நூலகர் செய்திமடல் 28
ஆசிரியர் உரை:
அனைவருக்கும் வணக்கம்,
நூலகர்களுக்கான பணி மூப்புப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கை வர உள்ளது. அதற்குள்ளாக நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இல்லை என்றால் அடுத்து பல மாதங்கள் காத்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நூலகர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க இயக்குநர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
மீண்டும் சந்திப்போம்!
- சி.சரவணன், ஆசிரியர்,
நூலகர் செய்திமடல்
வேப்பிலான்குளம் ஊர்ப்புற நூலகத்திற்கு மாண்புமிகு சபாநாயகர் திரு மு.அப்பாவு அவர்களால் ரூபாய் 7 லட்சம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்டு, கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மாண்புமிகு சபாநாயகர், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திரு வி எஸ் ஆர் ஜெகதீஷ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் திரு முத்துக்குமார் தலைமையில் திறந்து வைத்தார். மேலும், நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தருவதற்கும் உறுதி அளித்துள்ளார். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நூலக ஆய்வாளர் திரு மீ.கணேசன் வடக்கன்குளம் நூலகர் (வேப்பிலான்குளம் கூ.பொ.நூலகர்) திரு மு. ராஜ்குமார் பழவூர் நூலகர் திரு பா.திருக்குமரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நூலகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
- சி.சரவணன், ஆசிரியர்,
நூலகர் செய்தி மடல்.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் 2014ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு பொது நூலகத்துறை sc/st பணியாளர் நலச் சங்கம் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் 03.01.2024 அனறு பாந்தியன் சாலை, எழும்பூர் சென்னை 8ல் உள்ள தமிழ் நாடு அரசு sc/st அலுவலர் நலச்சங்கப் பொதுச் செயலாளர் K B G திலகர் MA.அவர்கள் முன்னிலையில், டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு பொது நூலகத்துறை sc/st பணியாளர் நலச் சங்கத்தை இணைத்தார் மாநிலத்தலைவர் நல்நூலகர் நா, அண்ணாதுரை. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!
சென்னை புத்தகக் காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான 47ஆவது சென்னை புத்தகக் காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜனவரி 3ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 21ஆம் தேதி வரை சென்னை புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் புத்தகக் காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் ‘முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி’ விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கினார். சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கியும் கவுரவித்தார்.
செங்கோட்டை நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்விற்கு மாதிரி தேர்வு:
செங்கோட்டை நூலகத்தில் வைத்து இரண்டாவது முறையாக தேசிய திறனாய்வு தேர்விற்கு (NMMS)மாதிரி தேர்வு நடைபெற்றது .இதில் மேலகரம், வல்லம் ,சீவ நல்லூர், புளியரை, இலஞ்சி, போன்ற பகுதிகளில் இருந்தும், செங்கோட்டை பகுதியில் இருந்தும் 190 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
செங்கோட்டை ரோட்டரி கிளப் உதவியோடு இந்த மாதிரி தேர்வு நடைபெற்றது.இறுதியில் அதிக மதிப்பெண் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் பால்ராஜ், செயலாளர் சீதாராமன், முன்னாள் செயலாளர் அபு அண்ணாவி,சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .நூலகப் பணியாளர் விஜயலட்சுமி இந்த தேர்வை நடத்திக் கொடுத்தார் .
முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார் .
நகராட்சிகள் சார்பில் திறக்கப்படும் நூலகங்களை நிர்வகிக்கும் பொறுப்பு Out sourcing முறையில் திருச்சியை சேர்ந்த Fusion Manpower & Infra Services என்கிற
நிறுவனத்திற்கு வழங்ப்பட்டுள்ளது. நூலகத்திற்கு Librarian cum Care Taker என்கிற பெயரில் மாதம் ரூ27,000/- ஊதியத்தில் நூலகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை நேரம். வார விடுமுறை வெள்ளிக்கிழமை. மேலும் வழக்கம்போல் அரசு விடுமுறைகள் உண்டு.
நிறுவனத்திற்கு வழங்ப்பட்டுள்ளது. நூலகத்திற்கு Librarian cum Care Taker என்கிற பெயரில் மாதம் ரூ27,000/- ஊதியத்தில் நூலகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை நேரம். வார விடுமுறை வெள்ளிக்கிழமை. மேலும் வழக்கம்போல் அரசு விடுமுறைகள் உண்டு.
- ஆ. செல்வராஜ்
செங்கோட்டை நூலகத்தில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா:
10-வது ஆண்டாக செங்கோட்டை நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .இதில் விருந்தினராக வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத் கலந்து கொண்டு சிறப்பித்தார் .மேலும் வாசகர் வட்ட இணைச் செயலாளர்செண்பக குற்றாலம் ,விழுதுகள் சேகர், பட்டிமன்ற பேச்சாளர் மஹாமுதாசையது, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு, பொருளாளர் ஆறுமுகம், இவர்களுடன் போட்டித் தேர்வு மாணவர்கள், வாசகர்கள், நூலகப் பணியாளர் மாரியப்பன், கார்த்திக், விஜயலட்சுமி, ரேவதி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் நூலகர் ராமசாமி நன்றி தெரிவித்தார் .
தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் சமத்துவப் பொங்கல்.
இராமநாதபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு வாசகர் வட்டம் இணைந்து மாவட்ட மைய நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா .சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நூலக தோழர்களும்,. வாசகர் வட்ட நிர்வாகிகளும் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவ மாணவியரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- த.இளங்கோ, மாவட்ட நூலக அலுவலர்( பொ), இராமநாதபுரம் மாவட்டம்.
திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணாகிளை நூலகத்தில் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் புத்தாண்டு சந்திப்பு மற்றும் இளையோர் உரையரங்கம் நடைபெற்றது.
திருக்கோவலூர் முழு நேர கிளை நூலகத்தை பயன்படுத்தி TNPSC குரூப் 2A முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி ஆணை பெறவுள்ள நூலக வாசகர் க.கோவிந்தசாமி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை, ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு, திருக்கோவலூர் நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- மு. அன்பழகன், நூலகர்.
பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை குப்புசாமி தலைமை வகித்தார் கிராம நிர்வாக அலுவலர் த. பழனி முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பக்தன் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கினார். பெருங்கட்டூர் வருவாய் ஆய்வாளர் வ. சேர்மகனி சமத்துவ பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்
கிராம நிர்வாக அலுவலர் த. பழனி அவர்கள் ஆண்டுதோறும் பெருங்கட்டூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார் நிகழ்வில் கிராம உதவியாளர் சீனுவாசன் நூலக புரவலர் மாரிமுத்து ரேவதி உடன் இருந்தனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்புற நூலகர் ஜா.தமீம் செய்திருந்தார்.
_________________________________________
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் தளுகை கிளை நூலகத் திற்கு 6.1.2024 சனிக்கிழமை இன்று திருJCB இராஜா த/ பெ ஜெயவேல் த.முருங்கப்பட்டி அவர்கள் ரூபாய் 1000.00 நன்கொடையாக வழங்கி 85 வது புரவலராக இணைந்துள்ளார்.
நூலகர் செய்திமடலை அச்சு வடிவில் வெளியிடலாம், அந்தளவிற்கு செய்திகள் சேகரித்து அனுப்புகிறீர்கள். வாழ்த்துகள்!
- நா. அண்ணாதுரை, இரண்டாம் நிலை நூலகர், சென்னை.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.(11-01-2024)
தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா தென்காசி மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்றது மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தென்காசி தலைமையிலும் இந்தியன் வங்கி மேலாளர் வினோத்குமார் முன்னிலையிலும் விழா நடைபெற்றது விழாவில் அலுவலக கண்காணிப்பாளர் திருமலை குமாரசாமி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிவேலன் உதவி மேலாளர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முகம்மது சலீம் மீரான் கவிஞர் குழந்தை ஜேசு நூலகர்கள் பிரம நாயகம் சுந்தர் ஜூலியா ராஜ செல்வி நிஷா கிறிஸ்டிபாய் உதவியாளர் ஜேசுராணி வாசகர் வட்ட நிர்வாகிகள் முருகேசன் ராஜி , கீழப்புலியூர் செல்வி இலஞ்சி செந்தில்வேல் சுந்தரகுமாரி வாசகர்கள் பொது மக்கள் போட்டி தேர்வுக்கு பயின்று வரும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
7.1.2024ம் தேதி மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பெயரில் அதியமான் கோட்டை ஊராட்சி தி.மு.க. கிளை கழகம் சார்பில் கிளை நூலகம் அதியமான் கோட்டை நூலக வளர்ச்சிக்காக ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலராக சேர்க்கப்பட்டது.
- கோ.கணேசன், மூன்றாம் நிலை நூலகர்,
அதியமான் கோட்டை.
மகாராஷ்டிரா அரசு ஊழியர் ஆசிரியர் போராடியதன் விளைவாக மகாராஷ்டிரா அரசு பழைய பென்ஷன் திட்டத்தை ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. போராடினால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக உள்ளது.
நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம்.
மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் : 8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
சனவரி 2024 இதழில் நூலகம் சார்ந்த செய்திகள், தகவல்கள் அருமை.
ReplyDeleteபெ.பிரபாகரன்,
பணி நிறை நூலகர
தருமபுரி.