம்மையே கேட்டுக் கொள்ளலாம். நம் பிள்ளைகளிடமும் கேட்கலாம். உண்மையில் முழு முயற்சியுடன் இதனை செய்து பாருங்கள். வாழ்வை பற்றிய நம் குறுகிய எண்ண ஓட்டம் நிச்சயமாய் மாறும். நம்மை நாமே அதிகமான தீய எண்ண ஓட்டங்களில் இருந்து சுத்தம் செய்து கொள்வோம். இன்று பிள்ளைகளை வளர்ப்பதற்குள் பெற்றோர் பெரும் பாடு பட்டு விடுகின்றனர். உயிரை கொடுத்து செய்யும் எதனையும் தன் பிள்ளைகள் உணரவில்லை என கண்ணீர் சிந்துகின்றனர்.
இதற்கு ஒரு முக்கிய காரணம் சக்திக்கு மீறிய பெரும் பள்ளியில் என் பிள்ளை படிக்க வேண்டும். அவன் நினைப்பதெல்லாம் நான் வாங்கி கொடுத்து விட வேண்டும். நான் ஆசைப்படும் படி படிப்பு, வேலை, வாழ்வு என்று அவன் பெற வேண்டும் என்ற கண் மூடித்தனமான அதிக அன்பு தான். அன்பு என்பது அமைதியான அருவி போல் இருக்க வேண்டும். கட்டுக்கடங்கா காட்டு வெள்ளம் போல் இருக்க கூடாது.
அவர்களுக்கும் தன் வாழ்வை தன் சுய விருப்பப்படி முறையாய் அமைத்து கொள்ள உரிமை உண்டு. அது தடம் மாறி செல்லாது வழிகாட்டியாக அமைய செய்வதும், நல்லவைகளை அடையாளம் காட்டி கொடுப்பது மட்டும் தான் பெற்றோரின் முக்கிய பொறுப்பு.
இந்த கால கட்டம் பல கல்லூரிகளுக்கு 'சீட்' தேடி பெற்றோர் அலைகின்றனர். வருவாய் பெற்றுத் தரும் அநேக கல்வி படிப்புகளை பலர் ஏனோ ஒதுக்குகின்றனர். தானும் மனம் நொந்து பிள்ளைகளும் சில ஏமாற்றங்களை சந்திப்பதால் தன்னம்பிக்கை இழக்கின்றனர். வருங்கால சமுதாயம் இப்படி உருவாக கூடாது. நம்மை நாமே பல கேள்விகளை கேட்டுக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பல வெளிநாடுகளில் பல கேள்விகள் மூலம் பிள்ளைகளை சிந்திக்க செய்து அவர்களின் தவறுகளை அவர்களே திருத்தி கொள்ள வழி காட்டுகின்றனர். அவைகளை படிக்க நேர்ந்த பொழுது நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சுயமாய் சிந்தித்து அவர்கள் கால்களில் அவர்கள் நிற்க இத்தகு கேள்விகள் உதவுமே என்ற ஆர்வத்தினால் உருவான ஒரு துளியே இந்த கட்டுரை ஆகும். ஆக வாழ்வில் இதுபோல் சிந்தித்து செயல்பட்டு வெற்றியாளராக வாழ்வோம். நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். . மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com வாட்ஸ் ஆப் : 8668192839. இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம். |
Comments
Post a Comment