நூலகர் செய்திமடல் 17.
பொது நூலகத்துறை இயக்குநராக திரு க. இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்கள் 12.7.2023 அன்று பொறுப்பேற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
பொது நூலகத் துறை இயக்குநர் பணியிடம் கடந்த 12 ஆண்டுகளாக காலியாக இருந்தது. இதனால்,
பொது நூலகத் துறையின் வளர்ச்சியும், நூலகர்களின் நலனும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பொது நூலக இயக்குநர்
பணியிடத்தை நிரப்ப அரசு பலமுறை நடவடிக்கை எடுத்தது. பெறப்பட்ட விண்ணப்பங்களில்
சரியான நபர்/ தகுதியான நபர் யாரும் கிடைக்காததால்தான், அரசு இந்த முடிவை எடுத்ததாக
தெரிகிறது. இது தற்காலிக ஏற்பாடா? இறுதியான முடிவா? என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும்,
அரசு எடுத்த இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.
பிளாஷ்பேக்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களுக்கு பொது நூலகத்துறை இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களில்
சிலர் நூலகத்துறை வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பொது நூலகத்துறை இயக்குநராக இருந்த திரு.வே.ரமணி, திரு. க. அறிவொளி ஆகியோரின் பணிக் காலம் நூலகத்துறையின் பொற்காலம் என்று சொல்லலாம்.
திரு.வே.ரமணி அவர்களின் பணிக்காலத்தில், பதவி உயர்வு தொடர்பான வழக்குகளால் நூலகர்களுக்குப் பதவி உயர்வு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்ததையெல்லாம் சரி செய்து, நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. மேலும், அவருடைய பணிக் காலத்தில்தான் ஏராளமான ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகவும், கிளை நூலகங்கள் முழு நேர நூலகங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டன. சில நூலகர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளால் பதவி உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
சென்னை எல்எல்ஏ கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது; பல மாவட்டங்களில் நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இவ்வாறு, திரு.வே.ரமணி அவர்களின் காலம்
நூலகத் துறையின் பொற்காலமாக இருந்தது.
அடுத்து வந்த திரு. க. அறிவொளி அவர்கள், நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் முழுக் கவனம் செலுத்தினார். ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்பட்டன. வருவாய்க் கோட்ட தலைமையிடங்களில் வருவாய்க் கோட்ட நூலகங்கள்(RDCL)
அமைக்கப்படும் என்று அரசாணை பெற்றுத் தந்தார். (ஆனால், அந்த அரசாணை இன்று வரை அமுல்படுத்தப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நூலகம் கூட தரம் உயர்த்தப்படவில்லை.)
நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருது டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் பெயரில் வழங்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை ஏற்று,
அதற்கான அரசாணையை பெற்றுத்
தந்தார்.
நூலகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆட்டோலிப் மென்பொருளால் நூலகத் துறைக்கு செலவு அதிகமாக ஆவதால், கோஹா என்னும் இலவச மென்பொருள் நூலகங்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி
பரிசுகள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. பதிப்பாளர்கள் பட்டியல் மற்றும் அரசாணைகள்
இணையத்தில் பதிவு செய்யப்பட்டன. பதிப்பாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது.
இவ்வாறு நூலகத்துறை சிறப்பாக இயங்கி வந்த நிலையில், நூலகர்கள் சிலர், இயக்குநர் பதவி மீது ஆசைப்பட்டு, இயக்குநர் பதவி நூலகர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதி அரசர் திரு. சந்துரு நடைமுறைச் சிக்கல்களை ஆராயாமல், அரசாணையை அமுல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதனால், பொது நூலகத்துறை இயக்குநராக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள் வருவது முடிவுக்கு வந்தது. பொது நூலகத்துறை இயக்குநர் பதவி காலியாகிவிட்டது. இயக்குநர் பதவிக்கு நூலகத்துறையில் சரியான நபர் யாரும் இல்லை என்று அரசு முடிவு செய்ததால், நூலகத்துறை இயக்குநர் பொறுப்பு பள்ளிக்
கல்வி இயக்குநர்களிடமே கூடுதல் பொறுப்பாக கடந்த 10 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுவந்தது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடங்களில் ஒரு இடம் குறைந்ததற்கு நூலகர்கள்தான் காரணம் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள் கோபம் கொண்டதால்தான் நூலகத் துறை மீது அவர்கள் அக்கறை செலுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன்.
இந்த நிலையில்தான் தற்பொழுது ஐஏஎஸ் அலுவலர் திரு.க. இளம்பகவத் அவர்கள் பொது நூலக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு, திரு. க.இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்கள் பொது நூலகத் துறை
இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அவரும் வந்த
புதிதில் நூலகத் துறை வளர்ச்சிக்கு, நூலகச் சேவையை மேம்படுத்துவதற்கு பல்வேறு சீர்திருத்த
நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடந்த 10
ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த நூலகத்துறைக்கு விடிவுகாலம் வந்து விட்டது என்ற நம்பிக்கை நமக்கு வந்தது. ஆனால்,
தமிழக அரசு திரு. க.இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் பல்வேறு முக்கிய பொறுப்புகளை
கொடுத்தது. இதனால், அவரால் நூலகத்துறைக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாமல்
போய்விட்டது. இதன் விளைவாக, அரசின்
சிறப்புத் திட்டங்களான நூலக நண்பர்கள் திட்டம், இலவச wifi திட்டம் முதலான திட்டங்களின் செயல்பாடுகள் போற்றும்படியாக இல்லை.
இந்த பட்ஜெட்டில் புத்தகக்
கண்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தவும், நூலகர்களுக்கு பயிற்சி
அளிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அதற்கான அரசாணைகள் வெளிவரவில்லை.
அரசாணைகள் முன்னதாக வெளிவந்தால் மட்டுமே, திட்டங்கள் திட்டமிட்டு செயல்படுத்த
முடியும்.
இலவச wifi திட்டம் தொடக்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. மாதம் தோறும் wifi க்கான கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால், அந்தத் திட்டத்தின் பயனை பயனாளிகளுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்று நூலகர்களுக்குத் தெரியவில்லை. எல்லாம் காட்சிப் பொருளாகத்தான் இருக்கின்றன. wifi வசதி உள்ள நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு மட்டுமாவது உடனடியாக கணினிப் பயிற்சி அளிக்க
வேண்டும்.
நூலகத்துறைக்கு முழு நேர இயக்குநராக திரு. க. இளம்பகத் ஐ.ஏ.எஸ்.
அவர்கள் தற்போது நிமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணி சிறக்க என்னுடை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி அவர் நூலகத்துறைக்கு அதிக நேரம்
ஒதுக்குவார் என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அவர்கள் நூலகர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசுவதன் மூலம்
நூலகர்கள் பிரச்சனைகள் களைய வாய்ப்பு உள்ளது. மூத்த, முன்னோடி நூலகர்களை அழைத்துப் போசுவதன் மூலம் நூலகச் சேவைகளை மேம்படுத்த முடியும்.
தமிழகத்தில் உள்ள துறைகளில்
சிறப்பாக இயங்கும் துறை நூலகத்துறைதான்
என்று போற்றும்படியாக நூலகத் துறை மாறும் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
- சி.சரவணன், ஆசிரியர்,
நூலகர் செய்திமடல்.
வாட்ஸ் ஆப்: 8668192839, மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com
சிறந்த நூலகச் சேவைக்கான விருது:
இனாம் கரூர் கிளை நூலகத்தில், ரோட்டரி கிளப் ஆஃப் கரூர் டெக்ஸ் சிட்டி மூலம் ₹3 லட்சம் நன்கொடையாகப் பெற்று போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக விருது நல்நூலகர் ம.மோகன சுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது...
கன்னியாகுமரி மாவட்ட நூலக ஆணைக்குழு விழுந்தயம்பலம் ஊர்ப்புற நூலகத்திற்கு கீழ்ஆப்பிக்கோடு வாட்ஸ்அப் குழு மற்றும் நல்நண்பர்கள் இணைந்து இரும்பு நூலடுக்கு ஒன்று நன்கொடையாக வழங்கினர். அவர்களுக்கு நூலகத்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றி ஒடிசா மாநில அரசின் ஆலோசகர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.:
மதுரையில் இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திறந்து வைத்த கலைஞர் நினைவு நூலகத்தின் நான்காவது தளத்தில் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர்கள், இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஏறத்தாழ 30000 நூல்களுடன் கூடிய ஒரு தனிப்பகுதி அமைந்துள்ளது என்ற தகவல் அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
அது 1983 ஆம் ஆண்டு. மதுரையில் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே குடிமைப் பணிக்குத் தயாராகி வந்தேன்.
மதுரையில் நத்தம் சாலைக்கு செல்லும் வழியில் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் நகர் நூலகச் சிறுவளாகம். எனது பணிச்சூழலில் அந்த நூலகம் மட்டுமே எனக்கு போக வர வசதியாக இருந்தது. அப்போது நத்தத்தில் இருந்து மதுரைக்கு தினமும் பயணித்து மூன்று ஷிப்டுகளில் மாறி மாறி பணியாற்றினேன். இதில் ஷிப்டை பொறுத்து வாரத்தில் ஓரிரு நாட்கள் நூலகம் செல்லமுடியும்.
நான் தமிழ் வழியில் தேர்வு எழுத முடிவுசெய்து அதற்காகத் தயாராகி வந்தேன். அறிவியல், பொது அறிவு, வரலாறு போன்ற தேர்வுகளுக்கு பயன்படக்கூடிய நூல்கள் தமிழில் குறைவாகவே இருந்தன. தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடுகள் மிகவும் உதவியாக இருந்தது. ஆங்கிலத்தில் நூல்களைப் படித்து தமிழில் குறிப்பெடுப்பேன். தமிழில் கலைச்சொற்களை துறைவாரியாக தயாரித்துக் கொண்டேன் தேர்வில் பயன்படுத்த வசதியாக.
குடிமைப் பணி தேர்வு எழதுவோர்க்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நூல்கள் (NCERT) பயனுள்ளதாக இருக்கும் என்றார்கள். மதுரை டவுன் ஹால் சாலையில் ஒரு கடையில் சில நூல்கள் கிடைத்தன. எனக்கு வேண்டிய நூல்கள் அனைத்தும் கிடைக்கவில்லை.
இந்த நூல்களை வாங்கி வருவதற்காகவே சென்னைக்குச் சென்று புத்தகக்கட்டுடன் மறுநாள் மதுரைக்கு திரும்பிய ரயில் பயணம் மறக்கவில்லை.
குடிமைப் பணி தேர்வுக்கு படிப்பவர்கள் Competition Success Review என்ற மாதாந்திர இதழை வாங்கிப்படிப்பது வழக்கம். எனக்கு தெரிந்து இந்த இதழ் மதுரையில் இரண்டே இரண்டு கடைகளில் கிடைக்கும். அந்த இரண்டு கடைகளில் ஒன்று தல்லாகுளத்தில் தமுக்கம் மைதானம் சந்திப்பில் உள்ள ஒரு பெட்டிக்கடை. அந்த இதழ் வரும் நாளை எதிர்நோக்கி காத்திருந்து வாங்கிச் செல்வேன். சில தருணங்களில் குறிப்பிட்ட நாளில் அந்த மாத இதழ் வந்து சேர்ந்திருக்காது. நாளைக்கு ஒருவேளை வரக்கூடும் என்பார் கடைக்காரர்.
எனக்குத் தேவையான ஒரு நூலைப் படிப்பதற்காக ஒருமுறை காரைக்குடி அழகப்பா கல்லூரி நூலகம் சென்று காரைக்குடியில் ஒரு நாள் தங்கி குறிப்பெடுத்து வந்தேன்.
மற்றபடி எனக்கு உற்றதுணை யாதவர் கல்லூரி நூலகம். நான் அங்கு இளங்கலை படித்து பின்னர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து பிறகு நாளிதழில் பணியாற்றினாலும் யாதவர் கல்லூரி தொடர்பு விட்டுப் போகவில்லை. எனக்கு தேவையான நூல்களை அங்கிருந்து வாங்கிச் சென்று படிக்க முடிந்தது. அப்போது யாதவர் கல்லூரி நூலகத்தின் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. முனியசாமியுடன் சென்ற ஆண்டு கூட அலைபேசியில் பேசினேன்.
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன். ஏன் எழுதுகிறேன்.
கலைஞர் நூலகத்தில் போட்டித் தேர்வர்களுக்கு தனித்தளம்; முப்பதாயிரம் நூல்கள் என்பது எவ்வளவு இனிப்பான செய்தி தெரியுமா?
இப்போதெல்லாம் விரல் நுனியில் இணைய வலைத்தளங்களில் தகவல் களஞ்சியம். ஆனால், அது வேறொரு காலம். திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!
1984 இல் குடிமைப் பணியில் சேர்ந்து 2018 இல் ஓய்வுபெற்று அதன் பின்னரும் ஒடிசா மாநில அரசில் முதல்வர் அலுவலகத்தில் தலைமை ஆலோசகராக முழுநேரப் பணியில் இப்போதும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்தில் ஒரே தளத்தில் போட்டித் தேர்வர்களுக்கு பயன்படக்கூடிய முப்பதாயிரம் நூல்கள். அடேங்கப்பா . அப்படியென்றால் நூல்கள் வாங்க சென்னைக்கு போக வேண்டாமா? மாத இதழுக்காக கடை அருகே காத்திருக்க வேண்டாமா?
ஆசையாக இருக்கிறது! இந்த நான்காவது தளத்தில் அமர்ந்து படித்து இன்னும் ஒரு முறை குடிமைப்பணி தேர்வு எழுதி மீண்டும் ஒரு முறை முதல் முயற்சியில் வென்று காட்ட! அப்படி என்ன வயசாகி விட்டது எனக்கு 64+ தானே! (Don't get tensed up. சும்மா தான் சொன்னேன்.!)
வாழ்த்துகள். இளைய தலைமுறையே!
கல்விதான் நம்மைக் கரைசேர்க்கும்.
அறிவுதான் நமது பேராயுதம்!
"அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்"
என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அன்று சொன்ன சொல் இன்றும் செல்லும்.
அன்புடன்,
ஆர்.பாலகிருஷ்ணன்,
புவனேஸ்வரம்,
15.07.2023.
எனக்குத் தேவையான ஒரு நூலைப் படிப்பதற்காக ஒருமுறை காரைக்குடி அழகப்பா கல்லூரி நூலகம் சென்று காரைக்குடியில் ஒரு நாள் தங்கி குறிப்பெடுத்து வந்தேன்.
மற்றபடி எனக்கு உற்றதுணை யாதவர் கல்லூரி நூலகம். நான் அங்கு இளங்கலை படித்து பின்னர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து பிறகு நாளிதழில் பணியாற்றினாலும் யாதவர் கல்லூரி தொடர்பு விட்டுப் போகவில்லை. எனக்கு தேவையான நூல்களை அங்கிருந்து வாங்கிச் சென்று படிக்க முடிந்தது. அப்போது யாதவர் கல்லூரி நூலகத்தின் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. முனியசாமியுடன் சென்ற ஆண்டு கூட அலைபேசியில் பேசினேன்.
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன். ஏன் எழுதுகிறேன்.
கலைஞர் நூலகத்தில் போட்டித் தேர்வர்களுக்கு தனித்தளம்; முப்பதாயிரம் நூல்கள் என்பது எவ்வளவு இனிப்பான செய்தி தெரியுமா?
இப்போதெல்லாம் விரல் நுனியில் இணைய வலைத்தளங்களில் தகவல் களஞ்சியம். ஆனால், அது வேறொரு காலம். திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!
1984 இல் குடிமைப் பணியில் சேர்ந்து 2018 இல் ஓய்வுபெற்று அதன் பின்னரும் ஒடிசா மாநில அரசில் முதல்வர் அலுவலகத்தில் தலைமை ஆலோசகராக முழுநேரப் பணியில் இப்போதும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்தில் ஒரே தளத்தில் போட்டித் தேர்வர்களுக்கு பயன்படக்கூடிய முப்பதாயிரம் நூல்கள். அடேங்கப்பா . அப்படியென்றால் நூல்கள் வாங்க சென்னைக்கு போக வேண்டாமா? மாத இதழுக்காக கடை அருகே காத்திருக்க வேண்டாமா?
ஆசையாக இருக்கிறது! இந்த நான்காவது தளத்தில் அமர்ந்து படித்து இன்னும் ஒரு முறை குடிமைப்பணி தேர்வு எழுதி மீண்டும் ஒரு முறை முதல் முயற்சியில் வென்று காட்ட! அப்படி என்ன வயசாகி விட்டது எனக்கு 64+ தானே! (Don't get tensed up. சும்மா தான் சொன்னேன்.!)
வாழ்த்துகள். இளைய தலைமுறையே!
கல்விதான் நம்மைக் கரைசேர்க்கும்.
அறிவுதான் நமது பேராயுதம்!
"அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்"
என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அன்று சொன்ன சொல் இன்றும் செல்லும்.
அன்புடன்,
ஆர்.பாலகிருஷ்ணன்,
புவனேஸ்வரம்,
15.07.2023.
*நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தை புதிய நூல்கள் வாங்க பயன்படுத்த உத்தரவு*
*மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு புதிய நூல்கள் வாங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் புதிய வங்கிக்கணக்கு தொடங்க பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவு*
*ஒரே கோரிக்கைக்காக பல முறை மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.5000 அபராதம் விதித்து, அதை புதிய வங்கிக்கணக்கில் செலுத்தவும் உத்தரவு*
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் டாக்டர் ஏ. பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு தினம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா ஊராட்சி மன்ற தலைவர் அ. சரவணன் தலைமையில் நடைபெற்றது. நூலக புரவலர் பா. குப்புராஜ் அரிமா சங்க உறுப்பினர் பூ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா சங்க மாவட்டத் தலைவர் மா. சிவானந்தம் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடக்கி வைத்தார். அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். இந்த நிகழ்வில் நூலக வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் செய்திருந்தார்.
கடையநல்லூர் நூலகத்திற்கு ஜாய் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி மாணவ மாணவியர் வாரம் ஒரு நாள், ஒரு வகுப்பு என்ற அடிப்படையில் பள்ளி மாணவ மாணவர்களை நூலகத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில்...
நூல்கள் வெளியீட்டு விழா:
16-07- 2023 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டை, வட்டார நூலகத்தில் திரு. ஆற்காடு ராஜா முகம்மது எழுதிய நீங்கள் நிராகரித்த நான், திரு. ஆ. பிரமநாயகம் எழுதிய காலத்தை செதுக்கும் உளிகள், திரு.கி. பாண்டியன் எழுதிய மூச்சுக்காற்றின் முத்தங்கள் ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கவிஞர் ஆற்காடு ராஜா முகமது நூலகப் பயன்பாட்டிற்காக ரூ. 3000 மதிப்புள்ள எவர்சில்வர் டீ கேன் நன்கொடையாக வழங்கினார். 30 மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தி எக்ஸாம் பேட், பேனா அனைவருக்கும் வழங்கினார். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
செங்கோட்டை நூலகத்திற்கு விழுப்புரம் மாவட்ட நூலகர்கள் வருகை:
மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த விழுப்புரம் மாவட்ட நூலகர்கள் 20 பேர் செங்கோட்டை நூலகத்தை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மேலந்தல் அன்பழகன் செய்திருந்தார்.
25 .7 .2023 அன்று தருமபுரி மாவட்டம், மோளையானூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் முன்னிலையில் புரவலர் 10, பெரும்புலவர் 01, டியூப்லைட் 03, சீலிங்பேன் 01 பெறப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நூலகர் ஜெயக்குமார் செய்திருந்தார்.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தில் பயின்று, பயிற்சி பெற்று, TNPSC Gr.IV தேர்வில் வெற்றி பெற்று இன்று பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணி ஆணை பெற்றுள்ள வாசகர் வெ.மணிகண்டன் அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்💐
- நூலகர் மேலந்தல் அன்பழகன்.
திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தை பயன்படுத்தி TNPSC Gr.IV தேர்வில் வெற்றி பெற்று வேளாண்மைத் துறையில் இளநிலை உதவியாளர் பணி ஆணை பெற்றுள்ள வாசகர் ப.கிரி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக் குழு சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நூலகர் மேலந்தல் அன்பழகன்.
மயிலாடுதுறை முழு நேர கிளை நூலகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பனி தீவிரமாக நடந்து வருகிறது.இந்த ஜூஸை மாதம் 05-07-2023 அன்று 217 புதிய உறுப்பினர்களும், 19-07-2023 அன்று 201 உறுப்பினர்களும் மொத்தம் 418 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மதி மேற்கொண்டு வருகிறார்.
24/07/2023 அன்று தருமபுரி மாவட்டம், பையர்நத்தம் கிளை நூலகத்திற்கு வாசகர் ராபின் சிங் என்பவர் அவர் அப்பா அருள் நினைவாக 2 பிளாஸ்டிக் சேர் அன்பளிப்பாக அளித்தார். பையர்நத்தம் கிளை நூலகத்தில் பழுதடைந்து இருந்த மேல் தளம் மற்றும் புணரமைத்தல் பணி ரூபாய் 2.30 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்பட்டது.
- நூலகர் பொன்ராஜ், கிளை நூலகம், பையர்நத்தம்.
தருமபுரி மாவட்டம், இராமியணஹள்ளி கிளை நூலகத்திற்கு பி.வி. முருகன் என்பவர் மின் கேபிள் ஒயர் 25 மீட்டர் மற்றும் அதற்குண்டான உபரி பொருட்கள் நன்கொடையாக வழங்கினார். அவற்றை நூலகர் தீ. சண்முகம் பெற்றுக் கொண்டார்.
நூலகத்தில் கற்றோம்
நூலகத்தால் வென்றோம்
தொடரும் வெற்றிப்பயணம்
தென்காசி வ உ சி வட்டார நூலக பயிலும் வட்டத்தில் TLSC (Tenkasi Library Study Circle) பதிவு செய்து நூலகத்தில் வழங்கப்படும் பயிற்சி , மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டும் தங்களது கடின முயற்சியால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று திரு.செல்வ சிவா கிராம நிர்வாக அலுவலர் பணியிடமும் செல்வி.ரேவதி சமூக நலத்துறையில் இளநிலை உதவியாளராகவும் பணி ஆணை பெற்றுள்ளார்கள்.
இருவரும் இன்று நூலகத்திற்கு வருகை தந்து மகிழ்வுடன் எங்களுக்கு நன்றி தெரிவித்தார்கள் .. இருவரும் அரசுப்பணியில் மென்மேலும் உயர வாழ்த்தும் நூலகர்கள்...
சூ.பிரம நாயகம்,
ஜெ.சுந்தர்,
ஜூலியாராஜ செல்வி,
நிஹ்மதுனிஸா.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஊதிய மைய நூலகத்திற்கு உட்பட்ட சேத்திய தோப்பு கிளை நூலகத்தின் மூத்த மூன்றாம் நிலை நூலகர் திரு.சி.சிவானந்தம் அவர்கள் இன்று (31/7/2023) வயது முதிர்வின் அடிப்படையில் பணிநிறைவு செய்கிறார். அவர் சேத்தியதோப்பு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் திரு சின்னையன் திருமதி ஐக்குபாய் அவர்களின் இளைய புதல்வனாக கடந்த 1963 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் 1997இல் கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊர்புற நூலகத்தில் ஊர்புற நூலகராக பணியில் சேர்ந்து படிபடியாக பல்வேறு போரட்டத்தின் அடிபடையில் கடந்த (2006) ஆண்டில் முன்றாம் நிலை நூலகராக பதவி உயர்வு பெற்று சேத்தியதோப்பு கிளை நூலகத்தில் பணியில் சேர்ந்தார். அண்ணார் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த பணிநிறைவு நல்வாழ்த்துக்கள். நூலகத் துறையில் பணிநிறைவு பெற்றாலும் சமூகபணி, சமுதாயபணி காத்துக்கொண்டு இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சிக்கு சமூதாய பணிசெய்து சமத்துவம் காணும் வகையில் சிறப்பு பணி செய்து, சிறந்த நூலகராக இருக்க வேண்டுமாய் அண்ணார் அவர்களை வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
- நல்நூலகர் இரா.கொளஞ்சிநாதன்,
ஊதிய மைய நூலகர், விருத்தாச்சலம்.
26/07/2023 இன்று தாம்பரம் முழுநேர கிளை நூலகத்தில் திரு.P.கருப்பையா அவர்கள் முடிச்சூர் ரோடு பழைய பெருங்களத்தூர் 177 புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார் அன்னாருக்கு நூலகத் துறை சார்பாகவும் நூலகத்தின் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- நூலகர் வெங்கடேசன்.
நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம்.
மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் : 8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
Comments
Post a Comment