நூலகர் செய்திமடல் 25

 ஆசிரியர் உரை: 

அனைவருக்கும் வணக்கம்,

நூலகர் செய்தி மடல் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. நூலகர் செய்தி மடல் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

நூலக வார விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நூலக வார விழாவும் குழந்தைகள் தின விழாவும் ஒன்றாக நடத்தப்பட்டு வந்தது. அந்த விழாவில்தான் நூலகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு நூலக வார விழா தனியாக நடத்தி, நூலகர்களுக்கும் நூலகங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதுவும் இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் பிறந்த ஊரான சீர்காழியில் விழா நடத்தியது பாராட்டுக்குரியது.  

தகுதியுள்ள நூலகர்களுக்கும் தகுதியுள்ள நூலகங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுகள். 

'ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நூலக வார விழாவில்,  மாவட்ட நூலக அலுவலர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் நூலகர்களைப் பாராட்டி சிறப்பு செய்தார்' என்னும் செய்தி வந்துள்ளது. இது பாராட்ட வேண்டிய ஒன்று. மற்ற மாவட்ட நூலக அலுவலர்களும் இது போன்று, நூலக வார விழாவில் சிறப்பாக பணிபுரியும் நூலகர்களை ஊக்கிவிக்க முன்வர வேண்டும். 

குடியரசு நாள் விழா, சுதந்திர நாள் விழா - ஆகிய விழாக்களில் மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதல் வழங்குகிறார்கள். மாவட்ட நூலக அலுவலர்களும் நூலகர்களை பரிந்துரைக்க வேண்டும். 

அடுத்து, நூலகத் துறை பணியாளர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.  ஆனால், இன்னும் பணிமாறுதல் ஆணை வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. பணிமாறுதல் பெற்றவர்களுக்கு விரைவில் ஆணை வழங்கப்படும் என்று நம்புவோம்.

மீண்டும் சந்திப்போம்!

- சி.சரவணன், ஆசிரியர், 

நூலகர் செய்திமடல்

சென்னை பெரம்பூர், நெல்வயல் சாலை முழு நேர நூலகத்தில் இரண்டாம் நிலை நூல்களாக பணிபுரிந்து வரும் திரு என். செல்வம் அவர்களுக்கு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் விருது வழங்கியபோது...
கோவை மாவட்டம் மூன்றாம் நிலை நூலகர் திரு ஆனந்த குமார்  அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் டாக்டர். எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது வழங்கியபோது... 

பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி!
மதிப்பிற்கும் மரியாதைக்கும் என்றும் உரிய பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்கு பணிவான வணக்கம். இப்பவும் நூலக வார விழாவும், பொது நூலகத்துறையில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு நூலக தந்தை S.R.ரங்கநாதன் பெயரில் நல் நூலகர் வழங்கும் விழாவும் எதிர் வரும் திங்கள்கிழமை (20.11.23) காலை 10.00 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீரும் சிறப்பும் வாய்ந்த சீர்காழியில் நடைபெற இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.நீண்ட காலமாக பள்ளி கல்வி துறையும், பொது நூலகத்துறையும் இணைந்து நடத்திய இந்த விழா இந்த ஆண்டு பொது நூலகத்துறை சார்பில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய ஒன்று ஆகும். அதுவும் நூலக தந்தை S.R.ரங்கநாதன் பிறந்த ஊரான சீர்காழியில் இந்த விழா நடைபெறுவது சால சிறந்த ஒன்று ஆகும். இதற்கு காரணமாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் மதிப்பிற்குரிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும்,இந்த விழா பொது நூலகத்துறையின் சார்பில் நடைபெற வித்திட்ட தங்களுக்கும்,தங்களுக்கு உறுதுணையாக இருந்த இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், மற்றும் பொது நூலகத்துறை இயக்குநகரக பணியாளர்களுக்கும் தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின்சார்பாக இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

-  த.இளங்கோ. மேனாள் மாநில பொது செயலாளர். தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம்.

28.11.2023 அன்று செந்துறை முழு நேர கிளை நூலகத்தில், 56 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருமதி.இரா. ஆண்டாள் தலைமை தாங்கினார். செல்வி.ச.வான்மதி நூலக பணியாளர் வாழ்த்துரை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் திரு.செல்லம் கடம்பன் மற்றும் முழு நேர கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் திரு.எம்.எஸ்.மதுக்குமார் முன்னிலை வகித்தனர். திரு.தா.மதியழகன் எழுத்தாளர் வாசகர் வட்ட பொருளாளர் ,  திரு. இ.மலர்மன்னன் உதவியாளர் மாவட்ட நூலக அலுவலகம், திரு.A. செல்வம் (Right Computer's) செந்துறை, திரு. பெ.பிரகாசம் தொலைத்தொடர்பு துறை (BSNL), திரு. அ. வேல்முருகன் நூலகர் இடையக்குறிச்சி, திரு.க.வெங்கட்ராமன் நூலக பனியாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில்  திரு.வி. எழில்மாறன்  ஒன்றிய செயலாளர் தி.மு.க (வ) செந்துறை ஒன்றியம் அவர்கள் நூலக வளர்ச்சிக்காக ரூ.5000/- வழங்கி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அத்துடன், திரு. பெ.பிரகாசம் தொலைத்தொடர்பு துறை (BSNL), மற்றும் அ.அனிதா இலைக்கடம்பூர் ஆகியோர் நூலக வளர்ச்சிக்காக ரூ.1000/- வழங்கி புரவலராக இணைத்துக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் 100 பள்ளி மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக இணைக்க திரு. பெ.பிரகாசம் தொலைத்தொடர்பு துறை (BSNL), மற்றும் சி.பிரபு உதவி பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோர் தலா ரூ.1000/- நன்கொடை வழங்கினர். நிகழ்ச்சியில் உறுப்பினர்கள், வாசகர்கள், மற்றும் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
முடிவில் திரு.தி.இளவரசன் மூன்றாம் நிலை நூலகர் நன்றி கூறினார்.


தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்திற்கு சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி இன்று பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

25.11.2023-சனிக்கிழமை    பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் - வாசகர் வட்டம் இணைந்து நடத்திய 56-வது தேசிய நூலக வாரவிழா நிறைவு நாள் விழாவில் மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா. சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.  வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் அகவி தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன்  போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றினார்.  வாசகர் வட்டத் துணைத் தலைவர் முனைவர் அ.தமிழ்க்குமரன், மேனாள் வாசகர் வட்டத் தலைவர்  மருத்துவர் கோசிபா, அரிமா சுகுமார் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் திரு.வைரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 2023-ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர். அரங்கநாதன் (நல்நூலகர்) விருது பெற்ற பாளையம் ஊர்ப்புற நூலகர் த.தாமரைச் செல்விக்கு  பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர்  பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார்.  பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிக்கு நடுவராக இருந்து ஒத்துழைப்பு நல்கிய மேலப்புலியூர் பள்ளி தமிழாசிரியர் திருமதி  ஆர்.சுமதிக்கு நமது  பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர்  பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார். மாவட்ட மைய நூலகத்தில் பயின்று டி‌என்‌பி‌எஸ்‌சி  தேர்வில் வெற்றி பெற்று தற்போது திருச்சி சிறைத்துறையில் பணியாற்றும் திரு.ராஜிவ்காந்தி  மற்றும் அவரது துணைவியார் சுகந்தி ஆகியோர் மைய நூலகத்திற்கு 5 மின்விசிறிகளை பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களிடம் வழங்கினார்கள். திருச்சி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகின்ற அறிகரன்பாபு  மைய நூலகத்திருக்கு 10 பிளாஸ்டிக் நாற்காலிகளை பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களிடம் வழங்கினார்கள்.  இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  நிறைவாக நூலகர்  மகாலட்சுமி நன்றியுரையாற்றினார்.
சென்னை பெரம்பூர் நெல்வயல் சாலை முழு நேர கிளை நூலகத்தில்  14/11/2023  அன்று 56- வது நூலக வார விழா முதல்  நிகழ்ச்சியாக புத்தகக் கண்காட்சி மற்றும் பேச்சுப் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டாக்டர் ஜியாவுல்லா கான்  மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி செல்வகுமாரி  தலா ரூபாய் 5000 வழங்கி நூலக பெரும் புரவலராக  இணைந்தனர். 
பொது நூலகத் துறை - கரூர் மாவட்டத்திற்கு நான்கு விருதுகள்...
கரூர் மாவட்ட மைய நூலகம் மாநில அளவில் அதிக நூலக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மாநில அளவில் அதிக நன்கொடைகள் பெறப்பட்டதை  பாராட்டி இரண்டு விருதுகளும்,  இனாம் கரூர் முழு நேரக் கிளை நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருதும், தாந்தோணி முழு நேரக் கிளை நூலகத்தின் நூலகர் திரு.ஆ.சதிஸ்குமார் என்பவருக்கு சிறந்த  நல்நூலகர் விருதும்  சீர்காழியில் 20-11-2023 தேதியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  பரிசு, கேடயம் மற்றும் பாராட்டிதழ் வழங்கி சிறப்பித்தார்.

ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் மாவட்ட நூலக ஆணை குழுவின் சார்பாக 56வது தேசிய நூலக வார விழா 18 .11. 2023 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவில் ஈரோடு மாவட்ட அளவில் அதிக உறுப்பினர் சேர்க்கை, புரவலர் சேர்க்கை, அதிக நன்கொடை மற்றும் காலி மனை நன்கொடையாக பெற்று சிறப்பிடம் பிடித்த 15 நூலகர்களை மாவட்ட நூலக அலுவலர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.  

         "அகத்தின் மொழி" என்னும் தலைப்பில் ஈரோடு வாசவி கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் கேப்டன் முனைவர் ந.மைதிலி சிறப்புரையாற்றினார். திருச்செங்கோடு கே எஸ் ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி நூலகர் மற்றும் இயக்குனர் முனைவர் ஏ எம் வெங்கடாசலம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக முதல் நிலை நூலகர் வரவேற்புரை ஆற்றினார். இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நன்றியுரை ஆற்றினார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பூளவாடி கிளை நூலகம்  இளம் வயது மாணவர்களிடம் வாசிப்பை நேசிக்க வைத்து பல்வேறு செயல்பாடுகளோடு பல்வேறு விழிப்புணர்வை சிறார்களிடம் நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் மாநில அளவில் சிறப்பாக  நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்கு  நூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்கு  விருதை அறிவித்தது.
 மயிலாடுதுறை மாவட்டம் நூலக தந்தை பிறந்த ஊரான சீர்காழி யில் நடந்த விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்கள் விருதையும் கேடயத்தையும் வாசகர் வட்டத்திற்கு வழங்கினார்.
நூலக ஆர்வலர் விருது மற்றும் கேடயத்தை வாசகர் வட்ட தலைவர் திரு க. சுப்பிரமணியன் மற்றும் வாசகர் வட்ட செயலாளர் நூலகர் ஆர். இலட்சுமணசாமி ஆகியோர் பெற்று கொண்டனர்.
20.11.23 அன்று மாண்புமிகு  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாநில அளவில் அதிக புரவலர்கள்  சேர்த்தமைக்கு காட்டுமன்னார் கோயில் முழு நேர கிளை நூலகத்திற்கு விருது வழங்கினார்.


20.11.2023 அன்று  தளுகை கிளை நூலகத்தின் 56 வது தேசிய நூலக வார  விழா த.மங்கப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப்  போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெற்றது. சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ச.ஜெயந்தி  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திரு நடராஜ் ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் திருமதி ரேவதி பரிசுகள் வழங்கினார்.  முடிவில் நூலகர் வீ.கனகராஜ் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


நெல்லை மாவட்டம், பழவூர் கிளை நூலகத்தில் அறம் வாசகர் வட்டம் சார்பில் 56 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவியருக்கும்,18 வயதிற்கு மேற்பட்ட நூலக வாசகர்களுக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கதை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அறம் வாசகர் வட்ட கௌரவ ஆலோசகரும், நூலக பெரும் புரவலரும், பழவூர் கிராம நல முன்னேற்ற சங்க தலைவரும், நெல்லை மாவட்ட டாக்டர் கலைஞர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க செயலாளருமாகிய திரு. தா.இசக்கியப்பன் தலைமை தாங்கினார். அறம் வாசகர் வட்ட தலைவரும், நூலக புரவலருமாகிய திரு க.வேல்முருகன், நூலக கொடையாளரும், அறம் வாசகர் வட்ட ஆலோசகருமான திரு.சிவதாணு, அறம் வாசகர் வட்ட பொருளாளரும் நூலக புரவலருமாகிய திரு மு.ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்ட துணைச் செயலாளர் திரு ஆ.மாதவதாஸ் B.A.,B.L, அவர்கள் வரவேற்றார். பழவூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு நா.அரிச்சந்திரன், வழக்கறிஞர் திரு.ச.காந்திமதிநாதன் B.A.,B.L., வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் திரு அ.பாண்டித்துரை, Ex.Army., இராதாபுரம் வட்ட நூலகர்கள் திருமதி த.அஜிதா, திருமதி பி.மேரிவின்மா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலக புரவலர்கள் திருமதி கல்பனா முத்துலிங்கம், திரு ப.சிதம்பரம், திரு சு.கபிலன்(எ) பாஸ்கர், திருமதி த.கலைவாணி மாதவதாஸ் நூலக நண்பர்கள் திருமதி மு.சுமதி, செல்வன் வே.கார்த்திக் ராஜா, செல்வி சு.மகரஜோதி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஆலங்குளம் சார்பதிவாளர் திரு. S.பரமார்த்தலிங்கம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

நூல்கள் நன்கொடை:
விழாவில் ஆலங்குளம் சார்பதிவாளர் திரு S.பரமார்த்தலிங்கம் அவர்கள் சுமார் 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை பழவூர் நூலகர் பா.திருக்குமரனிடம் நன்கொடையாக வழங்கினார்.

விழாவில் பழவூர் கிளை நூலகத்திற்கு தலா ரூபாய் 1000 (ஆயிரம்) வழங்கி 
1.ஆலங்குளம் சார்பதிவாளர் திரு S.பரமார்த்தலிங்கம்,
2.திருமதி.ப.கமலா பரமார்த்தலிங்கம்
3.வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் திரு அ.பாண்டித்துரைEx.Army
4. நூலக நண்பரும் இல்லம் தேடி கல்வி ஆசிரியருமாகிய திருமதி ப.சண்முகசுந்தரி
5. நூலக நண்பரும் இல்லம் தேடி கல்வி ஆசிரியருமாகிய திருமதி சோ.கனி
6.நூலக நண்பரும் இல்லம் தேடி கல்வி ஆசிரியருமாகிய திருமதி கு.பேச்சியம்மாள் ஆகியோர் தங்களை நூலக புரவலராக இணைத்துக் கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நூலகர் பா.திருக்குமரன் நன்றி கூறினார்.விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


56 - ஆவது தேசிய வார நூலக விழாவை முன்னிட்டு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற சிறை இல்ல வாசிகளுக்கு நற்சிந்தனையூட்டும் நூல்கள்  வழங்கும் விழா நேற்று (18.11.2023) கரூர் கிளை  சிறையில் நடைபெற்றது. 
 இவ்விழாவில் தலைமைக் குற்றவியல் நீதிபதி உயர்திரு. சி.ராஜலிங்கம் அவர்கள் தலைமையேற்று, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறை இல்ல வாசிகளுக்கு நற்சிந்தனையூட்டும் நூல்கள் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில்  கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறை இல்ல வாசிகளின் பயன்பாட்டிற்காக ரூ.30,000/- மதிப்புள்ள வண்ணத் தொலைக்காட்சி பெட்டி நன்கொடையாக வழங்கப்பட்டது...


செங்கோட்டை நூலகத்தில் நீதிக்கதை சொல்லும் போட்டி:

           செங்கோட்டை நூலகத்தில் வைத்து நூலக வார விழாவை முன்னிட்டு நீதி கதை சொல்லும் போட்டி நடைபெற்றது 12 பள்ளியில் இருந்து 88 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

56 வது தேசிய நூலக வார விழா (19.11.23) திருச்சி வரகனேரி கிளை நூலகத்தில் வாசகர் வட்டத்துடன் இணைந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி நடைபெற்றது.  இப்போட்டிகளில்  சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில்  திரு முத்துகிருஷ்ணன் ஆசிரியர் (ஓய்வு), ஆசிரியர் நிர்மலா, செல்வி சிவரஞ்சனி மற்றும் வாசகர்கள்  கலந்து கொண்டனர். நூலகர் மு. செந்தில்குமார் நன்றி கூறினார்.


ரோட்டரி கிளப் பெரியகுளம் & வாசகர்கள் வட்டம் பெரியகுளம் & டிரயம்ப் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை பெரியகுளம் நகர மன்ற தலைவர் திருமதி சுமிதா சிவக்குமார் கொடியசைந்து துவக்கி வைத்தார்.
56 வது தேசிய நூலக வாரவிழா 18.11.2023 அன்று ஈரோடு நவீன நூலகத்தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய நூலகர் ரகுபதிக்கு  மாவட்ட நூலக அலுவலர்  பாராட்டு சான்றிதழ் வழங்கியபோது.
கடையம் கிளை நூலகத்திற்கு 18/11/2023 அன்று எஸ்டிசி பள்ளி மாணவ மாணவிகள் வந்து நூல்களை படித்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை - தஞ்சாவூர் மாவட்டம் - தேசிய நூலக வார விழா நிறைவு நிகழ்ச்சி 17-11 - 2023 அன்று சிறப்புடன் நடைபெற்றது.

16.11.2023 அன்று 56வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு   தருமபுரி மாவட்டம்,  அதியமான் கோட்டை கிளை நூலக வளர்ச்சிக்காக வாசகர் வட்டத்தின் மூலம் தலா ரூபாய் ஆயிரம் செலுத்தி  புரவலர்களாக  S.சசிபூஷன் V.A.O. பெ.கண்ணன் இணைந்து கொண்டனர்.
- கோ.கணேசன், மூன்றாம் நிலை நூலகர், அதியமான் கோட்டை.
நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் 56வது தேசிய நூலக வார விழாவின் இரண்டாவது நாள் நிகழ்வாக புத்தகக் கண்காட்சி நடந்தது.
புத்தகக் கண்காட்சியை நீலகிரி சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு வி சிவதாஸ்  துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் திருமதி வசந்த மல்லிகா தலைமை தாங்கினார். முன்னதாக இரண்டாம் நிலை நூலகர் ந சிவாஜி வரவேற்றார். கவிஞர் நீதிமலை ஜேபி சுரேஷ் ரமணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கல்லூரி மாணவி செல்வி ஜெரோமினா புத்தக வாசிப்பின் அனுபவத்தை பேசினார். இறுதியாக நூலகர் பெட்டில்டா நன்றி கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், செய்யாறு அடுத்த பெருங்கட்டூரீல் அசனமா பேட்டை அக்னி சிறகுகள் லயன் சங்கம், பெருங்கட்டூர் ஊர்புற நூலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெருங்கட்டூர் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா (1) 56 ஆவது தேசிய நூலக வார விழா (2) குழந்தைகள் தின விழா (3) பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா என முப்பெரும் நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ரா. குருமூர்த்தி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் இ.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஊர்புற நூலகர் ஜா.தமீம்  வரவேற்புரை நிகழ்த்தினார். பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சி. பிரசாத் பாபு பரிசு வழங்கினார். அசனமா பேட்டை அக்னி சிறகுகள் லயன் சங்க பொருளாளர் டி. ஜி. கணேசன் குழந்தைகள் தின சிறப்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் மா. சிவானந்தம் நூலக வார விழாவின் சிறப்புகளை கூறினார். இந்த நிகழ்வில் ஆசிரியர் பிரவீன் குமார் லயன் சங்க உறுப்பினர் பாபு கலந்து கொண்டனர்.   சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தக பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியாக ஆசிரியர் மு. சந்தானம் நன்றி கூறினார்.
தேனி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா 6ம் நாள் நிகழ்ச்சியாக குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்து. விழாவின் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மெய்நிகர் நூலக (Virtual reality) பயன்பாடு குறித்து கம்பம் நூலகர் திரு.மணிமுருகன் விளக்கவுரை ஆற்றினார். விழாவிற்கு நூலகர் முருகன் முன்னிலை வகித்தார். வடுகபட்டி நூலகர் திருமூர்த்தி மாணவர்களுக்கு காட்சி விளக்கம் கொடுத்தார்.  திரு.ராஜசேகர் வரவேற்றார்.  நூலகர் திரு.பாலமுருகன் நன்றி கூறினார்.


நூலகத்தில் புரவலர், உறுப்பினர், நன்கொடை தளவாடங்கள் சேர்க்கை:

    நவம்பர் 29,  தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மேலந்தல் ஊர்ப்புற நூலகத்தில் இன்று புரவலர், உறுப்பினர் சேர்க்கையும், நன்கொடையாக தளவாடங்களும் பெறப்பட்டது.
    ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) மு காசிம் அவர்கள் இன்று புதன்கிழமை இந் நூலகத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
    அப்பொழுது மேலந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சா.ரமேஷ்குமார் அவர்கள் ரூபாய் ஆயிரம் செலுத்தி 47 வது புரலராகவும், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ச.உமாதேவி, 50 மாணவர்களுக்கான உறுப்பினர் தொகை யையும்,  சி.ராதாகிருஷ்ணன் வாசகர்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 3000 மதிப்புள்ள நெகிழி நாற்காலி களை நன்கொடையாகவும் வழங்கினார்கள்.
    இவ் ஆய்வுப்பணியின்போது ஊராட்சி மன்ற தலைவர் ம.பரந்தாமன், நூலகர் மு.அன்பழகன், பணியாளர் வே.பாஸ்கரன், ஆகியோர் உடனிருந்தனர். 

 தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்நூலகர் விருது பெற்றுள்ள கடையம் நூலகர் மீனாட்சி சுந்தரம், நூலக வளர்ச்சிப்பணிக்காக இந்த ஆண்டு சிறந்த வாசகர்வட்ட விருது பெற்றுள்ள திப்பணம்பட்டி வாசகர்வட்ட தலைவர் ப. தங்கராஜ்     செயலாளரும் நூலகருமான ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மதிப்பிற்குரிய திரு. துரை.ரவிச்சந்திரன் அவர்கள் நூலகர்களின்  பணியினை பாராட்டி நூலகம் மூலம் பொதுமக்களுக்கு அளப்பரிய சேவை செய்து வருவதற்கும் வாழ்த்தினை தெரிவித்தார்கள் உடன் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் நூலகர் பிரம நாயகம் சுந்தர் இளங்கோ நூலகத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .

Comments

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31