நூலகர் செய்திமடல் 20
வணக்கம்,
மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவதற்கான அரசாணை வெளிவந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து முதல் மாவட்டமாக தருமபுரி மாவட்டம் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. புத்தகத் திருவிழாவுக்கான நிதி பொது நூலகத்துறை மூலம் வழங்கப்படுவதால், புத்தகத் திருவிழாக்களில் நூலகத் துறையின் பங்களிப்பு அதிக அளவில் இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அந்த வகையில் தருமபுரி மாவட்ட நூலக துறையும் தருமபுரி புத்தகத் திருவிழாவில் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்று கூறிவந்தேன். அதற்கான முன்மொழிவுகளையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தேன். தருமபுரி புத்தகத் திருவிழாவில் நூலகத் துறைக்கு என்று தனியாக அரங்கு ஒதுக்க வேண்டும் என்று விழாக் குழுவினரிடம் நான் கேட்டுக் கொண்டதன் பெயரில் அரக்கு ஒதுக்கப்பட்டது. அதில் நூலகங்களில் செயல்பாடுகள், நூலகங்களின் எண்ணிக்கை விவரிக்கப்பட்டது. மெய்நிகர் கருவியும் காட்சிப்படுத்தப்பட்டது. புத்தகத் திருவிழா பணிக்கு நூலகர்கள் 10 பேர் 11 நாட்கள் நியமிக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது, தினமும் சுழற்சி அடிப்படையில் பத்து நூலகர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதன் மூலம் புத்தகக் கண்காட்சிக்கு வர வாய்ப்பு இல்லாத நூலகர்களும் புத்தகத் திருவிழாவை காண முடிந்தது. புத்தகத் திருவிழாவில் நூல் விற்பனை விவரம், இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், விழாவிற்கு வரும் பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளி விவரங்களை திரட்டும் பணிகளை நூலகர்கள் மேற்கொண்டனர். இந்த பணிகளை நூலகர்கள் சிறப்பாக செய்தனர்.
இவ்வாறு நூலகத்துறை சிறப்பாக செய்து இருந்தாலும், சில குறைகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். ஏனென்றால், மற்ற மாவட்டங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள் தர்மபுரி புத்தகத் திருவிழா ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக சுட்டிக்காட்டுகிறேன். நூலக அரங்கில் விழாவிற்கு வரும் வாசகர்களுக்கு துறையின் நோக்கம், செயல்பாடுகள், மாநில அளவில் உள்ள நூலகங்கள் எண்ணிக்கை, நூலகத்துறையின் சிறப்பு திட்டங்கள் அடங்கிய கையேடு பத்தாயிரம் பிரதி அச்சடித்து வருபவர்களுக்கு கொடுக்கலாம் என்று ஆலோசனை வழங்கினேன். அந்த கையேடும் தட்டச்சு செய்து ஒழுங்குப்படுத்தி மாவட்ட நூலக அலுவலரிடம் கொடுத்தேன். அச்சு செலவுக்கான தொகையை விழாக் குழு ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்கள். இது என்னுடைய ஏற்பாடு என்பதால் அதை அவர்கள் செய்யவில்லை.அடுத்து, 'தருமபுரி வாசிக்கிறது' என்னும் ஒரு நிகழ்ச்சியை செப்டம்பர் 5ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகத்தை வாசிப்பது என்று விழாக் குழு முடிவு செய்தது. அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், புத்தகத் திருவிழாக் குழுவினர் அளே தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் கலந்து கொள்ளவில்லை. மேலும், மாவட்ட நூலக அலுவலர் நூலகர்களை இந்த 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்படவில்லை. மாவட்ட நூலக அலுவலரும் எந்த பள்ளியிலும் கலந்து கொள்ளவில்லை. எந்த நூலகரும் அருகாமையில் இருக்கும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சி சிறப்பாக அமைய நூலகர்கள் அந்தந்தப் பகுதியில் இருக்கின்ற பள்ளிகளில் நூலகப் புத்தகங்களை வழங்கி வாசிக்க வைக்கலாம்' என்று மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் நடைபெற்ற விழாக் குழுவில் நான் கூறினேன். இந்த யோசனையை நான் முன்மொழிந்தேன் என்பதற்காக இவ்வளவு சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியை நூலகத்துறை புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
மாவட்ட ஆட்சியர் வடிவமைத்த அழைப்பிதழில் பகல் நேர நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்று என் பெயர் உள்ளது. ஆனால், மாவட்ட நூலக அலுவலர் எனக்கு ஒரு நாள் மட்டும் புத்தகத் திருவிழா பணி வழங்கி இருக்கிறார்.
அதுவும் கடைசி ஒரு நாள் மட்டும். கேட்டதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்று நான் நியமித்தேனா? என்றார். அதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டு விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணி செய்து வருகிறேன்.
இனி வரும் காலங்களில் சங்கப் பாகுபாடு, தனிநபர் வெறுப்புக்கு ஆளாகாமல் மாவட்ட நூலக அலுவலர்கள் அரசு விழாக்களை சிறப்பாக நடத்தி நற்பெயர் பெற முயற்சி செய்ய வேண்டும்.
அடுத்ததாக, ஊர்ப்புற நூலகர்கள் தங்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த ஆட்சியாளர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதைத்தான் நாமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஊர்ப்புற நூலகர் பணியிடம் பகுதிநேர பணியிடம். இந்த பணியிடத்தை முழு நேர பணியிடமாக அறிவித்து, முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இரண்டு நேரம் வேலை வாங்கிக் கொண்டு பகுதி நேர பணியாளர் என்று அறிவிப்பது ஏற்புடையதல்ல. ஊர்ப்புற நூலகர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் முழு நேர பணியாளர்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வேலை வேலை செய்தால் முழு நேர பணியாளர் என்று பொருள் ஆகாது. அரசாணையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். தங்களை முழு நேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று ஊர்ப்புற நூலகர்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நீதிமன்றம் சென்றாலும் வெற்றி அடைய முடியும். நன்றி. மீண்டும் சந்திப்போம்.
- சி. சரவணன்.
02.09.23 --- PG PUNCH GURUKULAM - Erode Chapter "உறவுகள் சிறகுகள்" Resource person PG K.R.Ashok.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் முழுநேர கிளை நூலகத்திற்கு (13/09/2023) போட்டித்தேர்வு மாணவ மாணவிகளின் கோரிக்கையினை ஏற்று விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரின் மேனாள் நூலகர் திரு. மாணிக்கசிவசாமி அவர்களை அனுகி சுமார் ரூபாய் 7000 மதிப்பு கொண்ட தரமான 10 நெகிழி நாற்காலி (plastics chairs) நன்கொடையாக பெறப்பட்டது.
தொடர்ந்து நூலக சேவையை சிறப்பாக செய்து வரும் இந்த இணைய இதழின் ஆசிரியர் நூலகர் சரவணன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பு வாழ்த்துக்கள்.👌🙏
ReplyDelete