நூலகர் செய்திமடல் 9

ஆசிரியர் உரை:


நூலக நண்பர்களுக்கு வணக்கம்.
    தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை / பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை நிறைவேறியது. சில அறிவிப்புகளை நாம் எதிர்பார்த்தோம். குறிப்பாக, ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம், கலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் நிரப்புவது, தகுதியுள்ள நூலகங்கள் தரம் உயர்த்துவது - முதலான அறிவிப்புகளை நாம் எதிர்பார்த்தோம். அவை தொடர்பான அறிவிப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும், ஊர்ப்புற நூலகர்கள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகப் பள்ளிக் கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியது சற்று ஆறுதலாக இருக்கிறது. நூலக சட்டத் திருத்தக் குழு அதன் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழு பரிந்துரைகளில் நூலகர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று நம்புவோம்.
     அடுத்து, நூலகங்களின் சேவைகள் காலத்திற்கு ஏற்ப நவீன மயமாக்க சில அறிவிப்புகளை அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
     கடந்த ஆண்டு புத்தகக் காட்சிகள் நடத்த ரூ. 4.96 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தகத் திருவிழாக்களின் நூலகர்கள் அதிக அளவில் பங்கெடுக்க வேண்டும்.  நூலகத் துறையின் சேவைகளை மக்களுக்கு விளம்பரப்படுத்த புத்தகத் திருவிழாக்களை நூலகர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
      கடந்த ஆண்டு 5 இடங்களில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்த வழிவகை செய்ய வேண்டும்.
      ரூ.15 கோடியில் 20 மாவட்ட மைய நூலகங்கள், 30 முழு நேர நூலகங்களின் நூலகக் கட்டடங்கள் சீரமைக்கப்படும் என்னும் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கிளை, ஊர்ப்புற நூலகங்கள் கட்டடங்களும் சீரமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அடுத்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று நம்புவோம்.
      அடுத்து, ரூ.76 லட்சம் செலவில் நூலகர்களுக்குத் தொடர் பயிற்சி அறிவிப்பு. நூலகர்களுக்குப் பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவை என்று நான் ஏற்கனவே கட்டுரை எழுதி இருக்கிறேன். இயக்குநர் அவர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். வழக்கமாகக் கொடுக்கப்படும் stress management, skill develepment பயிற்சி இல்லாமல், கணினி பயிற்சி, நூலக சேவையை மேம்படுத்துவது தொடர்பான பயனுள்ள பயிற்சி கொடுப்பது அவசியம்.    
 
நல்வாழ்த்துகளுடன்...
சி.சரவணன், ஆசிரியர்,
நூலகர் செய்தி மடல்.
-------------------------------------------------------

தருமபுரி மாவட்ட நூலக வளர்ச்சி தன்னார்வலர் குழு

நோக்கம்:

  1. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்குக்கும் ஓராண்டுக்குள் கட்டமைப்பை மேம்படுத்துதல்.
  2. நூலகங்களுக்கு தேவையான தளவாடங்கள் பெறுதல்.
  3. இலவச கட்டடங்களில் இயங்கும் நூலகங்களுக்கு சொந்த கட்டடம் ஏற்படுத்துதல்.
  4. வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நூலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்டுதல்.
  5. குடிநீர், கழிவறை வசதி இல்லாத நூலகங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்துதல்.
  6. நிலுவை இல்லாமல் நூலக வரி வசூல் செய்தல்.
  7. நூலகங்களுக்கு தேவையான தின / பருவ இதழ்கள் நன்கொடையாக பெறுதல்.
  8. நூலகர்களுக்கு கணினி பயிற்சி அளித்தல்.
  9. நூலகச் சேவையை மேம்படுத்த நூலகர்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல்.
  10. நூலகங்களுக்கு வண்ணம் தீட்டுதல்.
  11. பழுத்தடைந்த நூலகக் கட்டடங்களை பழுது பார்த்தல்.
  12. நூலகம் இல்லாத பெரிய ஊர்களில் நூலகங்கள் அமைதல்.
  13. வாட்ஸ் ஆப் குழு ஆரம்பித்து நூலகர்களை ஒருங்கிணைத்தல்.
  14. இணையதளம் தொடங்கி, நூலக வளர்ச்சிக் குழுவின் செயல்பாடுகளை பொது மக்கள் அறியச் செய்தல். இதன் மூலம் நூலகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த பொது மக்கள் ஆதரவை திரட்டுதல்.

செயல் திட்டம்:

  1. நூலக வரி வசூல் 100 சதம் என்னும் இலக்கை அடைய அனைத்த ஊரக வளர்ச்சி அலுவலர்களையும் சந்தித்து வலியுறுத்துதல்.
  2. சொந்த கட்டடம் இல்லாத நூலாங்களுக்கும், வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நூலகங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்துதல்.
  3. குடிநீர், கழிவறை வசதி இல்லாத நூலகங்களுக்கு குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்த ஊராட்சி பிரதிநிதிகளையும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் சந்தித்து வலியுறுத்துதல்.
  4. உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் நூலகங்களுக்கு வண்ணம் தீட்டுதல்.
  5. பழுத்தடைந்துள்ள நூலக கட்டடங்களை பழுது பார்க்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து வலியுறுத்துதல்.
  6. நூலக வசதி இல்லாத ஊர்களில் உள்ளூர் மக்கள் மூலம் நூலகம் தொடங்க ஏற்பாடு செய்தல்.

நிர்வாகக் குழு:

ஒருங்கிணைப்பாளர்: சி.சரவணன்உறுப்பினர்கள்: எம். முனிராஜ், தீ. சண்முகம், கோ.கணேசன், சி. சரவணகுமார், மு.குமரன். 

-------------------------------------------------------


நீலகிரி மாவட்ட புத்தகத் ‌திருவிழாவில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் திருமதி வசதமல்லிகா நினைவுப் பரிசு வழங்கியபோது. உடன்  நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள்


மதுரையில் வைகை இலக்கியத் திருவிழா! 

மதுரை மாவட்டம் உலக தமிழ் சங்க கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை, நூலக துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வைகை இலக்கிய திருவிழா 2023-ஐ நடத்தியது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு பிறகு முதன்முதலாக நெல்லை மாவட்டத்தில்தான் இலக்கியவிழா நடைபெற்றது. அடுத்தப்படியாக சென்னை, கோவை, தஞ்சையில் நடந்தது. அதனையும் தாண்டி மதுரை உலக தமிழ் சங்கத்தில் இவ்விழா நடைபெறுவது பொருத்தமானது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கீழடி 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க காலத்தில் பெருமை வாய்ந்ததாக வைகை நதி பேசப்படுகிறது. வைகையின் சிறப்புகளை எடுத்துச்சொன்னது  இலக்கியவாதிகளும், அவர்களது படைப்புகளும்தான். அதனால்தான் வைகை இலக்கியவிழா என்று இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். 256 கி.மீ. நீளமுள்ள வைகை நதிக்கரையில் அமைந்துள்ள சுமார் 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் இருக்கின்றன என்பதை பார்க்கும் போது வைகை நதிக்கரையோரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். அறிவியல் மூலமாக நிரூபிக்கக்கூடிய ஒரே மொழி, ஒரே இனம் தமிழும், தமிழனும்தான். இவ்விழாவிற்கு வருகை தந்துள்ளவர்கள் கண்டிப்பாக கீழடி அகழாய்வு மையத்திற்கு செல்லவேண்டும். சங்ககால இலக்கியத்திலும், பக்தி இலக்கியங்களிலும் நவீன கால இலக்கியங்களிலும் மதுரையை சேர்ந்தவர்களே கொடிகட்டி பறக்கிறார்கள். இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் போற்றக்கூடிய வகையில் விழாவை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-
தமிழர்களுடைய பாரம்பரியமும் மதுரையில் இருந்துதான் ஆரம்பித்துள்ளது. மதுரையில் தான் முதன்முதலாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. கீழடி அகழாய்வு தமிழர்களுடைய பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது. ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகள் இப்போது தனியார் பள்ளிகளைவிட திறமை வாய்ந்ததாக மாறியுள்ளது என்றார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், எந்த இனத்திற்கும் மொழிதான் அடையாளமாகவும், முக்கிய அங்கீகாரமாகவும் இருக்கிறது. அதிலும் நம் மொழி, நம் இனம், நம் கலாசாரம், நம் பண்பாடு எவ்வளவு சிறப்பானது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது மொழி. ஒரு மொழியின் சிறப்பை வெளிப்படுத்துவது இலக்கியம். அந்த இலக்கியம் அனைத்து தலைமுறைக்கும் சென்றடைய வேண்டும். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5 இடங்களில் நடத்த சுமார் ரூ.5 கோடி ஒதுக்கினோம். இந்த ஆண்டு பல இடங்களில் நடத்துவதற்கு ஏதுவாக ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளோம் என்றார்.
-----------------------------------


திருவாரூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, பபாசி இணைந்து  நடத்த உள்ள முதல் புத்தகத் திருவிழாவிற்கான விழிப்புணர்வு  கையெழுத்து  இயக்கம் திருத்துறைப்பூண்டி பிர்லியண்ட் கல்வியல் கல்லூரியில் இன்று 
(23 .03.23) நடைப்பெற்றது.திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர்  திருமதி கவிதா பாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார்.ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் , பாலம் சேவை நிறுவன செயலாளர்  செந்தில்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி, வாசகர் வட்டத் துணைத் தலைவர் கமல்,  கல்லூரி நிர்வாக அலுவலர் முத்தலிப்  ஆகியோர் கலந்து கொண்டனர் .
நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் பேசும் போது " ஊரு கூடினால் தான் தேர் இழுக்க முடியும் என்பது போல திருவாரூரில் கூடினால்தான் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெறும் எனவே கல்லூரியின் சார்பாக அனைவரும் குடும்பத்தோடு வருகை தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் இன்றைய போட்டி நிறைந்த உலகில் அனைத்து துறைகளிலும் அறிவு விரிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் அது மட்டுமல்லாமல் ஆசிரியர்களாக மாற உள்ளதாக தான் வருங்கால சமுதாயத்தை கட்டமைக்க உள்ளீர்கள் என்ற பொறுப்போடு புத்தக வாசிப்பு பழக்கத்தையும் வளர்த்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறேன். மாற்றம் வேண்டாம் என நினைக்கும் ஒரு சில மனிதர்கள் அப்படியே தங்கி விடுகின்றனர் மாற்றத்தை எதிர்கொள்கின்ற, ஏற்றுக் கொள்கின்ற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர் என்று பேசினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் விமலா வரவேற்றார். துணை முதல்வர் தவமலர் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை மணலி நூலகர் செந்தில் நாதன்  ஏற்பாடு செய்திருந்தார் .

தேனிமாவட்டம் முதல் புத்தக திருவிழாவில் 03.03.23 முதல் 13.03.23 வரை சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி R.V.சஜீவனா IAS அவர்களிடம் நினைவுப் பரிசும்  பாராட்டுச் சான்றிதழும் பெறும் நூலகர்கள்.

கரூர் மாவட்ட நூலக வளர்ச்சிப் பணிகள் கூட்டம் 
நூலக நண்பர்கள் திட்டம் & நூலக வளர்ச்சிப் பணிகள்  கூட்டம் இன்று (19.03.2023 - ஞாயிறு) மதியம்  கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
நூலக நண்பர்கள் திட்டம் நடைமுறை  குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
நூலக வளர்ச்சிப் பணி குறித்து நூலகர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நூலக நண்பர்கள் திட்டத்தில் நன்கொடை உறுப்பினர்களாக 167   நபர்களுக்கானத்  தொகை ரூ.5010/- யை  நன்கொடையாக  பொறியாளர். திரு பி. சிவக்குமார் அவர்கள் வழங்கினார்கள்.
மாவட்ட மைய நூலக  தன்னார்வலர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயார் படுத்தி வரும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான பாட நூல்களை கரூர் பரணி கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர். சி. இராமசுப்ரமணியம் அவர்கள் வழங்கினார்கள்.
கரூர் ஊதிய மையத்தை சேர்ந்த மாவட்ட மைய / கிளை / ஊர்ப்புற/பகுதி நேர  நூலகர்கள் இன்று 4 பெரும்புரவலர்களையும், 52 புரவலர்களையும் சேர்த்துள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சி வழங்கப்பட்டது.  தன்னம்பிக்கைப் பயிற்சியை லயன் சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் அவர்கள் மாணவர்களிடையே தன்னம்பிக்கை உரையை நிகழ்த்தினார். மாணவர்கள் பல்வேறு திறன்களுடன் உள்ளனர் அவர்களின் திறன்கள் வெளிப்படுத்தும் போது தன்னம்பிக்கை தேவை எனக் கூறினார். மாணவர்கள் நல்ல செயல் நல்ல நடத்தை நற்பண்புகள் ஆகியவை மாணவர்களுக்கு தேவையான ஒழுக்கங்கள் ஆகும் எனக் கூறினார். தாய் தந்தை பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்; பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் எனக் கூறினார். தேர்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருக்க நாம் நம்மை சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியில்  மாணவர்கள் அனைவருக்கும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியாக புரவலர்கள் சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 100 ஆவது புலவராக பெருங்கட்டுர்  சேர்ந்த சசி ஜெனரல் ஸ்டோர்ஸ் உரிமையாளர் அ. சசிகுமார், கோகிலா மற்றும் 101 ஆவது  புரவலராக தென்கழனி சேர்ந்த மு. கார்த்திகேயன் ஆகியோர் தலா ரூபாய் 1000 செலுத்தி புரவலர்களாக இணைந்தனர். நிகழ்வில் நூலகப் புரவலர்கள் ப. குப்புராஜ், பெருங்கட்டூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோ. லோகநாதன் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் செய்திருந்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கடலூர் மாவட்டம் நூலகர்கள் கலந்துகொண்டபோது...

வீட்டுக்கு ஒரு நூலகம்
எஸ் ஆர் அரங்கநாதன் நூலகம் மற்றும் புதுகை பண்பலை 91.2 இணைந்து 28 3 2023 அன்று டி.இ. எல் சி நடுநிலைப்பள்ளியில் "வீட்டுக்கு ஒரு நூலகம் "மற்றும் காலநிலை மாற்றம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்குபள்ளி தலைமை ஆசிரியை வனிதா மனோரஞ்சிதம் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் ரூத் டெய்சி சாந்தகுமாரி முன்னிலை வைத்தார் .
"வீட்டுக்கு ஒரு நூலகம்," பற்றி நூலக நிர்வாகிகோ. சாமிநாதன்  வாசிப்பு எவ்வளவு மனிதர்களை உயரச் செய்திருக்கின்றது, என்பதையும் அதனால் நூல்களை வாங்கவும், அவற்றை பயன்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பது குறித்து பேசினார். புதுகை பண்பலை 91.2இயக்குனர் விஜிக்குமார் அவர்களே இன்றைக்கு வெப்பம் அதிகமாகும் மழைக் காலங்களில் மழை அதிகமாக இருப்பதும் இயற்கையின் கால மாற்றந்தான்  என்று கூறினார். எஸ்.ஆர் நூலகத்தின் சார்பாக 20 மாணவ, மாண வியர்களுக்கு தலா 6 நூல்கள்," வீட்டுக்கு ஒரு நூலகம்" என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. நன்றியுரை வழங்கிய பள்ளியின் ஆசிரியர் ஹெலன் எழிலரசி "வீட்டுக்கு ஒரு நூலகம்" என்ற அமைப்பில் எங்கள் பள்ளியை தேர்ந்தெடுத்தற்கு நூலக நிர்வாகிக்கு நன்றி நிகழ்ச்சி நாட்டுப்பனுடன் நிறைவேற்றது.

24.03.23 அன்று தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்வில் நியு செஞ்சுரி புத்தக நிறுவனமும், தேனி மாவட்ட நூலக ஆணைக்குழுவும் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சியை மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டபோது.

நூலக நண்பர்கள் திட்டம் 2023 மார்ச் மாத ஒருங்கிணைப்பு கூட்டம்
 தென்காசி வ உ சி வட்டார நூலக நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்களின் 2023 மார்ச் மாத ஒருங்கிணைப்பு கூட்டம் தென்காசி வ உ சி வட்டார நூலக நூலகர் வட்டார நூலகர் பிரமநாயகம் தலைமையில் நடைபெற்றது கிளை நூலகர் சுந்தர் ஜூலியாராஜ  செல்வி நிஹ்மதுன்னிஸா  கலந்து கொண்டனர். தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் 31 தன்னார்வலர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தின் முன்னேற்றம் இன்னும்  செய்ய வேண்டிய பணிகள் நூல் வழங்குதல் திரும்ப பெறுதல் நூலக பணியினை அனைத்து பிரிவு மக்களுக்கும்  விரிவடைய செய்திட உரிய ஆலோசனைகள் மற்றும் 
திட்டம் குறித்த விரிவான விளக்கம் வழங்கப்பட்டது தன்னார்வலர்கள் மூலம் நூலக பணியினை அனைத்து பகுதிகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மகளிர் தங்கும் விடுதிகள் நூலகம் வர இயலாத பெரியோர்கள் மாணவர்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நூலகப் பணி கிடைத்திட தன்னார்வர்கள் அனைவரும் செயல்பட வேண்டப்பட்டது புத்தகப்பை அடையாள அட்டை வழங்கப்படாத தன்னார்வலர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.


நூலக நண்பர்கள் திட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் கிளை நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தின் மூலம் 31.03.2023 வரை தோட்ட மானியம் மோகனா அவர்கள் 14 உறுப்பினர்கள் + 01.04.2023 இன்று 5 உறுப்பினர்கள் ஆக மொத்தம் 19 உறுப்பினர்கள் சேர்த்து மிக குறுகிய காலத்தில் திட்டத்தினை பொது மக்களிடமும் மாணவர்களிடமும்கொண்டு சென்று படிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து வருகிறார் அம்மையாருக்கு பொது நூலக துறையின் சார்பில் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 


நூலகர் அன்பழகன் அவர்கள் எழுதிய்ள்ள  "துயில் மறந்த இரவொன்றில்" கவிதை நூலினை  திருவண்ணாமலையில் திருவனந்தபுரம் தமிழ் சங்கத் தலைவர் முத்துராமன் வெளியிட புவனேஸ்வர் தமிழ்ச்சங்க தலைவர் துரைசாமி பெற்றுக் கொண்டார். அருகில் திருக்கோவலூர் தமிழ்ச்சங்க தலைவர் சிங்கார உதியன், புதுவை தமிழ் சங்கத் தலைவர் முத்து, பெங்களூர் தமிழ் சங்கம் அமுத பாண்டியன், தலைநகர் தமிழ்ச் சங்கம் கணபதி,  மணலூர்பேட்டை தமிழ் சங்கத் தலைவர் அரிமா தா.சம்பத் மற்றும்  நூலகர் அன்பழகன் மனைவி திருமதி பாரதி.

இன்று 26-3 -2023 சென்னை,கவிஞர் பாரதிதாசன் சாலை, ஆழ்வார்பேட்டை, வட்டார நூலகத்தில் மெய்நிகர் கருவி பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சி வழங்கியவர் மூன்றாம் நிலை நூலகர்,பெ.அயோத்தி அவர்கள்.



ஏப்ரல் 23 உலக புத்தக தினம்

 

- த. த. புவனேஸ்வரிமூ.நி.நூலகர்,  கிளை நூலகம்காசிபாளையம், ஈரோடு.
 

புத்தகம் - உயிரின் சுவாசம்: அட்டையிட்ட அமுதம்

புத்தகம் - அறியாமையை அழிக்கும் அடித்தளம்!
புத்தகம்
 - விரித்தால் விதைகள்: படித்தால் விருட்சம்!
புத்தகம்
 எண்ணத்தில் விளைந்து எழுத்தில் வளர்வது!
புத்தகம்
  ஒரு போதி மரம்: நூலகம் ஓர் அறிவுச்சுரங்கம்!
புத்தகம்
 - உதிராத எழுத்து நட்சத்திரத்தை சுமக்கும் வானம்
புத்தகம்
 - புரிந்தவர்களுக்கு புனிதம்: புரியாதவர்களுக்கு புதிர்!
புத்தகம்
 இல்லாத வீடும் ஜன்னல் இல்லாத இல்லமும் ஒன்றுதான்.
புத்தகம்
 மனிதனை செதுக்கும் உளி: வாழ்க்கைக்கு கொடுக்கும் ஒளி!
புத்தகம்
 - தொட்டுப் பார்த்தால் காகிதம் தொடந்து படித்தால் ஆயுதம்
புத்தனை
 போல் ஒரு அன்பரில்லை: புத்தகம் போல் ஒரு நண்பனில்லை!
'புத்தகம் உள்ளதே புத்தகம்இஇல்லையேல் பித்தகம் ஆகும் பிறழ்ந்து"
புத்தகம்
 - “என்னை தலைகுனிந்து பாh:; உன்னை தலைநமிர வைக்கிறேன்”
புத்தகத்தில்
 உலகத்தைப் படிப்போம்! உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்!
புத்தகத்தை
 - வாசிப்போர் சீக்கிரம் உயரலாம்! சுவாசிப்போர் சிகரம் தொடலாம்!
புத்தகங்கள்- காலமெனும் கடலில் கட்டப்பட்டிருக்கும் கலங்கரை விளக்கங்கள்!
புத்தகங்கள்
 - பலரால் வாசிக்கப்படவும் சிலரால் நேசிக்கப்படவும் படைக்கப் பட்டவை
புத்தகம்
 காலம் என்னும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கு.
புத்தகங்கள்- புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்கும்
ää பழைய எண்ணங்களை மெருகேற்றும்
புத்தகம்
 ஒரு முறை வாசித்தால் வாழ்க்கை புரியும்: மறுமுறை வாசித்தால் வாகை சூடும்
புத்தகங்களால்
 புத்துயிர் பெறும் வாசகர்கள்: வாசகர்களால் புதுப்பொலிவு பெறும் புத்தகங்கள்!
புத்தகங்கள்
 - வெற்றுத் தாள்கள் அல்ல: சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் கால்கள்:
புத்தகம்:
 ஞானிகளின் இதயத்தை உள்ளே இருந்து பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி
புத்தகம்
 - அது ஒரு தேன்கூடு: ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தம் புத்தகங்கள் - கருத்துக்களின் கருவூலங்கள்! வெற்றிக்கான வெளிச்சத்தைக் காட்டும் கலங்கரை விளக்குகள்!
புத்தகங்கள்:
 ஞானம் தரும் போதி மரம்! கருத்துக்கள் பிறக்கும்
பிரசவ அறை! வரலாறு உயிர்த்தெழும் உன்னத இடம்!
புத்தகம்
 - அறிவை மேம்படுத்தும்: சிந்தனை திறனை வளர்க்கும்:;பனை
வளத்தை பெருக்கும் புதிய எண்ணங்களை உருவாக்கும்
புத்தகங்கள்
 - நம்மைச் சிறகில்லாமல் பறக்க வைக்கும்ää. கரடு முரடான வாழ்க்கையிலும் மனதை மென்மையாக வைத்திருக்கும்.
புத்தகங்கள்
 - நம்மைத் தனிமைத் தீவில் வேகவிடாமல் தன்னிறைவு காணச்செய்பவை. எல்லாவற்றுக்கும் மேலாக நம் வாழ்வின் எல்லாக் காலத்தையும் வசந்த காலமாக்கும் வள்ளல்கள்தாம் புத்தகங்கள்.
புத்தகம்
 - ஒவ்வொரு பக்கத்திலும் வாழ்வியல் அனுபவம் தந்த உண்மையின் தரிசனம் வாட்டம் நிரம்பிய வாசகர்களுக்கு ஊட்டம் சேர்க்கும் உற்சாகப் பகிர்வு
புத்தகங்கள்
 புத்துணர்வைத் தந்துஇற்றுப் போன உணர்வுகளிலிருந்து நம்மைத் துளிர்க்கச் செய்வதற்காகநம் கூடவே வருகின்றன.
புத்தகத்தின் பக்கங்கள் வெறும் காகிதங்
;;கள் அல்ல: புதியதொரு உலகுக்குப் படிப்போரை அழைத்துச் செல்லும் அதிசயச் சிறகுகள் அவை.
புத்தகத்தில் உலகத்தைப் படித்தால்
நம்முடைய அறிவு செழிக்கும்:உலகத்தையே புத்தகமாகப் படித்தால் அனுபவம் தழைக்கும்:
புத்தகங்கள்
   உலக வரலாற்று உண்மைகள் சமுதாய நல கருத்துக்கள் எழுத்தாளர்களின் உள்ளார்ந்த எழுச்சிகள்
          


ஒரு புத்தகம் என்ன செய்யும் -
அதன் வடிவமைப்பில் வசீகரிக்கும்
படைப்பாளரின் பெயர் வாசிக்க வைக்கும்
செறிவான தகவல்களால் விழிவிரிய வைக்கும்
சீரிய தலைமை போல் வழி நடத்திச் செல்லும்
 
பத்துப் பறவைகளோடு பழகினால் நீயொரு பறவை ஆக முடியாது
பத்து நதிகளோடு பழகி நீயொரு நதியாக முடியாது: ஆனால்
பத்து புத்தகங்களோடு பழகினால் நீயொரு பதினொன்றாவது புத்தகமாக எல்லோராலும் படிக்கப்படுவாய்!
 
 புத்தகம் -     தாளின் தரம்
                    அட்டையின் அழகு
                    கவிமிகு கருத்துக்கள்;
                    வசீகரிக்கும்;  எழுத்துக்கள்
                    எண்ணங்களில் எழுந்த வண்ண ஒவியம்  
 
 அறியாமை இருள் விலக வேண்டும்
அனுதினமும் தவறாது வாசிக்க வேண்டும்
வாழ்க்கைப் புதிருக்கு விடைகான வேண்டும்-அதற்கு
புத்தகங்களை புரிதலோடு வாசிக்க வேண்டும்
 
 புத்தக அலமாரியில் குடியிருப்பவை நூல்கள் அல்ல
மனித இதயங்கள்! கனவுப் பைகள்
வாழ்வின் உயிர்த்துளி ஏந்தியிருக்கும் குவளைகள்
உடைந்த உள்ளத்தை இதமாக்கவல்ல மருந்து சீசாக்கள்
இலட்சிய வேகத் தீக்குச்சிகள் அடுக்கிய வத்திப்பெட்டிகள்

வருங்கால விடியலுக்கு வற்றாது வழங்கவல்ல பொற்காசு உண்டியல்கள்...  


நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள்,  கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.





Comments

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31