நூலகர் செய்திமடல் 22
ஆசிரியர் உரை:
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த இதழில் தலையங்கம் படித்துவிட்டு பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். துப்புரவுப் பணி செய்பவர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி ரூ. 75ஐ, ரூ.150 என்று உயர்த்த வேண்டும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றனர் சிலர். எல்லாம் நியாயமான கோரிக்கைகள் தான். இது போன்ற பிரச்சனைகளை விவாதிப்பதும், உரிய அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முறையாக எடுத்துச் செல்வதும் அவசியம்.
"நூலகர் செய்திமடல்" ஒரு பத்திரிகை. பத்திரிகைகளில் தலையங்கம் எழுதுவது பத்திரிகை ஆசிரியர் பணி. சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி மக்கள் விவாதிக்க வேண்டும் என்னும் நோக்கோடு எழுதுவதுதான் தலையங்கம். அப்படித்தான், நூலகத் துறையில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி நூலகர்கள் விவாதித்துத் தீர்வு காண வசதியாக, விவாதத்தைத் தொடங்கி வைக்கும் பணியைத்தான் நூலகர் செய்திமடல் தலையங்கம் செய்து வருகிறது. இதில் எந்த உள்நோக்கமோ, விருப்பு வெறுப்போ இல்லை.
நான் 'நூலகர் குரல்' மாத இதழின் இணை ஆசிரியராக இருந்த போது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கட்டுரைகள் எழுதி வந்தேன். "எதிரும் புதிரும் - நூலகர்களும் அமைச்சுப் பணியாளர்களும்" என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த அன்றைய இயக்குநர் திரு. க.அறிவொளி அவர்கள் (தற்பொழுது பள்ளிக் கல்வி இயக்குநர்) அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, என்னுடைய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருவதாகவும், ஒரு கட்டுரை எப்படி நடுநிலையோடு எழுத வேண்டுமோ அப்படி நான் எழுதி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். மேலும், தொடர்ந்து எழுதுமாறு எனக்கு அறிவுறுத்தினார்.
அடுத்த சில நாட்களில் தினமணிக்கு 'இந்திய நூலகத் தந்தை எஸ். ஆர். ரங்கநாதன்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரை 12.8.2011 நூலகர் தினத்தன்று வெளியானது. அந்த கட்டுரையில் நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருதை 'இந்திய நூலகத் தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் விருது' என்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். இந்தக் கட்டுரை மீது கருத்துரு அனுப்புமாறு இயக்குநரை அரசு கேட்டுக் கொண்டது. இயக்குநர் அனுப்பிய கருத்துருவின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டு, அந்த ஆண்டு முதல் எஸ். ஆர். ரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நான் தினமணி, தினத்தந்தி முதலான முன்னணி பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். நூலகர் செய்திமடல் அச்சு இதழாக இரண்டு வெளியீடுகள் வெளியிட்டோம். தொடர்ந்து அச்சு இதழ் வெளியிட்டு நூலகர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது சிரமமாக இருப்பதால், மின்னிதழாக வெளியிடப்படுகிறது.
இந்த மின்னிதழ் தொடக்கி ஓராண்டு ஆகப்போகிறது. இந்த இதழில் நான் எழுதி வரும் தலையங்கத்தை தொடர்ந்து வாசித்து வரும் நூலக நண்பர்களுக்கும், அது பற்றி என்னுடன் கருத்து பரிமாறிக்கொள்ளும் நண்பர்களுக்கும் என் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலையங்கத்தில் இதைபற்றி எழுத்துங்கள் - அதைப்பற்றி எழுத்துங்கள் - என்று சிலர் தொடர்ந்து எனக்கு செய்தி அனுப்புகிறார்கள். அவை எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால், முடியவில்லை. செய்தியின் முக்கியத்துவம் அறிந்து தான் எழுதி வருகிறேன். சரி. இந்த வார செய்திக்கு வருகிறேன்:
ஊர்ப்புற நூலகர்கள்:
446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்னும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் ஊர்ப்புற நூலகர்களின் ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும் என்னும் நமது கோரிக்கை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பதவி உயர்வு கிடைக்காத ஊர்ப்புற நூலகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
ஊர்ப்புற நூலகர்கள் தங்கள் ஊதிய பிரச்சினைக்கு, பொது சங்கங்களின் உதவி இல்லாமல் தங்கள் முயற்சியிலேயே தீர்வு கண்டு விடலாம் என்று பல ஆண்டுகளாக எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள். ஆனால், ஊதிய விகிதம் மாறவில்லை / மாற்ற முடியவில்லை.
இனி நாம் செய்ய வேண்டியது என்ன?:
1). ஊர்ப்புற நூலகர் பணியிடத்தை முழுநேரப் பணியிடமாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும்:
ஊர்ப்புற நூலகர் பணியிடம் பகுதிநேரப் பணியிடம். அதனால்தான் சிறப்புக் காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் காலை, மாலை என இரண்டு வேளை, வேலை செய்வதால் முழு நேரப் பணியாளர் என்று நினைக்கிறார்கள். இதில் இவர்கள் முதலில் தெளிவு பெற வேண்டும்.
"பகுதி நேரப் பணியாளருக்கு முழு நேர ஊதியம் கோர முடியாது" என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளது. "ஊர்ப்புற நூலகர்கள் காலை மாலை என இரண்டு வேளை வேலை செய்வதால் ஊர்ப்புற நூலகர் பணியிடத்தை முழுநேர பணியிடமாக அறிவிக்க வேண்டும்" என்று போராட வேண்டும். இது தான் நாம் தற்பொழுது செய்ய வேண்டியது.
ஊர்ப்புற நூலகர் பணியிடம் முழு நேரப் பணியிடமாக அறிவிக்கப்பட்டால், ஊதிய விகிதம் தானாக உயர்ந்துவிடும். இதை செய்யாமல், வெறுமனே "ஊதிய விகிதத்தை உயர்த்துங்கள்" என்று கோரிக்கை வைத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீர்வு கிடைக்காது.
ஊர்ப்புற நூலகர்களை ஒருங்கிணைந்து செயல்பட்டவர்கள் பலருக்கும் தற்போது மூன்றாம் நிலை நூலகர்களாக பதவு உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இனி ஊர்ப்புற நூலகர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், எந்தவொரு கோரிக்கையையும் வென்றெடுக்க, வலுவான போராட்டம், விடா முயற்சி தேவை.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்த பெண்களை, தெருவுக்கு வரவைத்து வெள்ளையர்களுக்கு எதிராக போராட வைத்தது காந்தியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி. இது வரலாறு. நம் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இன்று அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படுவது அவசியம்.
சங்கத்திற்கு சந்தா கொடுத்து விட்டோம், இனி தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கக் கூடாது. எல்லா சங்கத்திற்கும் சந்தா கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வோம் என்றும் நினைக்கவும் கூடாது. ஊர்ப்புற நூலகர்கள் எல்லா சங்கங்களிலும் இருப்பதால் அனைத்து சங்கங்களும் இணைந்து போராட வேண்டியது அவசியம். எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். நன்றி. மீண்டும் சந்திப்போம்.
- சி. சரவணன், ஆசிரியர்,
நூலகர் செய்தி மடல். (8668192839)
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் உரையாடும் பொது நூலகத்துறை இயக்குநர் திரு க.இளம்பகவத் அவர்கள்.
நாள்: 3.10.2023.
இடம்: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
திருச்சி வரகனேரி வ. வே. சு. ஐயர் நினைவு இல்லத்தில் உள்ள வரகனேரி கிளை நூலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக முனைவர் பேராசிரியர் திரு. M.R.அசோகன், பேராசிரியர் திருமதி S. அருனா, பேராசிரியர் திருமதி. பகவத் கீதா, திரு.செல்வ விநாயகம், மற்றும் ஆசிரியர் மா.தன்ராஜ், வாசகர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நூலகர் மு. செந்தில்குமார் இவவிழாவில் கலந்த கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
பழவூர் அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் பழவூர் கிராம நல முன்னேற்ற சங்க தலைவரும், நூலக பெரும் புரவலரும், நூலக அறம் வாசகர் வட்ட ஆலோசகரும், நெல்லை மாவட்ட கலைஞர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க செயலாளருமான திரு. தா இசக்கியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நூலக அறம் வாசகர் வட்ட ஆலோசகரும், நூலக கொடையாளருமாகிய திரு R.சிவதாணு, அறம் வாசகர் வட்ட தலைவரும், நூலக புரவலருமாகிய திரு க.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரு ப. அன்பு செல்வன், திரு வே முருகன், திரு. பாடகர் பொ.ஆறுமுகம், திரு. தி .ராமகிருஷ்ணன் ஆகியோர் தலா ரூ. 1000 செலுத்தி நூலக புரவலராக இணைந்தனர். முன்னதாக நூலகர் பா.திருக்குமரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் நூலக புரவலர் தோழர் கபிலன், நூலக நண்பர் திரு வே. கார்த்திக் ராஜா, நூலக நண்பர் செல்வி. சு. மகரஜோதி, நூலக. நண்பர் திருமதி சோ. கனி, நூலக பணியாளர் சு. சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட துணை செயலாளர் ஆ.மாதவ தாஸ் நன்றி கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரை அடுத்த பள்ளிப்பேட்டை லக்ஷ்மி பங்காரு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நூலகத்துறை கருத்தரங்கில் "நூலகம் நமது நண்பன்" என்னும் தலைப்பில் நந்தனம் அரசு கலைக்கலூரி நூலகர் திரு ஆர்.கோதண்டராமன் உரையாற்றியபோது...
9.10.2023 அன்று தருமபுரி மாவட்டம், மடம் ஊர்ப்புற நூலகத்தில் திரு.மு.முனுசாமி ரோடு காண்ட்ராக்டர் என்பவர் ரூ 1000 செழுத்தி புரவலராக சேர்ந்து கொண்டா போது.
- மு.சித்ரா, ஊர்ப்புற நூலகர், மடம்.
தென்காசி மாவட்ட மைய நூலகம் - அடிக்கல் நாட்டு விழா குறித்து ஆலோசனைக் கூட்டம்
ரூபாய் ஆறு கோடி மதிப்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மாதிரியிலான அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மாவட்ட மைய நூலகம் தென்காசியில் அமைய உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், தென்காசி நகர்மன்ற தலைவர், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், கண்காணிப்பாளர் சங்கரன், நூலகர் பிரம நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
20.09.2023 அன்று திருநாவலூர் கிளை நூலகத்தை மாவட்ட நூலக அலுவலர் பார்வையிட்டார். அப்போது திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி சாந்தி இளங்கோவன் ரூ. 5000 செலுத்தி பெரும் புரவலராக சேர்ந்தார்.
- நூலகர் சசிகுமார்.
புத்தகக் கண்காட்சியில் சாக்லேட் கொடுத்திருக்கிறார்கள். டில்லி அப்பளம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். . முறுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்... ஆனால், மதுரை புத்தகக் கண்காட்சியில் சற்றுமுன் நடந்த சம்பவம் வேறு.. ஒரு வாசகி இந்த மல்லிகைப் பூவை கையில் கொடுத்துவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதை என்ன செய்வது? யாரிடம் கொடுப்பது? என்று தெரியவில்லை...!
என்னய்யா ஊர் இது...?
- மனுஷ்ய புத்திரன்,
நூலக ஆணைக்குழு தலைவர்.
வாசிப்பு திறனுக்கு ஊக்கப்பரிசு திட்டத்தில் செப்டம்பர் -2023 மாதத்தில் தேனி மாவட்டம் தென்கரை பெரியகுளம் முழுநேர கிளை நூலகத்தினை அதிகம் பயன்படுத்திய மாணவர் S.ஸ்ரீராமுக்கு தெய்வத்திருவாளர்கள் செளந்திரபாண்டியன்- பத்மாவதி நினைவாக மாதம் தோறும் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில் ரூபாய் 500/- (ஐநூறு) பரிசாக இன்சூரன்ஸ் S. பால்ராஜ் ஐயா அவர்கள் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் நூலக ஆர்வலர் மு.அன்புக்கரசன், முனைவர் G.K.மணிகார்திக், நல்நூலகர் வெ.விசுவாசம், நூலகர் ரா.பாக்கியலட்சுமி மற்றும் போட்டித் தேர்வு மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நல்நூலகர் ஆ.சவடமுத்து நன்றி கூறினார்.
பள்ளி மாணவ, மாணவியர்கள் நூலகத்தில் உறுப்பினராக இணைதல். தேனி மாவட்டம் வடகரை பெரியகுளம் கிளை நூலகலத்தில் டாகடர் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடும் விதமாக 100 அரசு பள்ளி மாணவர்களும், 100 அரசு பள்ளி மாணவிகளும் நூலகத்தில் உறுப்பினராக இணைக்கப்பட்டனர். பெரியகுளம் நகர்மன்ற தலைவர் திருமதி சுமிதா சிவக்குமார், நகர் மன்ற துனைத் தலைவர், நகர் மன்ற செயலாளர், நகர் மன்ற உறுப்பினர்கள், வாசகர் வட்டத் தலைவர் மு.அன்புக்கரசன், வழக்கறிஞர் மணிகார்திக் மற்றும் நூலகர்கள் கலந்து கொண்டனர். நாள்: 11.10.2033.
காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவில் பகுதி நேர நூலகராக பணி புரிந்து, தனது பணியை நிறைவு செய்த நூலகர் பழனி அவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் அவர்கள் நல்லாடை அணிவித்து சிறப்பு செய்தபோது. உடன் நூலக ஆய்வாளர் த.இளங்கோ.
மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் : 8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
Comments
Post a Comment