நூலகர் செய்தி மடல் 12
ஆசிரியர் உரை:
நூலகர் செய்தி மடலை தொடர்ந்து வாசித்து வரும் நூலக நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!
ஊர்ப்புற நூலகர் - பகுதி நேர தூய்மைப் பணியாளர் ஊதிய முரண்பாடு ஏன்?
கிளை நூலகங்களில் பணிபுரியும் சிறப்புக் காலம் வரை ஊதியம் பெறும் பகுதிநேர தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் சுமார் ரூ. 9000 ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் காலையில் மட்டும் பணிபுரிகின்றனர். மாலையில் நூலகத்திற்கு வருவதில்லை. நூலகர் விடுப்பில் இருந்தால்கூட மாலையில் இவர்கள் நூலகத்தை திறந்து வைக்க முன்வருவதில்லை.
ஆனால், ஊர்ப்புற நூலகர்கள் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாதம் சுமார் ₹12,000. பணி நேரத்த்தின்படி பார்த்தல், பகுதி நேர தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தைக் காட்டிலும் ஊர்ப்புற நூலகர்களின் ஊதியம் மிகக் குறைவு. ஏன் இந்த முரண்? ஊர்ப்புற நூலகர்கள் இதை ஒப்பிட்டு, கேள்வி கேட்க வேண்டாமா?
சிறப்புக் காலமுறை ஊதியம் பெரும் பெரும்பாலான பகுதி நேரத் தூய்மைப் பணியாளர்கள் கிளை நூலகங்களில்தான் பணிபுரிகின்றனர். ஆனால், பெரும்பாலான முழு நேர நூலகங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.75 வீதம் ஊதியம் பெறும் தினக்கூலி பணியாளர்கள்தான். இவர்களை வைத்துக்கொண்டு முழுநேர நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். முழு நேர நூலகங்களில் இரண்டு நூலகர்கள் மட்டும் இருப்பதால், அவர்களுக்கான விடுப்பைக்கூட எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அத்துடன் ஊதிய மைய நூலகர்களுக்கு கூடுதலாக பணி இருக்கிறது. ஆகவே, சிறப்புக் காலமுறை ஊதியம் பெரும் பகுதி நேரத் தூய்மைப் பணியாளர்களை முழு நேர கிளை நூலகங்களில் பணியமர்த்துவதன் மூலம், முழு நேர நூலகங்களின் சேவைகள் மேம்படும். அங்கு பணிபுரியும் நூலகர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். இதனை இயக்குநர் பரிசீலனை செய்வார் என்பர் நம்புவோம்!
அன்புடன்,
சி.சரவணன், ஆசிரியர், நூலகர், செய்தி மடல்.
கட்டுரை:
நூலகங்களை உயிரோட்டமாக வைத்துக் கொள்வோம்!
உலகில் உள்ள லட்சக்கணக்கான உயிரினங்களில்
மனிதன் மட்டுமே தனக்குத் தேவையான கருவிகளை உருவாக்கி வசதியாக வாழ்ந்து வருகிறான். ஏனைய
உயிரினங்கள் தாங்கள் தோன்றியபோது எப்படி வாழ்ந்தனவோ, அப்படியே இன்றும் வாழ்ந்து வருகின்றன.
காடுகளிலும் மலைகளிலும், விலங்குகளோடு விலங்காக வாழ்ந்துவந்த
மனிதர்கள், தகவல்களைப் பரிமாறிக்கொள்ள
மொழியைக் கண்டு பிடித்து, வாழ்க்கை அனுபவங்களை வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லி வந்தனர்.
அடுத்தடுத்து வந்த தலைமுறை மனிதர்கள், முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை, தற்காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தி
வந்ததால், மனித சமூகம் நாகரிக
சமூகமாக மாறியது.
மனிதர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைக்
கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், தோல்கள், சுட்ட களிமண் தகடுகள், ஓலைச் சுவடிகள், உலோகத் தகடுகள் போன்றவற்றில் பதிவு
செய்து வந்தனர். காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, புத்தகங்கள் மனிதர்களின் அறிவை
மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. அடுத்த கண்டுபிடிப்பு
டிஜிட்டல் வடிவிலான புத்தகங்கள்.
இவ்வாறு மனிதர்களின் அறிவை மேம்படுத்துவதில்
பெரும் பங்காற்றும் புத்தகங்களைச் சேகரித்து, தேவைப்படுவோருக்குக் கொடுக்கும் இடம்தான் நூலகம். இந்த
நூலகமும் இன்றைக்கு பல்வேறு பரிமாண வளர்ச்சி அடைந்து, டிஜிட்டல் நூலகம் வந்துவிட்டது.
கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரம் மற்றும்
தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக இருக்கின்றன. மனிதனை நல்வழிப்படுத்தப் புத்தகம்
சிறந்த வழிகாட்டியாக உள்ளது. மனிதனை அறிவுலகத்திற்கு இழுத்துச்
செல்வன புத்தகங்களே. புத்தகங்களே மனிதனின் நல்ல நண்பர்கள்.
"நல்ல புத்தகங்களைத்
தேடிப் படிக்காத ஒருவன், படிக்கவே தெரியாத ஒருவனைவிட உயர்ந்தவனல்லன்' என்றார் ஜவஹர்லால் நேரு.
"ஒரு கோடி ரூபாய் கிடைத்தால்
என்ன செய்வீர்கள்' என்று காந்தியடிகளிடம்
கேட்டபோது, "ஒரு நூலகம் கட்டுவேன்' என்று பதிலளித்தார்.
இன்று பொதுமக்களிடையே நூலகப் பயன்பாடு
குறைந்து வருகிறது. படித்த இளைஞர்கள்
மட்டும் பெருமளவு நூலகங்களுக்கு வருகிறார்கள். அவர்கள் போட்டித்
தேர்வுக்குப் படிக்கத்தான் வருகிறார்கள். நூலகத் துறை இவர்களுக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது. இன்று பொது நூலகங்கள் போட்டித்
தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கான தளமாக மட்டும் மாறி வருகின்றன. இது ஆபத்தானது. பொது நூலகம் என்பது சிறுவர்கள் உள்ளிட்ட
அனைத்துத் தரப்பு மக்களுக்கான, தொடர் வாசிப்புக்கான களமாக இருக்க வேண்டும்.
நாளைய சமுதாயத்தைக் கட்டமைப்பவர்கள்
இன்றைய மாணவர்கள். மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்தப் பள்ளிக் கல்வித்துறை
பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொது நூலகத் துறையும்
பள்ளிகளுக்கே சென்று பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்குவது, நூலக தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின்
வீடுகளுக்குச் சென்று புத்தகங்கள் வழங்குவது போன்ற ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இவை
எல்லாம் போதுமானதாக இல்லை.
நூலகம் குழந்தைகளுக்குரியது என்னும்
எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். பொது நூலகங்களில்
சிறுவர் பகுதிதான் இல்லையே தவிர, குழந்தைகளுக்கான நூல்கள் ஏராளமாக உள்ளன.
ஒவ்வொரு நூலகத்திலும் சிறுவர் பிரிவு
தேவை. நூலகங்களில் இட நெருக்கடி இருக்கலாம். இருந்தாலும், ஒவ்வொரு நூலகத்திலும் குறைந்தபட்சம் சிறுவர்கள் படிப்பதற்கான அலமாரி, சிறிய நாற்காலிகள் இருப்பது அவசியம். சிறுவர்களைக்
கவரும் விதமாகச் சிறுவர் பகுதி இருக்க வேண்டும். நூலகத்தில் சிறுவர்
பகுதி ஏற்படுத்துவதன் மூலம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
குழந்தைகளைக் கவரும் வகையிலான சிறிய
சிறிய நூல்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். வாரம்தோறும் குழந்தைகளுக்குப்
புத்தகங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகளை நூலகங்களில் நடத்தலாம்.
நூலகங்களில் கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் நூலகத்திற்குக் குழந்தைகளை வரவைக்க முடியும்.
போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் பாடநூல்கள்
மட்டும் படிப்பது போதுமானதாக இருக்காது. நூலகத்திற்குச்
சென்று பல்வேறு நூல்கள் படிப்பதன்மூலம் பரந்த அறிவை மாணவர்கள் பெற முடியும்.
மாணவர்களை அறிஞர்களாக ஆக்குவதில்
வகுப்பறைக்கு இணையானது நூலகம். அந்த நூலகத்தை
இளமைப் பருவத்திலேயே முறையாகப் பயன்படுத்துபவர்கள்தான் அறிஞர்களாகிறார்கள்.
மாணவர்கள் உள்ளூர் நூலகங்களைப்
பயன்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும்
உள்ளூர் நூலகத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும். நூலகத்தைக் குழந்தைகளுக்குரியதாக
மாற்றும் பொறுப்பை நூலகர் ஒருவரால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு
ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த கோடை விடுமுறையில் பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள நூலகங்களில் உறுப்பினர்களாகச் சேர்த்து, நூலகத்தை நன்கு
பயன்படுத்திக்கொள்ளப் பயிற்சி அளிக்க முன்வர வேண்டும்.
புத்தகங்களை இரவல் கொடுத்து, அவற்றை வாங்கி வைப்பது மட்டுமே நூலகரின் சேவை என்று இல்லாமல், நூலகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை என்று நூலகர்கள் செயல்பட வேண்டும். இன்றைக்கு நூலகர்கள் பலரும் நூலகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்களை மாவட்ட நூலக அலுவலர்கள் ஊக்குவிக்க வேண்டும். இவர்களைப்போல மற்ற நூலகர்களும் செயல்பட, இவர்களின் ஆலோசனைகளை மற்ற நூலகர்களும் தெரிந்து கொள்ள ஆலோசனைக் கூட்டங்களை மாவட்ட நூலக அலுவலர்கள் நடத்துவது அவசியம். நூலகத் துறை மேம்பட்டால்தான் நூலகர் சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இதற்கு நூலகர்கள் குழுக்களாக இணைந்து செயல்படுவது நல்ல பயனைத் தரும். எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.
நூலக நண்பர்கள் அனைவருக்கும் பொது நூலக தின நல்வாழ்த்துகள்!
(22.5.2023 பொது நூலக தினம்)
-
சி. சரவணன்,
நூலகர், கிளை நூலகம், கடத்தூர்,
தருமபுரி மாவட்டம்.
அலைபேசி : 8668192839, மின்னஞ்சல்: saravanan.c.kadathur@gmail.com
வலைதளம்: www.kadathurlibrary.com
Comments
Post a Comment