நூலகர் செய்திமடல் 21
கடந்த வாரம் பொது நூலக இயக்குநர் சேலம் மாவட்டம் மைய நூலகத்தை திடீர் என்று ஆய்வு செய்தார். மாவட்ட மைய நூலகர் பணிநீக்கம் செய்யப்பட்டு, இதர நூலகர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. திரு. க. இளம்பகவத் அவர்கள் பொது நூலக இயக்குநராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை எந்த நூலகர் மீதும் இப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. சேலம் மாவட்ட மைய நூலகம் இயக்குநர் பார்வையின் போது தூய்மையாக இல்லை என்பதுதான் நூலகர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
நூலகங்கள் படிக்கும் இடங்கள். படிக்கும் இடங்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்தான். பெரும்பாலான கிளை நூலகங்களில் அலுவலக உதவியாளர் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை. நாள் ஒன்றுக்கு ரூபாய் 75 தினக்கூலி அடிப்படையில் நூலகங்களை தூய்மை செய்வதற்கு நூலர்கள் ஆட்களை நியமித்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாக்கி விட்டது.
இருந்தாலும், பல நூலகங்களில் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பகுதி நேர தூய்மை பணியாளர்கள் பணி புரிகிறார்கள். இவர்களுக்கு ஊர்ப்புற நூலகர்களைப் போல் வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, ஓய்வு பெற்ற பிறகு சிறப்பு ஓய்வூதியம் என்று வழங்கப்படுகிறது. இந்த சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலும் கிளை நூலகங்களில் தான் பணி புரிகின்றனர். முழு நேர நூலகங்களிலும் மைய நூலகங்களிலும் ரூ. 75 தினக்கூலி பணியாளர்கள் பணி புரிகிறார்கள். இவ்வளவு குறைந்த ஊதியம் பெறுபவர்களை வைத்துக்கொண்டு மாவட்ட மைய நூலகர்களும், முழு நேர நூலகர்களும் தங்கள் நூலகங்களை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும்? இவர்களிடம் எவ்வளவு நேரம் வேலை வாங்க முடியும்? இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.
சிறப்புக் காலமுறை ஊதியம் பெரும் பகுதி நேர தூய்மை பணியாளர்களை கிளை நூலங்களில் விட்டுவிட்டு, முழு நேர நூலகங்களில் 75 ரூபாய் ஊதியத்தில் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏன்? சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளர்களை முழு நேர நூலகங்களிலும் மைய நூலகங்களிலும் ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?
இதையெல்லாம் முழு நேர நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, தருமபுரி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், மாவட்ட மைய நூலகம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய முழு நேர நூலகங்களில் தூய்மை பணி செய்பவர்கள் ரூபாய் 75 பெரும் தினக்கூலி பணியாளர்கள். ஆனால், இந்த மாவட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்கள் கிளை நூலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை முழு நேர நூலகங்களில் பணியமர்த்தினால் நூலகங்களும் தூய்மையாக பராமரிக்கப்படும்; அதே நேரத்தில் இரண்டு நூலகர்கள் மட்டும் பணிபுரியும் முழு நேர நூலகங்களில் ஒரு நூலகர் விடுப்பில் சென்றால் நூலகங்கள் மூடப்படாமல் இயங்குவதற்கு வசதியாகவும் இருக்கும். சேலம் மாவட்ட மைய நூலகத்தில் பணிபுரிந்த நூலகர்களுக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த நூலகருக்கும் ஏற்படக் கூடாது.
ஆகவே, முழு நேர நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் நலன் கருதி, மாவட்ட நூலக அலுவலர்கள் சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் பகுதி நேர தூய்மைப் பணியாளர்களை உடனடியாக முழு நேர நூலகங்களில் பணியமர்த்த வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதல்வர் தொடர்ந்து மவுனம் ஏன்???
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி!
_மதுரை, செப்.23-_
“அரசு துறைகளை தனியார்மயமாக்கும் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம் கேள்வி எழுப்பினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். தமிழக அரசு அவர்களை அழைத்துப் பேசுவதும், பின் கோரிக்கைகளை கிடப்பில் போடுவதுமாக உள்ளது.
தற்போது அவர்களின் கோரிக்கைகளில் அரசு துறைகளை தனியார்மயமாக்குவது போல, பணியிடங்களில் நிரந்தர ஊழியரை நியமிக்காமல், வெளிமுகமை (அவுட் சோர்ஸிங்) மூலம் நியமிக்க அரசு உத்தரவு வெளியிடுவதால் சங்கத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் கூறியதாவது:
கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாணைகள் 115, 139, 152, இந்தாண்டு அரசாணை எண் 297 ஆகியவை அரசு துறைகளை தனியார்மயமாக்குவது போல உள்ளது. இதனால் இளைஞர்களுக்கான லட்சக்கனக்கான வேலைவாய்ப்பு பறி போகும் நிலை உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக் கையை நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.
தற்போது பதவிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு முறை சந்தித்து பேசியும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சியில் தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசுவதில்லை. தற்போது அழைத்துப் பேசினாலும் நிராகரிக்கின்றனர். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அரசு துறைகளில் சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர்களை வெளிமுகமை மூலம் நியமிக்கின்றனர். இதனால் வேலைப்பளு அதிகரிக்கிறது. மாநிலத்தில் 6.5லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. தற்போது 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கூறுகின்றனர். இந்நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். தனியார்மயப் படுத்தும் அரசாணைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி அக். 7 ல் செங்கல்பட்டில் மாநில பேரவை கூட்டம் நடத்தி போராட்டம் குறித்து திட்டமிடுவோம் என்றார்.'
23/09/2023 தினமலர் நாளிதழ் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம் செய்திக்குறிப்பு.
பொதுநூலக செய்திமடல் -21 மற்ற இதழ்களில் இருந்து சற்று வித்தியாசமாகவும் பல நல்ல தகவல்களை தாங்கி வந்துள்ளது வரவேற்க தக்கது.தினக்கூலி கூட்டுநர் ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.75 என்பது மிகவும் குறைவு என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கலாம்
ReplyDelete