நூலகர் செய்திமடல் 8

ஆசிரியர் உரை:

நூலகர்களுக்கு பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவை:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, அமேசான் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அமேசான் கிண்டிலில் உள்ள 10 லட்சம் நூல்களை இனி அரசு பொது நூலகங்களில் அமர்ந்தபடி படிக்க முடியும்.
     டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில், 10 ஆயிரம் புத்தகங்கள் கணினியில் பிடிஃஎப் வடிவில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான இ-பருவ இதழ்கள் கணினி டெஸ்க்டாப்பில் படிக்கக் கூடிய வசதியும் உருவாக்கித் தந்துள்ளனர். tamilnadupubliclibraries.org என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து, Digital Library மூலம் அமேசான் கிண்டில் பக்கத்திற்கான வசதியைப் பெறலாம். மின்னூலாக்கத்தில் magsters என்ற வாசிப்புத் தளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் நாளேடுகள், மாத இதழ்கள் எனப் பலவற்றையும் நாம் படிக்க முடியும்.
    இந்த  திட்டத்திற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 500 பொது நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளது. அதில் தற்போது முதல் கட்டமாக 140 நூலகங்களில் மின்நூலக சேவை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என அனைத்து வாசகர்களும் பயன்பெறும் வகையில் பொது நூலகங்களில் நவீனத் தொழில்நுட்ப வசதிகளைத் தமிழக அரசு செய்து தந்துள்ளது.
    சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெளிவரும் நாளிதழ்களும், பருவ இதழ்களும், உடனுக்குடன் கிராமப்புற மாணவர்களைச் சென்றடையும் வகையில் நூலகங்களில் மின்நூலகச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
    தேசிய களஞ்சியம், பாடப் பொருட்கள், ஒலிப் புத்தகங்கள், குழந்தைகள் இலக்கியம், அறிவார்ந்த தேடுபொறி, திறந்த அணுகல் ஆராய்ச்சி இதழ்கள், புத்தக மதிப்புரை ஆகியவற்றையும் எளிதில் அணுகும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் 323 தமிழ் பருவ இதழ்களும், 23 தமிழ் நாளிதழ்களையும் வாசகர்கள் படித்துப் பயன்பெற முடியும்.
    மின்நூலகத்தில் கல்வி, பொருளாதாரம், வணிகம், தொழில், பயணம், சுற்றுலா என 40-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நூல்கள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பிக்கப்படும் மின்நூல்கள் பொது நூலக வாசகர்களுக்கு எளிதில் கிடைக்கும். இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும்  5 ஆயிரத்திற்கும் மேலான  பருவ இதழ்களும், பிரபல பத்திரிகைகள் மற்றும் செய்தித் தாள்களும் கிடைக்கும். இதன் நீட்சியாகத்தான் அமேசான் கிண்டிலில் பதிப்பிக்கப்படும் 10 லட்சம் மின்நூல்களை வாசகர்கள் நூலகங்களில் படிக்க முடியும்.
    பொதுவாக ஒரு புத்தகம் அச்சில் வந்தால் அது நூலகத்திற்கு வந்துசேரக் குறைந்தது ஒருவருடம் ஆகும். ஆனால், கிண்டிலில் அதைவிட வேகமாக வந்துவிடுகிறது. எல்லாப் புத்தகங்களையும் வாசகர்கள் வாங்கிப் படிப்பது என்பது  சிரமம்.
    தமிழ் நாடு அரசு பொது நூலகத் துறை நூலகங்களை நவீனமயமாக்கும் வகையில், மின் நூலகச் சேவை அறிமுகம் செய்து, இலவச Wifi இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    ஆய்வு இதழ்களை நூலகங்களில் இலவசமாக வந்து படிக்கலாம் என்ற நிலை, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இது  தமிழ்நாடு பொது  நூலகத்துறையின்  தொழில்நுட்பப் புரட்சி எனலாம். 
    இந்தியாவில் வேறெந்த மாநிலமாவது நூலகங்களில் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. அநேகமாகத் தமிழ்நாடே இதில் முன்னோடியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
    இந்த அருமையான திட்டத்தின் பயன்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பும், கடமையும் நூலகர்களைச் சாரும். கணினியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கையாண்டு வரும் எனக்கே இந்த திட்டத்தின் நோக்கம், இந்த திட்டத்தின் பயன்களை வாசகர்களிடையே எவ்வாறு கொண்டு சேர்ப்பது பற்றிய புரிதல் ஓரளவு மட்டுமே இருக்கிறது. அதுவும் பல தளங்களில் பார்த்து, படித்துத் தெரிந்து கொண்டேன்.
    கணினியைக் கையாள்வது தொடர்பான ஆட்டிப்படை பயிற்சிகூட நூலகர்களுக்கு இதுநாள் வரை கொடுக்கப்படவில்லை என்று பல மாவட்ட நூலகர்கள் தெரிவிக்கிறனர். நிலைமை இப்படி இருக்க, இந்த இத்திட்டத்தில் இந்த மாதம் பயனடைந்த பயனாளர்கள் எண்ணிக்கை எத்தனை என்று கேட்கப்படுகிறது. கேட்கிறார்களே என்பதற்காக ஏதோ ஒரு எண்ணிக்கையைக் கொடுத்து விடலாம். ஆனால், இந்த திட்டத்திற்காக நமது வரிப்பணம் பலகோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, திடீரென்று உயர் அதிகாரி யாராவது நூலகத்திற்கு வந்து இந்த திட்டத்தைப் பற்றிக் கேட்டால் நாம் இப்படி விளக்க முடியும்?
    எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த திட்டத்தின் பயன்களைப் பயனாளர்களிடம் கொண்டு சேர்ப்பது கீழ்நிலை பணியாளர்கள்தான். இந்த திட்டத்தின் பயன்களைப் பயனாளர்களிடம் கொண்டு சேர்க்க இருக்கும் நூலகர்களுக்கு இது தொடர்பான பயிற்சியும் வழிகாட்டுதலும் கொடுப்பது அவசியம். இல்லையென்றால், இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். நூலகத்துறை நூலகர்களுக்கு போதிய பயிற்சியும் வழிகாட்டுதலும் உடனடியாக கொடுக்கும் என்று நம்புவோமாக! 

நன்றி.

மீண்டும் சந்திப்போம்!

 - சி. சரவணன், ஆசிரியர், நூலகர் செய்தி மடல்.


பொருநை நெல்லை 6 வது புத்தகத்திருவிழா - நூல் வெளியீட்டு விழா மாவட்ட நூலக அலுவலர்  திரு.  லெ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கடத்தூர்கிளை நூலகம் சார்பில் இலக்கியத் திருவிழா 

    கடத்தூர் கிளை நூலகம் தகடூர் புத்தகப் பேரவை இணைந்து நடத்திய இலக்கியத் திருவிழா நல்லகுட்லஹள்ளி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் இரா. சென்ன கிருஷ்ணன் தலைமை வகித்தார். நூல் அறிமுகப் போட்டி, திருக்குறள் போட்டி நடைபெற்றன.  போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு  வட்டார கல்வி அலுவலர்கள்  இ.மகேந்திரன், மு. முருகன் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினர். தருமபுரி குறள் நெறிப் பேரவை அமைப்பாளர் புலவர் மு.பரமசிவம் சிறப்புரை ஆற்றினார். கடத்தூர் கிளை நூலக நூலகர் சி. சரவணன், தருமபுரி மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்ற தலைவர் பாவலர் கோ. மலர்வண்ணன் முன்னணி வகித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் வெ.வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கோ.நேதாஜி நன்றி கூறினார்.

Dr.P.Mohanathan of Anna centenary received the LPA Excellence Award 2023 for Public Library Professionals at the I-KOAL 2023 International Conference held in C-DAC, Mumbai.
உலக மகளிர் தினம் - வாழ்த்துகள் 
- நூலகர் சி. சரவணன்.
  இன்று, கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் பெரிய அளவில் முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 இருந்த போதிலும், இன்றைக்கு மணவிலக்கு, மணமுறிவு, குடும்ப வாழ்க்கை சிதறும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் கண்டவுடன் காதல், கல்லூரிக் காதல், பள்ளிக் காதல், செல்போன் காதல் எல்லாம் அதிகரித்து வருகிறது.
 பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் ஏற்படும் பாதுகாப்பை உணராமல், இனக்கவர்ச்சிக்கு இறையாகி, நல்ல குடும்பமா? என்று யோசிக்காமல், அவசர கதியில் ஓடிப்போய் மாட்டிக் கொண்டு, வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 
*பெண்களே! பெண் சுதந்திரம், பெண் அடிமைக்கு எதிரான குரல், சமூக நீதி - என்றெல்லாம் பேசிக்கொண்டு, சிலர் தங்களை சமூக நீதி காவலராக அடையாளப்படுத்திக் கொண்டு, ஆண்கள் செய்யும் தவறுகளை செய்யத் தூண்டும் போலி சமூக போராளிகளின் பிற்போக்கு வாதங்களை நம்பி ஏமாற வேண்டாம்!*
*காலம் காலமாக இந்தச் சமூகம் பெண்களுக்கு கூறிவரும் நல்ல பல கருத்துக்களை ஆய்வு செய்து, இன்றைய நடைமுறைக்கு ஏற்ப, திட்டங்களை வகுத்துக் கொண்டு வாழப் பழகுங்கள், பெண்களே!*
 அனைவருக்கும் உலக பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!
நன்றி.

    கூண்டுக்குள் வானம் - புத்தக தான நிகழ்வு 

கூண்டுக்குள் வானம்   - பொருநை நெல்லை 6ஆம் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை சிறைச்சாலை  கைதிகளுக்கான புத்தக தான பெட்டியை பார்வையிடும்  மாண்புமிகு கனிமொழி MP, திருநெல்வேலி MP, பாளை MLA,  மாவட்ட ஆட்சியர், இவர்களுடன் நமது  மாவட்ட நூலக அலுவலர் மற்றும்  சிறை அலுவலர்கள்.
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் படித்து, அரசுப் பணி நியமன ஆணை பெற்று வந்த குரும்பலூர் தன்னம்பிக்கைப் பேச்சாளர் திரு.வைரமணி அவர்களின்  மகன் திரு வை.பிரதீப் அவர்களை மாவட்ட நூலக அலுவலர் மற்றும் நூலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முயற்சி செய்வதை  எப்போதும்  தள்ளிப் போடாதீர்கள்!

முயற்சி செய்வதை
எப்போதும்
நிறுத்தி விடாதீர்கள்!

ஏனென்றால்,
முயற்சியின்மையே 
தோல்வி. 

முயற்சி செய்யுங்கள்!

முயற்சி செய்தால்
வெற்றி கிடைக்கும்
இல்லையேல் 
அனுபவம் கிடைக்கும்!

அந்த அனுபவம்
அடுத்த முயற்சியை
வெற்றியாக மாற்றலாம்!

அதனால் தான்
முயற்சி செய்பவர்களுக்கு 
தோல்வியே இல்லை!

முயற்சி செய்தாலே
வெற்றியோ அல்லது
அனுபவமோ
கிடைத்து விடுகிறது!

முயற்சி செய்யாதவர்கள்
மட்டுமே தோற்கிறார்கள்!

எனவே தான்
முயற்சி செய்யுங்கள்!

வெற்றியை அடையும் வரை
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்! 

எதற்காகவும்
பின்வாங்காதீர்கள்!

எதற்காகவும்
முயற்சியை கைவிடாதீர்கள்!

தடைகள் வரும்
சோர்வு வரும்
அவற்றை
சரிசெய்துவிட்டு

மீண்டும்
முயற்சி செய்யுங்கள்

மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யுங்கள்!

முடியாது என்பார்கள்
வீண்முயற்சி என்பார்கள்!

சாத்தியமே இல்லையென
சத்தியம் செய்வார்கள்!

அவர்களை நம்பாதீர்கள்
உங்களை நம்புங்கள்!

ஒவ்வொரு
கண்டுபிடிப்புகளுக்கு முன்பும்
அதைத்தான் சொன்னார்கள்!

ஒவ்வொரு சாதனைகளுக்கு முன்பும்
அப்படித்தான் சொன்னார்கள்!

எனவேதான்
பிறர் கூறுவதை அப்படியே நம்பாதீர்கள்! 

உங்களுக்குள் என்ன
கூறுகிறதோ
அதை மட்டும் நம்புங்கள்!

அதற்காக
முயற்சி செய்யுங்கள்!

வெற்றியை அடையும் வரை
முயற்சி செய்யுங்கள்!

வெற்றி பெறுங்கள்! 

"குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்டClick Here "


மணலூர்பேட்டை நூலகத்தின் 58 ஆவது ஆண்டு விழா

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மார்ச் 05, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தின் 58 ஆவது ஆண்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
    இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக் குழுத்தலைவர் கு.ஐயாக்கண்ணு தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட தலைவர் அம்மு ரவி, முதுகலை தாவரவியல் ஆசிரியர் அரிமா தா.சம்பத், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பணி நிறைவு பெ.முனியன், வர்த்தகர் சங்க துணைச் செயலாளர் கு.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டக் குழு துணைத் தலைவர் இளங்கவி சண்முகம் வரவேற்று பேசினார்.
    நல்நூலகர் மு.அன்பழகனிடம் திருவண்ணாமல ஹோமியோபதி மருத்துவர் எம்.ராமானுஜம்,  மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மா.தம்பிதுரை ஆகியோர் வாசகர்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள நூல் அடுக்குகளை நன்கொடையாக வழங்கினர்.
    திருக்கோவலூர் வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார. உதியன் நூலகப் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கிப் பாராட்டி பேசினார். தமிழ் காமிக்ஸ் வாசர் வட்டம் சார்பில் காவலர் ஜானி சின்னப்பன் தமிழ் காமிக்ஸ் நூல்களை நன்கொடையாக வழங்கினார். விளந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜகோபால், நூலகப் புரவலர்கள் மொ.நடராஜன், சி.சக்கரை, ம.வெங்கடேசன், எம்.ஜி.கண்ணன், ம.பாலு நாயுடு, கு.அய்யாசாமி, பி.ராமமூர்த்தி, எஸ்.ஜெயக்கண்ணு, ஒவியர் சு.செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் அ.கிருஷ்ணமூர்த்தி, ச.தேவி, கி.பாஸ்கரன், பெ.விக்னேஷ் செய்திருந்தனர் வாசகர் வட்ட பொருளாளர் வீர.சந்திரமோகன் நன்றி கூறினார்


திருவாரூர் புத்தகத் திருவிழா மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களது திருக்கரங்களால் புத்தக திருவிழா இலட்சனை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில்  கலந்து கொண்டமாவட்ட  நூலக அலுவலர் மற்றும் நூலகர்கள்.
இடம் : S.S. நகர் புதிய பேருந்து நிலையம், அருகில், திருவாரூர்.
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் உலக மகளிர் தின விழா 2023

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில்  உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார்  பல் அறுவை சிகிச்சை மருத்துவர் திருமதி டாக்டர்  சரண்யா சுரேஷ் அவர்கள். மாவட்ட நூலக அலுவலர் திருமதி பா.ரெங்கநாயகி அவர்கள் விழாவுக்கு தலைமை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில் மகளிர்க்கான மியூசிக்கல் சேர் ,பலூன் உடைத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெண்களின் பெருமைகள் குறித்து  நூலகர்களும்  வாசகர்களும்  சிறப்பாக பேசினர். விழாவில்  நூலகப் பணியாளர்கள், வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணா முழு நேர கிளை நூலகத்தில்  08:03:2023 அன்று  மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
09-03- 2023 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டை, வட்டார நூலகத்தில் மகளிர் தின விழா மற்றும் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை வன்னிய தேனாம்பேட்டை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வாசகர்கள் திரளாக 
 கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நூலகர் பொறுப்பு வகித்த இளவயது சிறுமி..

    அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் 1000 புத்தகங்கள் படித்ததால் 4 வயது சிறுமி நூலகர் ஆனாள். இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமி என்ற பெருமையை இவள் பெற்றாள்.
படிப்பதில் ஆர்வம்
    அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள செயின்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் ஹலீமா. இவர் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் ஆவார். இவரது மகள் பாலியாமேரி அரானா (4). இவளுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். தனது 3 வயதில் படத்துடன் கூடிய புத்தகத்தை படிக்க தொடங்கினாள். அதை பார்த்த தாயார் ஹலீமா அவளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டினார். அதைத் தொடர்ந்து 4 வயதில் சுமார் 1000 புத்தகங்களை அரானா படித்து முடித்தார்.
    இதுகுறித்து அமெரிக்க நூலக கூட்டமைப்புக்கு அரானாவின் தாயார் ஹலீமா விவரமாக கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து 2017-ல் நூலக கூட்டமைப்பு அரானாவை கவுரவிக்க முடிவு செய்தது. அதையடுத்து அரானா ஒருநாள் நூலகராக பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அமெரிக்க நூலக கூட்டமைப்பு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட அரானா நூலகர் இருக்கையில் அமர வைத்து கவுரவிக்கப்பட்டார்.
    இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமி என்ற பெருமையை இவள் பெற்றாள்.
- புகழானந்தம் 


தேனி மாவட்டம் சார்பில் நடைபெறும் மாபெரும் புத்தக திருவிழா துவக்க விழாவில் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய உள்ளாட்சி துறை அமைச்சர் மாண்புமிகு ஐ.பெரியசாமி,  தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட நூலக அலுவலர், நூலக ஆய்வாளர் கலந்து கொண்டனர்.

செஞ்சி முழு நேர நூலகத்தில் முப்பெரும் விழா... 
நூலக நண்பர்கள் திட்டம்இலவச பைபர் - வை பை இணைப்பு விழா
உலக மகளிர் தின விழா...
    செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவர் திரு கே எஸ் எம் மொத்தியார் அலி மஸ்தான் அவர்கள் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்,
    மக்களை தேடி அரசு என்ற திட்டத்தின் படி இல்லம் தேடி மருந்துவம், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி நூல்கள் போல எல்லோருக்கும் எல்லாம் என்று தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். அதன்படி வாசிப்பின் முக்கியத்துவத்தை நமது மக்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகள், மாற்றுத்திறனாளிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நூலகம் செல்ல சிரமம் இருக்கலாம், இவர்களைப் போன்றவர்களுக்கு புத்தகங்களை வாசிக்க இந்த திட்டம் உதவும்.
 செஞ்சி முழு நேர நூலகத்தில்  இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள தன்னார்வளர்கள் R லாவண்யா, A கமலக்கண்ணன் , Eலாவண்யா, S.சுரேஷ்குமார் மற்றும் S.சரண்யா  ஆகியோர்களுக்கு திரு மொத்தியார் அவர்கள். மஸ்தான் அவர்கள் புத்தகப் பைகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்கள்,
    இலவச வைஃபை இணைப்பு தொடக்க  விழாவை திரு கோ. தமிழரசன் அய்யா அவர்கள் பேருராட்சி தலைவர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டதில் நூலகத்தில் வரும் மாணவர்கள் தங்களது மடிக்கணினி, கைபேசி உதவியுடன் இந்த இணைய தள வசதியைப் பெற்று, மின்நூல்கள், மின்னணு ஆய்விதழ்கள், உபயோகமான வலைதளங்கள் மூலம் வேண்டிய தகவல்களைப் பெறலாம். போட்டி தேர்வுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    உலக மகளிர் தின விழாவில் திரு KS M மொத்தியார் அவர்கள் நூலகத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும், புத்தகங்கள் வழங்கி பொன்னாடையிட்டு மகளிர் தின விழா வாழ்த்துகளை தெரிவித்தார்கள்..
    இந்நிகழ்வில் கவிஞர் செஞ்சி தமிழினியன், வாசகர் வட்ட தலைவர் தே.செந்தில் பாலா, வாசகர் வட்ட  துணை தலைவர் அ.கமலக்கண்ணன், ஜனணி, செண்பகம், ரமேஷ், மீரா, சாந்தி, மற்றும் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நூலகர்கள் எ.பூவழகன்
மு.இந்திரா காந்தி, மற்றும் நூலக பணியாளர் S. சிவா செய்திருந்தார்கள் .


    கடலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் 12.3.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி அளவில் கடலூர் புத்தகத் திருவிழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சிறைச்சாலை கைதிகளுக்கு புத்தகம் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் தமிழ் அரிமா திரு பி. எம். பாஸ்கரன் அவர்கள், கடலூர் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் திரு செந்தில்குமார் அவர்களிடம் திருக்குறள் புத்தகங்கள் 400 வழங்கினார், உடன் கடலூர் தமிழ் சங்க செயல் தலைவர் திரு ராஜதுரை மாவட்ட மைய நூலகர் திருமதி சு பாப்பாத்தி உலக திருக்குறள் பேரவை செயலாளர் ஆசிரியர் சீ அருள்ஜோதி, நூலகர் திரு சந்திரபாபு, பேராசிரியர் ஜானகிராஜா, திருமதி ராணி ராஜதுரை, ஆசிரியர் திரு குறிஞ்சி ரவி, செவிலியர் திருமதி வனிதா, திரு காரை பழ ஆறுமுகம் மற்றும் பல தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நூலகத்தில் உலக மகளிர் தின விழா

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்  முழுநேர கிளைநூலகத்தில் (14/03/2023) அன்று விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவமாணவிகள்  பொது நூலகத்தைப்பற்றி களஆய்வு பணிகள் மேற்கொண்டு பயன்படுத்தினர்.
 திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தில் உலக மகளிர் தின விழா
    ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் இயங்கும் திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தில் உலக மகளிர் தின விழா இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக் குழுத் தலைவர் நூலக ஆர்வலர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார் பணிநிறைவு பெற்ற ராணுவ வீரர் கு.கல்யாண்குமார், கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன், நூலகர் கே.வி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்று பேசினார். நூலகர் வி.தியாகராஜன் தொடக்க உரையாற்றினார்.
    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகராட்சி ஆணையர் வே.லோ.ச.கீதா அருட்கவிஞர் அருள்நாதன் தங்கராசு எழுதிய பெண்ணிய விடுதலையால் வென்றிடுவோம் எனும் நூலை வெளியிட எழுத்தாளர் கலைச்சித்தன் பெற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தேவிபத்மநாபன், சுசிலா ராஜா, நூலகர்கள் இரா.வசந்தி, கே.சற்குணவதி. மு.சாந்தி, வே.ஆனந்தி ஆகியோர்களுக்கும் மற்றும் நூலகப் பெண் பணியாளர்களுக்கு பரிசும் பொன்னாடையும் அணிவித்து சிறப்பித்தார். கவிஞர்கள் மு.கலியபெருமாள், தமிழ் நிலவன், உலகமாதேவி, நூலகர் து.படவேட்டான் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நூலகப் பணியாளர்கள் சு.சம்பத், ச.தேவி, சந்தியா, ஆ.வனிதா செ.சரண்யா, கு.வாசுகி ச.கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.    நூலகர் இரா.வசந்தி நன்றி கூறினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம்  தளுகை கிளை நூலகத்தின் சார்பாக 8.3.2023 அன்று உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு த.மங்கப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி,, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. பள்ளி தலைமையாசிரியை திருமதி ச.ஜெயந்தி அவர்கள் தலைமை வகித்தார். ஆசிரியைகள்  பா.புவனா,  கோ.கீதாஞ்சலி, திருமதி இரா.வெண்ணிலா,  இரா. அனுபாமா, அ.பிரியதர்ஷினி, ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை இரா.வசந்தி அனைவரையும் வரவேற்றார். நூலகர் வீ.கனகராஜ் நன்றி கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற 6 வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவில்  பழவூர் கிளைநூவக நூலகர் திருக்குமரன் புத்தக தானம் வழங்கிய தருணம் உடன் நல்நூலகர் சூ.பிரம்மநாயகம் நூலகர்கள் கே.சுந்தர் முனைவர் இசக்கிமுத்து மாரியப்பன்  ஆறுமுகம் முருகன் பாலசுப்பிரமணியன் செலின்உள்ளிட்டோர்.
  நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள்,  கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.


        

Comments

  1. நூலகர் செய்திமடல் இதழ் மேலும் வளர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. சிறப்பான தொண்டு. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31