நூலகர் செய்திமடல் 24

 ஆசிரியர் உரை: 

அனைவருக்கும் வணக்கம்,

       நூலகர் செய்திமடல் தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. இது 24 ஆவது இதழ். தொடர்ந்து செய்தி மடலை வாசித்து வரும் நூலகர்களுக்கும், செய்திகள் அனுப்பும் நூலக நண்பர்களுக்கும், இதழில் வரும் செய்திகள் மீது கருத்து தெரிவிக்கும் நூலகர்கள் மற்றும் மாவட்ட நூலக அலுவலர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நூலகர் செய்தி மடல் linkகை நூலகர்கள் தங்கள் நண்பர்களுக்கும், வாட்ஸ் அப் குழுக்களுக்கும் forward செய்வதன் மூலம் மேலும் பலர் படிக்க வாய்ப்பு உள்ளது. இதனை செய்யுமாறு நூலக நண்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

 1). நூலகர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எழுதி வந்தோம். தற்பொழுது, கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் பலர் பயனடைந்துள்ளனர். சிறப்பாக கலந்தாய்வை நடத்தி முடித்த பொது நூலக இயக்குனர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 2).  தொடர்ந்து நூலகர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். ஓய்வூதிய திட்டத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், CPS திட்டத்தில் இருப்பவர்கள் நிலைமை பரிதாபத்துக்கு உரியது. பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மாதம் 10% ஊதியம் பிடித்தம் செய்துவிட்டு, "தற்பொழுது ஓய்வூதியம் இல்லை; உங்கள் கணக்கில் உள்ள பணத்தை வாங்கிச் செல்லுங்கள்" என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இது பற்றி நூலகர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் பெண் நூலகர் ஒருவர் "ஓய்வுக்குப் பிறகு எனக்கு மகளிர் உரிமைத் தொகையாவது கிடைக்குமா?" என்று கேட்டார். இது உண்மையிலேயே உருக்கமான கேள்வி.

 இந்த அரசாங்கத்திற்கு எதுவும் செய்யாதவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம், உரிமைத் தொகை என்றெல்லாம் வழங்கும் தமிழக அரசு, இந்த அரசாங்கத்திற்கு 25, 30 ஆண்டுகளாக ஓடாய் உழைத்து, தேய்ந்த நூலகர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாவது வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் பணிபுரிந்த ஆண்டுகள் அடிப்படையில் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று கணக்கு போட்டாவது, 20 ஆண்டுகள் பணிபுரிந்த நூலகர்களுக்கு 20,000 என்றும் 25 ஆண்டுகள் பணிபுரிந்த நூலகர்களுக்கு 25 ஆயிரம் என்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதுதான் சமூக நீதி. சமூக நீதிப் பேசும் ஆட்சியாளர்கள் இதை செய்வார்கள் என்று நம்புவோம்.

மீண்டும் சந்திப்போம்!

- சி.சரவணன், ஆசிரியர், 

நூலகர் செய்திமடல்.


கோவை மாவட்டம் சூலூர் கிளை நூலகத்தில், நூலக வார விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக சமுதாயத்திற்கு உதவும் பூச்சிகள் என்ற தலைப்பில்  திரு. மோகன் பிரசாத் சிறப்பாக உரையாற்றினார். இரண்டாம் நிலை  நூலகர் இளங்கோவன்  தலைமை வகித்தார். நூலகர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

நூலக மனிதர்கள்:
நீண்ட கால வாசகர்

- எழுத்தாளர்  எஸ். ராமகிருஷ்ணன் 

நூலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது வழக்கம். அந்த நாளில் சிறப்புரைக்காகத் தமிழ் அறிஞர்கள் எவரையாவது அழைப்பார்கள். அன்று புத்தக அறிமுகம் செய்து வைக்கும் சிற்றுரைகளும் நடைபெறும். நூலகப்பணியாளர்கள் மற்றும் புரவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
    அப்படி ஒரு விழா நடக்கும் போது நீண்டகால வாசகர் ஒருவருக்குப் பாராட்டுச் செய்யலாம் என்ற யோசனையைச் சொன்னேன். நூலகர் அதை உடனே ஏற்றுக் கொண்டார்.
    எந்த ஆண்டு முதல் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதுடன் எவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தருகிறார்கள் என்பதையும் வைத்து இருவரை நூலகர் தேர்வு செய்திருந்தார். அவர்களில் ஒருவர் உடல்நலமில்லை எனவே கலந்து கொள்ள இயலாது என்றார்.
    ஆகவே ரத்தினசாமி என்ற நீண்டகால வாசகருக்குப் பாராட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்தார்கள்.
    இதைப்பற்றி ரத்தினசாமியிடம் சொன்னபோது “அதெல்லாம் எதுக்கு“ என்று மறுத்தார்.
    “நாற்பது வருஷமா லைப்ரரிக்கு வந்துட்டு இருக்கீங்க. இது சாதாரண விஷயமில்லை சார். உங்களை கௌரவப்படுத்துவது எங்களுக்குப் பெருமை“ என்றார் நூலகர்
    ரத்தினசாமி ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் விடாப்பிடியாகச் சொல்லியதால் ஏற்றுக் கொள்வதாகவும் தன்னைப் பேசச் சொல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.
    “உங்க இஷ்டம்“ என்று நூலகர் சம்மதித்தார்
    நூலக விழா அன்று நூலகத்தை வண்ணக்காகிதங்கள் ஒட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். நூலகத்திற்கென்றே எப்போதும் ஒரு வாசனையிருக்கிறது. அது மாறவே மாறாது. அது போலவே எவ்வளவு வெளிச்சம் வந்தாலும் நூலகத்தின் அரையிருட்டு மறைவதேயில்லை.
    அலங்கரிக்கப்பட்ட பிறகு நூலகம் புதிய தோற்றம் கொண்டிருந்தது. பண்டிகை நாளில் வீடு புதிதாக மாறிவிடுவதைப் போன்ற ஆச்சரியமது. வழக்கமாக நூலகப்பணியாளர்களிடம் காணப்படும் சோர்வும் அலுப்பும் அன்று காணாமல் போயிருந்தது. ஒடியோடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
    மாலை ஐந்து மணி அளவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக நூலகக் கூட்டங்களுக்கு இளைஞர்கள் வருவது குறைவே. பெரும்பாலும் நாற்பது வயதைக் கடந்தவர்களே அதிகம் வருவார்கள். அதிலும் ஓய்வுபெற்றவர்களே மிக அதிகம். ஒன்றிரண்டு தீவிரவாசகர்கள் தவறாமல் வருவதுண்டு. கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தேநீரும் பிஸ்கட்டும் தருவது வழக்கம்
    ரத்தினசாமி முதன்முறையாகத் தன் மனைவியோடு நூலகத்திற்கு வந்திருந்தார். அவர்கள் இருவரும் கூச்சத்துடன் நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காண அத்தனை அழகாக இருந்தது.
    கூட்டத்திற்கு நகைச்சுவைப்பேச்சாளர் ஒருவர் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அவர் மதுரையிலிருந்து வரத் தாமதம் என்பதால் அனைவரும் காத்திருக்க வேண்டியதாகியது. ஒய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் தலைமை வகித்தார். நூறு பேருக்கும் குறைவாகவே வந்திருந்தார்கள்.
    ரத்தினசாமிக்கு ஒரு சால்வை அணிவித்துத் தங்க நிறத்தில் பிரேம்போட்ட வாழ்த்துமடல் ஒன்றை அளித்தார்கள். அதை வாங்கிக் கொள்ளும் போது அவரது கைகள் நடுங்குவதைக் கவனித்தேன்..
    எளிய மனிதர்கள் தனக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ளும் போது கண்கலங்கி விடுகிறார்கள். அந்த அங்கீகாரம் என்பது காலம் தரும் பரிசு என்றே நினைக்கிறார்கள்.
    ரத்தினசாமி மனைவியின் முகத்தில் அபூர்வமான சந்தோஷம். ஒரு மனிதன் புத்தகம் படிப்பதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் என்பது எத்தனை மகிழ்ச்சியான விஷயம்.
   நூலகம் தரும் அங்கீகாரம் என்பது பெரிய கௌரவம். உலகின் மிகப்பெரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சர்வதேச டப்ளின் இலக்கிய விருது உலகெங்கிலும் உள்ள பொது நூலகங்களின் பரிந்துரையின் பெயரில் அயர்லாந்தின் டப்ளின் நகரச் சபையால் வழங்கப்படுகிறது. இந்திய நூலகங்களும் இதற்கான பரிந்துரையை அனுப்பி வைக்கின்றன.
    ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழி பெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் தனிச்சிறப்பு விருதுத் தொகையான ஒரு லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் 88 லட்சம் ) எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் இடையில் பிரித்து அளிக்கப்படுகிறது. 75 சதவீதம் எழுத்தாளருக்கும் 25 சதவீதம் மொழிபெயர்ப்பாளருக்கும் வழங்கப்படுகிறது.
    உலகளவில் 177 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட நூலக அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மொழியில் வெளியான சிறந்த புத்தகங்களைப் பரிந்துரை செய்கின்றன – இதிலிருந்து ஒரு புத்தகம் சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
    உலகின் மிகச்சிறந்த இலக்கியப்பரிசு நூலகத்தின் பரிந்துரையால் வழங்கப்படுவது பெருமையே.
    எழுத்தாளர்களை இப்படி இந்தியா நூலகம் எதுவும் கௌரவிப்பதாகத் தெரியவில்லை.
    அன்று நூலகத்தால் கௌரவிக்கப்பட்ட ரத்தினசாமியை நன்றியுரை வழங்கும்படி நூலகர் கேட்டுக் கொண்டார். அவர் தயக்கத்துடன் வேண்டாமே என்று மறுத்தார். ஒரு சில வார்த்தைகள் பேசுங்கள் என்று வற்புறுத்தவே அவர் எழுந்து மைக்கின் முன்பு சென்றார்.
    பக்கத்தில் இருப்பவரிடம் சொல்வது போன்ற குரலில் பேச ஆரம்பித்தார்
    “1954ல் லைப்ரரிக்கு வர ஆரம்பிச்சேன். தற்செயலாத்தான் வந்தேன். அப்போ எனக்குப் பதினாறு வயது இருக்கும். சினிமா தியேட்டருக்கு போய் டிக்கெட் கிடைக்காமல் தான் லைப்ரரிக்கு வந்தேன். அது கூட நானா வரலை. கந்தசாமினு ஒரு பிரண்டு தான் என்னை அழைச்சிட்டு வந்தான். அவன் இப்போ இல்லை. இறந்து போயிட்டான். ஆனால் அவன் எனக்குச் செய்த பெரிய உபகாரம் லைப்ரரிக்கு அழைச்சிட்டுப் போனது தான்.
    அவன் தான் என்னை மெம்பராக்கி விட்டான். அப்போ என்ன வேலை செய்யப்போறோம். எப்படிப் பிழைக்கப்போறோம்னு மனசுல ஒரே குழப்பமா இருக்கும்.
    எங்க அப்பா ஜவுளிகடையிலே வேலை பார்த்தார். நாங்க ஆறு பிள்ளைகள். வீட்டில ரொம்பக் கஷ்டம். வறுமை. எட்டாம் வகுப்பு வரை தான் படிச்சேன். அப்புறம் நானும் கடைவேலைக்குப் போயிட்டேன். ஆனா அந்தக் கடை வேலை பிடிக்கலை. வேற என்ன செய்றதுனு தெரியலை.
    எங்க மாமா கடை தூத்துக்குடியில இருந்துச்சி அங்கே போய் வேலை செய்யலாமானு தோணுச்சி. அப்போ தான் லைப்ரரியில போய்ப் படிக்க ஆரம்பிச்சேன்.
    என்ன படிக்கிறது எப்படிப் படிக்கிறதுனு எதுவும் தெரியாது. கையில கிடைக்கிற புத்தகத்தைப் படிப்பேன். நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிகிட முடிந்தது. புத்தகத்தைத் திறந்தவுடனே அது என்கூடப் பேசுறதா உணர்வேன். யாரோ பக்கத்துல இருந்து ஆலோசனை சொல்ற மாதிரியே இருக்கும்
    அப்போ லைப்ரரி வேற இடத்துல இருந்துச்சி. வீட்ல இருந்து நடந்தே வருவேன். புத்தகம் எடுத்துகிட்டு போய் ஸ்கூல் கிரவுண்ட்ல உட்கார்ந்து படிச்சிகிட்டு இருப்பேன். படிக்கப் படிக்க மனசுல ஒரு தெம்பு. தைரியம் வர ஆரம்பிச்சது. லைப்ரரி இடம் மாறிக்கிட்டே இருந்துச்சி. நானும் விடவேயில்லை.
    நாமளே ஒரு தொழில் பண்ணி பார்த்தா என்னனு தோணுச்சி. சிவகாசியில் போய் ஸ்கூல் நோட்டுகளை வாங்கிட்டு வந்து பையில் வச்சி ஒவ்வொரு ஸ்கூலா போய் விற்க ஆரம்பிச்சேன். அதுல நிறைய ஆள் பழக்கம் ஆகிருச்சி. அப்புறம் சின்னதா ஒரு ஸ்டேஷனரி கடை ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் நடத்தினேன். நிறையக் கடன். கடையை மூட வேண்டியதாகிப்போச்சி. மனசு உடைந்து போய் வீட்ல இருந்தேன். அப்பவும் புத்தகம் தான் துணை. படிச்சி படிச்சி தான் மனதை தேத்திக்கிட்டேன்
    பிளாஸ்டிக் குழாய் செய்ற கம்பெனிலே வேலைக்குப் போனேன். அப்புறம் கல்யாணம் ஆகிருச்சி. ரெண்டு பொம்பளை பிள்ளைகள் பிறந்தது. ஆறு வருஷம் அந்தக் கம்பெனியிலே வேலை செய்தேன். சம்பளம் கட்டலை.
    நாமளே பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கிற கம்பெனி ஆரம்பிப்போம்னு பொண்டாட்டி நகையை வித்து ஆரம்பிச்சேன். அது பிக்கப் ஆகிருச்சி. இருபத்தைந்து வருஷமா அது தான் என் தொழில்.
    இந்த ஊர்லயே பிறந்து இந்த ஊர்லயே கல்யாணம் பண்ணிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன். மெட்ராஸ் வரைக்குப் போயிருக்கேன். அதுக்கு மேல எந்த ஊருக்கும் போனதில்ல. ஆனா புத்தகம் எத்தனை நாடுகளை, எத்தனை ஊரை அறிமுகம் செய்து வச்சிருக்கு. பைசா செலவு செய்யாமல் புத்தகம் படிச்சே லண்டனை தெரிஞ்சிகிட்டேன். பெரிய பெரிய தலைவர்களைப் பற்றிப் படிச்சிருக்கேன். உலக யுத்தம் பற்றிப் படிச்சிருக்கேன்.
    சொந்த வாழ்க்கையில எத்தனையோ கஷ்டங்கள். சோதனைகள். அப்பவும் படிக்கிறதை விடலை.
    நாட்டுல புதுசு புதுசா கட்சி ஆரம்பிச்சி தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் வந்துனு நிறையப் பாத்துட்டேன். ஆனா என்னை ஒண்ணும் பாதிக்கலை. பிள்ளைகள் படிச்சி வளர்ந்து பெரிய ஆள் ஆகிட்டாங்க. எனக்கும் தலை நரைச்சி போச்சி. பொம்பளை பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்துட்டேன். ஆனா படிக்கிறதுல இருக்கிற ஆர்வம் குறையவேயில்லை
    இனிமே எதுக்குப் படிக்கணும்னு மனசுல தோணவேயில்லை. குற்றாலம் அருவியில போய் நின்னா குளிச்சிட்டு வெளியே வர தோணவே தோணாது. குளிச்சிகிட்டே இருக்கணும்னு ஆசையா இருக்கும். படிக்கிறதும் அப்படித் தான். நிறைய நல்ல புத்தகங்கள் என் மனசை குளிர வைச்சிருக்கு.
    முன்னாடி எல்லாம் புத்தகம் படிச்சி முடிச்சதும் நம்ம வாழ்க்கை எல்லாம் ஒண்ணுமே இல்லைனு தோணும். தனியா உட்கார்ந்து வருத்தப்படுவேன். ஆனா இப்போ அப்படியில்லை. நமக்குக் கிடைச்ச வாழ்க்கை அவ்வளவு தான். இதுக்குள்ளே யாரையும் கெடுக்காமல், கெட்டது செய்யாமல் வாழ்ந்திருக்கோம்னு தோணுது. அந்த அறிவு புத்தகம் கொடுத்தது.
    நான் நன்றி சொல்லணும்னு நினைச்சா அந்தப் புத்தகங்களை எழுதுனவங்களுக்குத் தான் நன்றி சொல்லணும். என்னைப் போல அறைகுறைகளுக்கு இந்த லைப்ரரி தான் கோவில்.
    வாரத்துல ரெண்டு தடவை லைப்ரரிக்கு வருவேன். புத்தகம் எடுத்துட்டு போவேன். நூலகத்தில நிறைய படிச்ச ஆட்களைப் பாத்துருக்கேன். யார் கிட்டயும் எதுவும் பேசமாட்டேன்.
    எடுத்துட்டுப் போன புக்கை வீட்ல வைத்து நைட் தான் படிப்பேன். ராத்திரி பதினோறு மணி வரைக்கும் படிச்சிகிட்டு இருப்பேன். ஆனா இத்தனை வருஷத்துல என் பொண்டாட்டி ஒரு வார்த்தை ஏன் இப்படிப் புத்தகத்தைப் படிச்சிட்டு இருக்கீங்கன்னு கோவிச்சிகிடலே. இன்னைக்கு அவங்களுக்கு நன்றி சொல்லிகிடுறேன்.
    மனசுல என்ன என்னமோ தோணிகிட்டு இருக்கு. நான் பேசுனதுல ஏதாவது தப்பு இருந்தால் மன்னிச்சிடுங்க. இதுக்கு மேல என்னால பேச முடியலை. உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
    என அவர் பேசி முடித்தபோது பார்வையாளர்கள் உணர்ச்சிப்பெருக்கில் கைதட்டினார்கள்
    பேசத்தெரியாது. இரண்டு வார்த்தை பேசினால் தடுமாறுவேன் என்ற ரத்தினசாமி எப்படி இப்படித் தன் நாற்பதாண்டு கால வாழ்க்கையைக் கொட்டித் தீர்த்தார்.
    படிப்பு ஒரு மனிதனைத் தேவையான இடத்தில் பேச வைக்கும். தேவையான இடத்தில் மௌனமாக்கும்.
    ரத்தினசாமி பேசி முடித்து நாற்காலியில் அமர்ந்தபோது அவர் மனைவி கண்களைத் துடைத்துக் கொள்வதைக் கண்டேன். அவர் தன் வாழ்த்துமடலை தன் மனைவியிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார். அதைத் தரும்போதும் ரத்தினசாமியின் கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன.
    விழா முடிந்து விடைபெறும் போது ரத்தினசாமி குற்றவுணர்வோடு கேட்டார்
    “ரொம்பப் பேசிட்டனா.. தப்பா எதுவும் பேசலையே“
    “ரொம்ப நல்லா பேசுனீங்க. மனசைத் தொடுவதாக இருந்தது“ என்றோம்
    ரத்தினசாமியின் மனைவியும் அதை அங்கீகரிப்பவர் போல ரத்தினசாமியைப் பார்த்துச் சொன்னார்
    “உண்மையைத் தானே சொன்னீங்க“
    அவர் சொன்னது சரி. உண்மையை தான் பேசினார். ஆனால் உண்மையைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசப் புத்தகங்கள் தான் கற்றுத் தருகின்றன. உண்மை அழிவற்றது. உண்மையின் குரலைக் கேட்கும் போது நம்மை அறியாமல் கலங்கி விடுகிறோம்.
    இந்த அங்கீகாரம் ரத்தினசாமியைப் போல எத்தனையோ பேருக்குத் தரப்பட வேண்டும்.
    ஒவ்வொரு நூலகமும் இது போல எளிய வாசகரைக் கௌரவிக்க வேண்டும்.  அதுவே சிறந்த பண்பாட்டின் அடையாளமாக இருக்கும்

- எழுத்தாளர்  எஸ். ராமகிருஷ்ணன் 

இணையத்தில் இருந்து.....
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், தளுகை கிளை நூலகத்தில் 03.11.2023 இன்று நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா த.மங்கப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. திருமதி ச.ஜெயந்தி தலைமையாசிரியர் தலைமையேற்று உரையாற்றினார். திருமதி மேகலா ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். நூலகர் வீ.கனகராஜ் நூலக உறுப்பினர் அட்டை வழங்கினார். ஆசிரியர்கள் புவனா, கீதாஞ்சலி, வசந்தி,  வெண்ணிலா  வாழ்த்துரை வழங்கினர்.  அனுபாமா ஆசிரியர் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
7.11.2023 இன்று தளுகை கிளை நூலகத்திற்கு  த.பாதர்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் நூலக உறுப்பினராக சேர்ந்தார் கள் பள்ளி ஆசிரியர் அவர்கள் நூலக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

சின்னமனூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர், எழுத்தாளர், முனைவர் இரா.மனோகரன், தோட்டக் கலை அலுவலர் (பணி நிறைவு) பெரியகுளம் வாசகர் வட்டத்தினரின் நண்பர் ஐயா அவர்கள் நூற்றாண்டு நூலகம் தென்கரை, மற்றும் வடகரை கிளை நூலகங்களில்  பெரும் புரவலராக தலா ரூபாய் 5000/- செலுத்தி தன்னை வாசிப்பு வட்டத்தினர் நட்புடனும்,  தனது படைப்பு நூல்களும்  இரண்டு நூலகங்களுக்கும் வழங்கினார்.
நூலக ஆர்வலர் மு.அன்புக்கரசன், வழக்கறிஞர் G.K.மணிகார்திக், பொறியாளர் பா.நித்யானந்தம், நல்நூலகர் வெ.விசுவாசம், நல்நூலகர் ஆ.சவடமுத்து மற்றும் புரவலர்கள், வாசகர்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


 5.11.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டம், விழுந்தயம்பலம் புனித அந்தோணியார் ஆலயத்திலிருந்து மறைக் கல்வி மாணவ மாணவியர்கள் விழுந்தயம்பலம் ஊர்ப்புற நூலகத்திற்கு வருகை புரிந்து நூலகக் பயன்பாடுகளை தெரிந்து கொண்டனர்.


செங்கோட்டை நூலகத்தில் நடைபெற்ற மத்திய அரசு பணிக்கான தமிழக அரசின்  நான் முதல்வன் திட்ட நிறைவு விழாவில்...
செங்கோட்டை நூலகத்தில் 56-வது நூலக வார விழா 

                முதல் நாள் நிகழ்ச்சியாக  "வாசிப்பு வளரட்டும் " என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட துணைத் தலைவர்  ஆதிமூலம் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட இணைச்
செயலாளர்  செண்பக குற்றாலம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் பால்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். செயலாளர் சீதாராமன் நிர்வாகிகள்  அபு அண்ணாவி, ராஜ குலசேகர பாண்டியன், சபீக்அகமது, காதர் மைதீன், SMSS பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
           குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியைகள் திருமதி .மாலினி திருமதி .தீபா ஆகியோர் நடுவராக செயல்பட்டார்கள்.
           முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார். இவ்விழாவில் 11 பள்ளிகளிலிருந்து 45 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி அளவில்  பணகுடி
 கிளை நூலக தளிர் வாசகர் வட்ட தலைவர் மரியாதைக்குரிய திரு. S. அந்தோணி ஆரோக்கியராஜா அவர்கள் தலைமையில் 56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு  நவம்பர்- 14 முதல் நவம்பர் -20 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை மாண்புமிகு சட்டமன்ற பேரவை தலைவர் திரு.மு. அப்பாவு- MLA (இராதாபுரம் சட்டமன்ற தொகுதி)  அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து விழா அழைப்பிதழ் வழங்கியபோது.
தேனி மாவட்ட மைய நூலகத்தில் இன்று (14.11.23) 56வது தேசிய நூலக வார விழா இனிதே துவங்கியது. விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் திருமதி அர.கோகிலவாணி தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் சு.முத்துக்குமரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மையநூலக புத்தகக் கண்காட்சியை லயன் ஆடிட்டர் திரு. ஆர். ஜெகதீஷ் திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். நூலக வார விழா வாழ்த்துரையை மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்கறிஞர் திரு.M.K.M. முத்துராமலிங்கம், எழுத்தாளர் திரு. நீல.பாண்டியன், நல் நூலகர் (ஓய்வு) திரு.கு.சந்திரசேகரன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி தொகுப்பினை வாசகர் வட்ட பொருளாளர் திரு. வே.சிதம்பரம் வழங்கினார். விழாவில் நூலக வாசகர்கள், மாணவர்கள் நூலகர்கள் திரளாக  கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் நூலகர் அ.மாலதி நன்றி கூறினார்.

உதகமண்டலம் மாவட்ட மைய நூலகத்தில்  56வது தேசிய நூலக வார விழா:
 14.11.2023 அன்று மைய நூலக வளாகத்தில் மாவட்ட நூலக அலுவலர் திருமதி ஆர். வசந்த மல்லிகா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் இரண்டாம் நிலை நூலகர் ந சிவாஜி அனைவரையும் வரவேற்றார். வாசர் வட்டத்  துணைத் தலைவர் சுரேஷ் ரமணா தலைமை தாங்கினார். மைய நூலகர் ரவி முன்னிலை வகித்தார். கவிஞர் ஜே பி தஸ்தகீர் நூலகர், கண்ணாகன், நூலகர் மெட்டில்டா, புலவர் நாகராஜ், திருமதி அனுராதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். யூனிக் பள்ளி, பிரிக்ஸ் பள்ளி மாணவ மாணவிகளும், எமரால்டு கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

நினைத்துப் பார்க்கிறேன்
(உத்திராபதி, மூன்றாம் நிலை நூலகர், 
கடலூர் மாவட்டம்.)

    பொது நூலகத்துறையில் வழங்கு முனை நூலகம் எனும் பகுதி நேர நூலகத்தில் நூலகராக பணியில் சேர்ந்து, 33 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
      அன்றைய தினம் (07.11.1990 )
 எனது பணிக்கு மாதம் 60 ரூபாய் தொகுப்பூதியம்.  இந்த அறுபது ரூபாய் வாங்க நான் பட்டபாடு ...அடடா...
       தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகராக கடலூர் இருந்த போது , தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் நூலக நிதியில் கட்டப்பட்ட கிளை நூலகம் மஞ்சக்குழி ஆகும். அக்கட்டடம் திறக்கும் போது அதற்கான நூல் வழங்கு முனை திறக்கப்பட வேண்டும் என்று அன்றைய திமுக அரசு முடிவெடுத்தது. அதன்படி அன்றைய தினம் சிதம்பரம் வட்டம் ( தற்பொழுது புவனகிரி வட்டம் , கடலூர் மாவட்டம்) பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டில் திறக்க நூலக ஆணைக்குழு முடிவு செய்து , அப்போது சாமியார் பேட்டையில்
பணிபுரிந்த தெய்வத்திரு. பாண்டுரங்கன் என்பவரின் முயற்சியால் இலவச கட்டடம் மற்றும் தளவாட சாமான்கள் பெறப்பட்டு தற்காலிகமாக ஊராட்சி மன்றக் கட்டடத்தின் தென்பகுதி அறை ஒதுக்கப்பட்டது. 
     என்னுடைய நூல் வாசிப்பை அறிந்த அவர், தம்பி நீ ஏன் தினமும் (4+4) எட்டு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து நூல்களை மாற்றிச் செல்கிறாய். பெரியப்பட்டில் திறக்கப்படும் நூல் வழங்கு முனையில் பணியாற்றினால் நிறைய நூல்களை படிக்கலாம் என என் படிப்பார்வத்திற்கு தூண்டுகோலாக இருந்து , அன்றைக்கு பெரியப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த திரு.கோ.சேட்டு ( பெரியாண்டிக்குழி ) அவர்களின் பரிந்துரையின் பேரில் நான் நியமனம் செய்யப்பட்டேன்.
    (ஏற்கனவே, 1982 இல் இன்று நான் பணிபுரியும் பரங்கிப்பேட்டை கிளை நூலகத்திலும், அகரம் கிளை நூலகத்திலும் ( அந்த நூலகம் - இன்று பு. முட்லூர் ஜவுளிக்கடையில் இயங்கி வருகிறது) நான் உறுப்பினராக சேர்ந்து, 
தினமும் 11 கி. மீட்டர் தூரம் மிதிவண்டியில் சென்று நூலினை பெற்று வருவேன். அப்போது காப்புத்தொகையே வெறும் மூன்று ரூபாய் தான். அந்த பணம் கட்ட நான் பட்ட பாடு..... ) 
      இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் , இந்த மாத தொகுப்பூதியம் பெற இரண்டு முறை நூறு நூறு நூல்களாக மாதம் இரண்டு முறை மாற்றிச் சென்றால் தான் உண்டு. ஒரு முறை மட்டும் மாற்றினால் கிடையாது. இந்த வகையில் 7 மாதம் 5 நாள் ஊதியம் வழங்கவில்லை. இதில் வெட்கக்கேடான விஷயம் தீபாவளி மற்றும் பொங்கலும் அடங்கும். ஊதியம் நிறுத்தப்பட்ட போது குடும்பத்தை நடத்த சிரமப்பட்டேன். 
     பெரியப்பட்டு பகுதி நேர நூலகத்திற்கும் மஞ்சக்குழி கிளை நூலகத்திற்கும்  11 கிலோமீட்டர் தூரம். நேரிடையான போக்குவரத்து வசதி இல்லை. பு.முட்லூர் ஜவுளிக்கடை பேரூந்து நிறுத்தத்தில் இறங்கி மேற்கே ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கால்நடையாக புத்தகத்தை தோளிலும் தலையிலும் சுமந்து சென்று ஒப்படைத்த பிறகு தான் இந்த ஊதியம். இதனுடன் அந்தந்த மாதத்தின் நாளிதழையும் எடுத்து சென்று ஒப்படைக்க வேண்டும். அப்போது இருந்த நூலகர் (பெயர் தவிர்த்து விட்டேன்) செய்தித்தாளின் பக்கங்களை எண்ணிப்பார்த்து , குறைந்த பக்கத்தை தனியாக தாளில் குறித்து வைத்து... அந்த பக்கத்தை எடுத்து வந்து கொடுத்தால் தான் ஊதியம்... அது ஒரு தனிக்கதை.     
     07.11.1990 இல் தொகுப்பூதியத்தில் சேர்ந்த நான், பெயரிடப்பட்டு பகுதி நேர நூலத்தில் 26..09.2004 வரை பயணித்து ( ஊதியம் ₹475) , அதன்பின் இரட்டைப் பகுதி நேர நூலகராக 25.08.2006 வரை புதுச்சத்திரம் ஊர்ப்புற நூலகத்தில் பணிபுரிந்து(₹475+475=₹950) அதன் பிறகு, கடைசியாக (525+525 =1050) ஊதியமாக பெற்றேன். 26.08.2006 முதல் ஊர்ப்புற நூலகராக ரூபாய் 1500/- தொகுப்பூதியத்தில் புதுச்சத்திரத்தில் பணிபுரிந்தேன். 10.12.2006 முதல் மூன்றாம் நிலை நூலகராக இன்று வரை பணிபுரிந்து வருகிறேன்.
     ஊர்ப்புற நூலகராக பணி உயர்த்தி , மூன்றாம் நிலை நூலகராக பணியில் அமர்த்தி, என் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தவர் அன்றைய மாவட்ட நூலக அலுவலராக இருந்த திரு. சீ. அசோகன் (ஓய்வு) ஐயா அவர்கள் தான்.
      வறுமையிலும் வாழ்ந்த வசந்த நாள்களை நூலகத்தில் வாழ்க்கையை தொலைத்திட்டாலும், கடின உழைப்பும்
நேர்மையும் இன்று குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு இருக்க உதவுகிறது. 
    "போற்றுவோர் போற்றட்டும் , புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் " என்ற உணர்வுடன், இன்று வரை என் பணியை செவ்வனே செய்து வருகிறேன்.
    மனநிறைவே மகிழ்ச்சியான வாழ்க்கை...
     படத்தின் நடுவில் அமர்ந்து இருப்பவர் தான் 10.12.2006 ஆம் ஆண்டு பகுதி நேர நூலகராக பணி புரிந்த எங்கள் 13 பேருக்கு மூன்றாம் நிலை நூலகராக பணி நியமன ஆணை வழங்கிய 
திரு.சீ.அசோகன் ஐயா அவர்கள்.
     இடமிருந்து வலது பக்கத்தில்,  முதலாவதாக அமர்ந்து இருப்பவர் திரு. பச்சையப்பன்  முதல் நிலை நூலகர் (தர்மபுரி மாவட்ட நூலக அலுவலராக ஓய்வு) இரண்டாவதாக அமர்ந்து இருப்பவர் திரு. இரா. விஜயன் ( இன்று சேலம் மாவட்ட நூலக கண்காணிப்பாளராகவும், 
கடைசியில் அமர்ந்து இருப்பவர் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்)
     அடுத்த ஆண்டு ஜுலையில் ஓய்வு... ஆனால், இத்தனை ஆண்டுகள் நூலகத் துறையில் பணிபுரிந்தாலும் பங்கேற்புடன் கூடிய ஓய்வூதியம் என்பது தான் என் போன்றோருக்கு வருத்தம் அளிக்கிறது..... 

      நல்லதையே நினைப்போம்!!!!
அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் 
E-learning management system (ELMS) பயன்படுத்த விரும்பும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு:
https://elms.annacentenarylibrary.org/
 மேலே உள்ள வெப்சைட்டுக்கு சென்று,
Click sign up , then enter your personal informations and click on submit.
இனி, நீங்கள் உங்கள் email address and password பயன்படுத்தி ELMS சேவைகளை பெறலாம்.

- நூலகர் சி. சரவணன்.



தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தற்போது 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கலாம் என்று கூறியுள்ளது. இந்த கருத்தை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசு தற்போது அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய 5 வருடங்களில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்காதவர்களுக்கு சில புதிய நிபந்தனைகளுடன் கூடிய அரசு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகையை பெற அடுத்த மூன்று மாதத்திற்குள்ளாக பயனர்கள் Renewal employment card online ஆன்லைனில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்த சலுகை ஒரே ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அடுத்த 3 மாதங்களுக்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் மற்றும் 01-01-2014 க்கு முன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த அரசாணையானது அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் உள்ள அறிவிப்பு பலகையில் பொது மக்கள் தெரிந்துகொள்ள வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
நூலக வார விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட மைய நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில்  நடைபெற்ற புத்தகக் காட்சி விற்பனை தொடக்க விழா...


56வது தேசிய நூல வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா:
  திருச்சி வரகனேரி ஆர் சி புனித சவாரியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்   மாறுவேடப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு திருச்சி வரகனேரி கிளை நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து  நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.



போட்டித்தேர்வு பயிற்சியாளர்க்கு பாராட்டு: 
மாவட்டமைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக ஆங்கில புலமை மற்றும் பொது அறிவு வகுப்புகளை  போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில்   இலவசமாக நடத்தி  வரும் பணி நிறைவு செய்த இ எஸ் ஐ மேலாளர் ராஜகோபால் அவர்கள் இன்று 203 - வது வகுப்பினை நிறைவு செய்தார்கள் .தன்னலம் பாராது 
பொது நல எண்ணத்துடன் பட்டதாரிகள் போட்டித்தேர்வை எதிர் கொள்ளும் வகையில் தயார்படுத்தி வரும் பயிற்சியாளர் பணி சிறக்க பொது நூலகத்துறை மற்றும் போட்டி தேர்வர்கள்  சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன் நூலகர்கள் பிரம நாயகம் சுந்தர்    பாலசுப்பிரமணியன், நூலக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி, தென்காசி மாவட்ட  நூலக அலுவலக இளநிலை உதவியாளர் வினோத் ,  போட்டித் தேர்விற்கு பயின்று வரும் தேர்வர்கள் பாராட்டி மகிழ்ந்தனர் .
56- வது தேசிய நூலக வார விழா & குழந்தைகள் தினத்தில் இன்று பள்ளி மாணவர்க்கு புத்தக வாசிப்பு பயிற்சி வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் தென்கரை பெரியகுளம் நூற்றாண்டு நூலகத்தில்  பாரதியார் நடுநிலைப் பள்ளி 50- மாணவர்கள்  தென்கரை நூலகத்தில் இன்று வருகை புரிந்தனர். நூலகத்தின் பயன்கள், வாசிப்பு திறன், வாசிப்பின் மேம்பாடுகள்  பற்றி வாசகர் வட்டத் தலைவர் திரு.மு.அன்புக்கரசன் எடுத்துரைத்தார். மாணவர்களிடம் நூலகத்தில் உள்ள புத்தகம் வழங்கி படிக்கச் செய்து, படித்த புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகளும், இனிப்பும்  வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தலைமையாசிரியர்  திரு.செல்வராஜ் மற்றும் நூலகர் பாக்கியலட்சுமி ஆசிரியர்கள் & வாசகர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நல்நூலகர் ஆ.சவடமுத்து நன்றி கூறினார்.

5.11.23 ஈரோடு  நவீன நூலகத்தில் "ஒரு நாள் ஒரு கனவு" பயிலரங்கம் நடைபெற்றது.


தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஈரோடு மாநகர கிளை ஈரோடு நவீன நூலகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திண்டல் ஈரோடு இணைந்து நடத்திய ஒரு நாள் ஒரு கனவு சிறார்களுக்கான கதை சொல்லல் மற்றும் கதை எழுதுதல் பயிலரங்கம் நடைபெற்றது.

பயிற்றுநர்கள்

உதயசங்கர்  -- எழுத்தாளர் தலைவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

சங்கர் வே  --- எழுத்தாளர்

ஈரோடு ஷர்மிளா --- எழுத்தாளர்,

சவிதா ஜோ  --- எழுத்தாளர், கதை சொல்லி

சங்கீதா பிரகாஷ் ---- ஆசிரியர், கதை சொல்லி


நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள்,  கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம். 

Comments

  1. நூலகர் உத்திராபதி பணி அனுபவம் நிச்சயம் இப்பணியை எவ்வளவு ஈடுபாடோடு செய்துள்ளார் என்பது தெரிகிறது.மலரும் நினைவுகள் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31