ஆசிரியர் உரை:
அனைவருக்கும் வணக்கம்,
நூலகர்கள் தொடர்ந்து பணி நிறைவு பெற்று வருகிறார்கள். நூலகர் பணியிடங்கள் காலியாகி
வருகின்றன. அதே நேரத்தில், பதவுஉயர்வு எதிர்பார்த்து ஊர்ப்புற நூலகர்கள்
காத்துக்கொண்டு இருக்கிறார்கள். காலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் ஊர்ப்புற
நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்து வருகிறோம். இந்த
பணியை அரசு விரைவாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நூலகத்துறை மீது மக்கள் மத்தியில்
நம்பிக்கை வரும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில்
ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நியமிக்க வேண்டும். இதர ஊர்ப்புற
நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.
மாவட்ட தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவதற்கான
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தருமபுரி புத்தகத் திருவிழா செப்டம்பர் 8 முதல் 17 வரை
10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் நூலகத் துறையின் பங்களிப்பு அதிக அளவில்
இருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால், புத்தகத் திருவிழாவுக்கான செலவுத்தொகை நூலகத்துறையின்
மூலம்தான் மாவட்ட ஆட்சியர் கணக்கிற்கு செல்கிறது. அதனால், மாவட்டந் தோறும் நடைபெறும்
புத்தகத் திருவிழாக்களில் நூலகர்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதும், நூலகர்கள் புத்த்தகக்
திருவிழாக்களில் அதிக அளவில் ஈடுபடுவதும் அவசியம். அப்பொழுதுதான் நூலகத் துறை
பற்றி பொதுமக்கள் நன்கு அரிய முடியும்.
அடுத்ததாக, ஆன்லைன் வருகைப் பதிவு. ஆன்லைன் வருகைப்
பதிவு Kaizala ஆப் மூலம் பதிவு செய்யப்பட்டு வந்தது. அந்த ஆப் இன்றுடன் முடிவுக்கு
வந்து விட்டது. அடுத்து எந்த ஆப் மூலம் வருகைப் பதிவு செய்ய சொல்கிறார்கள் என்று பார்ப்போம். ஒரு மாவட்டத்தில், Kaizala
ஆப் மூலம் வருகைப் பதிவு செய்யாத நூலகர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக
சொல்லப்படுகிறது. இது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இதைப் பார்த்து மற்ற மாவட்ட நூலக
அலுவலர்களும் நூலகர்களிடம் விளக்கம் கேட்டால் நூலகர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு
உள்ளது. ஏனென்றால், ஆன்லைன் வருகைப் பதிவு செய்வதில் பல்வேறு சாதக, பாதகங்கள் /
தொழில்நுட்ப குளறுபடிகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் விரிவாக விவாதிக்காமல், நூலகர்களிடம்
விளக்கம் கேட்பது ஏற்புடையதாக இல்லை. அடுத்து
வரும் ஆப் இப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். நன்றி!
மீண்டும் சந்திப்போம்!
- சி.சரவணன், ஆசிரியர், நூலகர் செய்திமடல்.
15.8.2023 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், திரு. செ. கார்மேகம், இ. ஆ. ப., அவர்கள் சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் நூலகர் ச.மணிவண்ணன் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
பணி நிறைவு பாராட்டு விழா:
கடலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் பதிவறை உதவியாளராக பணிபுரிந்த திரு. மு. சிவசக்தி பணி நிறைவு பெறுவதையொட்டி இன்று (31.08.2023 - வியாழக்கிழமை) மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட நூலக அலுவலரும் (கூடுதல் பொறுப்பு) மற்றும் நூலக ஆயவாளருமான திரு. சி. கணேசன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருக்குறள் பேரவை திரு.அரிமா.மு. பாஸ்கரன், மற்றும் ஓய்வு பெற்ற கடலூர் மாவட்ட முதல் நிலை நல் நூலகர், திருமதி சு. பாப்பாத்தி மற்றும் ஓய்வு பெற்ற மூன்றாம் நிலை நூலகர் திரு. தா. வைரமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
விருத்தாசலம் கிளைநூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் திரு. ஆர். கொளஞ்சிநாதன், மூன்றாம் நிலை நூலகர்களான திரு. பா. உத்திராபதி, திரு.மு.சந்திரசேகரன், இரா. அருள், திரு. மு. அருள்ஜோதி, திரு. எ.முருகன், திரு. ஆர். சண்முகசுந்தரம், திரு. இராமன், திருமதி விக்டோரியா, திருமதி பழனியம்மாள், திரு. பெ. சண்முகம், திரு.கி.மனோகரன், மைய நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகர் திருமதி ஆ. கல்பனா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற சிந்தனை முற்றம் நிகழ்ச்சியில் பொது நூலக துணை இயக்குநர் இளங்கோ சந்திர குமார் அவர்கள்...
5 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா - 2023
தகடூர் புத்தகப் பேரவையால் 2018 ஆம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. தொடர்ந்து 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. கொரோனா பெருந் தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை நடத்த முடியவில்லை. 2022 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா தருமபுரி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து தகடூர் புத்தகப் பேரவையால் நடத்தப்பட்டது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் 'தமிழகமெங்கும் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படும்' என்ற அறிவிப்பின்படி இவ்வாண்டு புத்தகத் திருவிழாவை நடத்துவதற்காக தருமபுரி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. புத்தகத் திருவிழாக்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியிருக்கின்றது. அந்த வழிகாட்டுதல்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வரும் அமைப்புகளைக் கொண்டு புத்தகத் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்தி வரும் அமைப்பு என்ற வகையில் தகடூர் புத்தகப் பேரவைக்கு இவ்வாண்டு தருமபுரி புத்தகத் திருவிழாவினை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தும் 5 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் முதல் 17 ஆம் தேதி வரை தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெறும்.
தமிழகத்தின் முன்னணிப் பதிப்பாளர்களும், புத்தக விற்பனையாளர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். பகல் நேரங்களில் இலக்கியக் கூட்டங்களும், நூல் அறிமுக நிகழ்வுகளும் புத்தகத் திருவிழா அரங்கில் நடைபெறும். மாலை நேரங்களில் தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளின் சொற்பொழிவுகள் நடைபெறும்.
8.9.2023, வெள்ளிக்கிழமை
புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா
9.9.2023, சனிக்கிழமை
பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்
சுற்றமும் சூழலும்
10.9.2023, ஞாயிற்றுக்கிழமை
தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பேரா. ஜெயரஞ்சன், சன் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் இயக்குனர் திரு . மு. குணசேகரன் ஆகியோரின் கலந்துரையாடல்
எப்படி வளர்ந்தது தமிழ்நாடு?
11.9.2023, திங்கள் கிழமை
பேரா.ஆறுமுகத்தமிழன்
தெய்வத்தான் ஆகாதெனினும்
திரு. சி. காமராஜ் இஆப (பணி நிறைவு)
நூலகம் எனும் திருக்கோவில்
12.9.2023, செவ்வாய்க்கிழமை
எழுத்தாளர். கீரனூர் ஜாகிர்ராஜா
நானும் எனது எழுத்துகளும்
எழுத்தாளர். மு. முருகேஷ்
பேசத் துடிக்கும் புத்தகங்கள்
13.9.2023, புதன்கிழமை
கவிஞர்.நந்தலாலா
சித்திரம் பேசுதடி
14.9.2023, வியாழக்கிழமை
எழுத்தாளர். சோ. தர்மன்
கதை கதையாம் காரணமாம்
கவிஞர். சக்தி ஜோதி
சக்தி பிறக்குது மூச்சினிலே
15.9.2023, வெள்ளிக்கிழம
நியூஸ் 18 தொலைக்காட்சி
மக்கள் சபை நிகழ்ச்சி
16.9.2023, சனிக்கிழமை
பேரா. பர்வீன் சுல்தானா
புத்தகம் எனும் போதி மரம்
17. 9. 2023, ஞாயிற்றுக்கிழமை
அறிவியலாளர். தா. வி. வெங்கடேஸ்வரன்
பூமிக்கு ஜுரம் - என்ன மருத்துவம்?
பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்களும், அனைத்துப் பொதுமக்களும் புத்தகத் திருவிழாவுக்கு வருகை புரிந்து நிறைய நூல்களை வாங்கிச் செல்ல வேண்டும் எனவும், இலக்கிய நிகழ்வுகளிலும், மாலை நேரச் சொற்பொழிவுகளிலும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறோம்.
அறிவு தேடும் உள்ளங்கள் திரள்க!
அறிவுச் செல்வம் பெற்றுச் செல்க!
இவண்,
தகடூர் புத்தகப் பேரவை.
தென்காசி மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள வ உ சி வட்டார நூலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தட்டச்சராக நியமனம் பெற்றுள்ள கலைச்செல்வன், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மதிப்பிற்குரிய துரை. இரவிச்சந்திரன் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் கண்காணிப்பாளர் சங்கரன் வட்டார நூலகர் பிரம நாயகம் கிளை நூலகர் சுந்தர் உடன் இருந்தனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நூலகர் தின விழாவில் ...
செங்கோட்டை நூலகத்தை சட்டமன்ற நூலகக் குழு ஆய்வு:
செங்கோட்டை நூலகத்திற்கு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சுதர்சனம் அவர்கள் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சரவணகுமார் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஸ்டாலின் குமார் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு. கணபதி அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சம்பத்குமார் ஆகியோர் வருகை தந்தார்கள். நூலகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெறும் 150 மாணவர்களிடம் கலந்துரையாடி குறைகள் மற்றும் தேவைகளை கேட்டு அறிந்தார்கள். நூலகத்தின் செயல்பாடுகள் வாசகர் வட்ட செயல்பாடுகள் பற்றி கூறும்போது தமிழகத்தில் முன்மாதிரி நூலகமாக செயல்படுகிறது என்று வாழ்த்தி பாராட்டினார்கள். 1 மணி நேரம் ஆய்வு நடைபெற்றது .ஆய்வின் போது சட்டமன்ற செயலாளர்கள் நூலகத்துறை இணை இயக்குநர் திருமதி.அமுதவல்லி மாவட்ட நூலக அலுவலர் திரு.மீனாட்சி சுந்தரம் நூலக ஆய்வாளர் திரு.கணேசன், வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆதிமூலம், பொருளாளர் சுதாகர், இணைச் செயலாளர் செண்பக குற்றாலம் முன்னாள் நகரமன்ற தலைவர் ரஹீம், வழக்கறிஞர்கள் லூக் ஜெயக்குமார், நூலகர் முனியப்பன், வெற்றிவேலன், பழனி, முத்துப்பாண்டி, ஆகியோருடன் நான் முதல்வன் திட்ட 150 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் நூலகர் ராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
செங்கோட்டை நூலகத்தில் கவிஞர் ஜெயபாலன் எழுதிய தூறல் தெறித்த சுவடுகள் நூல் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. திறனாய்வு போட்டிக்கான நடுவராக சுஜா கண்ணம்மா பொறுப்பேற்று கட்டுரைகளை ஆய்வு செய்தார். வாசகர் வட்டத் துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். பொருளாளர் தண்டமிழ்தாசன் பா சுதாகர் விழுதுகள் சேகர் அக்ரி ஷேக்முகைதின் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் திருநெல்வேலி டவுண் மற்றும் மத்திய நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ஜெயபாலன் துணைத் தலைவர் கணபதி சுப்பிரமணியம் துணைத் தலைவர் பாப்பாக்குடி செல்வமணி பொருளாளர் சக்தி வேலாயுதம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறந்த கட்டுரைகளுக்கு நூலாசிரியர் ஜெயபாலன் பரிசுகள் வழங்கினார்.
நிறைவாக நூலகர் இராமசாமி நன்றி கூறினார்.
வாசவி கல்வியியல் கல்லூரி மற்றும் ஈரோடு நவீன நூலகம் இணைந்து நடத்திய மாணவ மாணவிகளுக்கான “உன்னை அறிந்தால்” நிகழ்ச்சி...வாசிப்பு இயக்கம் தொடக்க விழா
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யார் அடுத்த பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருங்கட்டூர் ஊர்புற நூலகம் இணைந்து மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் இ. கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ம. நடராஜன் அனைவரையும் வரவேற்றார். கல்வி குழு உறுப்பினர் தி. வடிவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வெம்பாக்கம் வட்ட வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் தலைமை ஆசிரியர் அவர்கள் வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். தினமும் வாசியுங்கள் நீங்கள் வாழ்வில் உயரலாம் எனவும் உயிரை விட புத்தகத்தை நேசியுங்கள், நூலகம் சென்று வாசியுங்கள் எதிர்காலத்தில் அறிவு சார்ந்த மாணவர்களாக உருவாகலாம் என கூறினார். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் திருவாசகம், சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வின் இறுதியாக ஊர்புற நூலகர் ஜா.தமீம் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டம், பண்டஅள்ளி ஊர்ப்புற நூலகத்தில் திரு. செங்கண்ணசெட்டி அவர்கள் 21வது புரவலராக இணைந்து கொண்டார்.
- சி.அமுதா ஊர்ப்புற நூலகர் பண்டஅள்ளி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-2023 ஆண்டு அதிக உறுப்பினர்கள் சேர்த்த நூலகர்களை பாராட்டி கேடயம் வழங்கினார் மாவட்ட ஆட்சித் தலைவர். உடன் தங்கம் மூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் திரு. சிவக்குமார்.
ஊர்ப்புற நூலகாரின் ஆதங்கம்....
28/08/2012 மறக்க முடியாத நாள். அரசுப் பணியில் நானா? என்ற வியப்போடும் இன்ப அதிர்ச்சியோடும் மகிழ்ச்சியாக பணியில் சேர்ந்தேன். இன்றோடு பத்தாண்டு காலம் நிறைவு செய்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் என் பணியை ஆர்வமுடன் சிறப்பாக செய்து வருகிறேன். நான் பணியாற்றும் நூலகத்தை அதன் செயல்பாடுகளை முன்னேற்றி கொண்டு சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், என்ன முன்னேற்றம் ???
மாற்றம் வரும் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனது.
விடியல் இன்னும் வரவில்லை.
விடியல் எப்போது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்கள்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே!"
செய்கிறேன் சிறப்பாக செய்கிறேன். ஆனால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு - பணிப் பாதுகாப்பு எப்போது?
காலம் கடந்தாவது எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்குமா?
காத்திருக்கிறோம் கண்ணீருடன்...
- N. Lavanya VL,
Orrikai Kanchipuram.
நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம்.
மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் : 8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
Comments
Post a Comment