நூலகர் செய்திமடல் 32

   ஆசிரியர் உரை: 

அனைவருக்கும் வணக்கம்,

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. யார் யாருக்கோ வாக்குறுதி தருகிறார்கள். எந்த கட்சியினருக்கும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி ஞாபகம் வரவில்லை.  

    'ஓய்வூதியம் தருகிறோம்' என்று சம்பளத்தில் 10 சதவீத தொகை பிடித்தம் செய்கிறார்கள்.  ஒய்வு பெற்றால் ஓய்வூதியம் தர மாறுகிறார்கள். 'பிடித்தம் செய்த தொகையை வாங்கிக்கொண்டு போங்கள்' என்கிறார்கள். 'பிடித்தம் செய்த தொகையை நீங்களே வைத்துக்கொண்டு மாதா மாதம் எதோ ஒரு தொகையை ஓய்வூதியமாக கொடுங்கள்' என்று கேட்டல், அரசு முடிவு செய்ய வில்லை என்கிறார்கள்.   

    ஒய்வு பெற்ற நூலகர்கள், ஓய்வூதியம் இல்லாமல் சிரமபடுவதை பார்க்க முடியவில்லை. அரசு ஊழியர்கள் அரசின் அடிமைகள் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆழ்ந்துப் பார்த்தல் அது ஒரு வகையில்  உண்மையும் கூட. இந்த அடிமைகளுக்கு எதற்கு ஒட்டுரிமை? என்று நான் பல நேரங்களில் நினைப்பது உண்டு.  நம்மை கண்டு கொள்ளாதவர்களுக்கு ஒட்டு போட வேண்டுமா? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.  சரி, இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. மன மாற்றம் வருமா என்று பார்ப்போம்.

    அடுத்து, இந்த இதழில் நூலகங்களுக்கான பருவ  இதழ்கள் ஆன்லைன் பதிவேற்றமும் நடைமுறைச் சிக்கல்களும் என்னும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதி இருக்கிறேன். அனைத்து நூலகர்களும் வாசிக்க வேண்டிய ஒன்று இது. நூலக நண்பர்களுக்கு இந்த கட்டுரையை பகிருங்கள். 

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.  

  • சி.சரவணன், ஆசிரியர், 
    நூலகர் செய்திமடல்,
  • 8668192839.

------------------------------------------------

நூலகங்களுக்கான பருவ  இதழ்கள் ஆன்லைன் பதிவேற்றமும், நடைமுறைச் சிக்கல்களும்
(சி.சரவணன், மூன்றாம் நிலை நூலகர்,
கிளை நூலகம் , கடத்தூர் , தருமபுரி மாவட்டம் , 8668192839)

    ‘நூலகங்களுக்கு நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் கொள்முதல் செய்யும் பொழுது வெளிப்படைத் தன்மை வேண்டும், வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அவை வாங்கப்பட வேண்டும் என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது.

  இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அதுதான் வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை, 2024. இதன்படி, இனி நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் மட்டுமல்லாது, பருவ இதழ்களும் வாசகர்களின் கருத்தறிந்து நூலகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்பதாகும்.
    இதன் தொடக்கமாக, கடந்த வாரம் பொது நூலக இயக்குநர் அவர்களின் அறிவிப்பு அமைந்தது. வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பருவ இதழ்கள் பற்றிய பதிவேடு ஒன்று நூலகங்களில் உடனடியாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நகர்ப்புற நூலகங்களில் இந்த பதிவேடு பராமரிக்கப்பட்டு, வாசகர்கள் தங்கள் விருப்பமான  பத்திரிகைகளை எழுதி வைத்தனர்.   

 அடுத்த ஓரிரு நாட்களில், பொது நூலக இணையதளத்தில் நூலகங்களுக்கான பருவ இதழ்கள் பதிவேற்றம் செய்யும் portal தொடங்கப்பட்டது. இந்த போர்டலில் நூலகர்கள், வாசகர் வட்டத் தீர்மானத்தின்படி தேர்வு செய்யப்பட்ட பருவ இதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் இந்த பணி முடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

    ‘ஏற்கனவே வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பத்திரிகைகள் பதிவேடு பராமரிக்கப்பட்டு, வாசகர்கள் பருவ இதழ்களைப் பதிவு செய்திருந்த நூலகங்களுக்கு இந்தப் பணி எளிதாக இருந்தது. மற்ற நூலகர்களுக்கு இந்தப் பணி கடினமாக இருந்தது.
 இரண்டு நாட்களுக்குள் வாசகர்களைத் தேடி அவர்களுக்கு இத்திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்து, அவர்கள் படிக்கும் / விரும்பும் பத்திரிகைகளை எழுதி கையொப்பம் பெறுவது என்பது பெரும்பாலான நூலகர்களுக்கு, குறிப்பாக ஊர்ப்புற நூலகர்களுக்கு  பெரும் சவாலாக இருந்தது.
    ஒரு வழியாக வாசகர் வட்டத்தில் தீர்மானம் போட்டு வாசகர்களிடம் கையொப்பம் பெற்று இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும்போது, இணையதள portal சரியாக வேலை செய்யவில்லை. இதனால்பல நூலகர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறினர். சென்னையில் ஒரு நூலகருக்கு உடல்நிலை சரியில்லாம் போனதாக சென்னை நூலக நண்பர் கூறினார்.  சில நாட்களில் இந்த பணியை  நூலகர்கள் அனைவரும்  செய்து முடித்துள்ளனர். மகிழ்ச்சி.

சிக்கல்களும் தீர்வுகளும்:
 இது ஒரு அருமையான திட்டம். இத்தனை ஆண்டுகளாக நூலகங்களுக்கு பருவ இதழ்கள் வாங்குவது மாவட்ட நூலக அலுவலர்கள்தான். 'பருவ இதழ்களை முடிவு செய்யும்போது நூலகர்களை கலந்தாலோசிக்க வேண்டும்' என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் சேலத்தில் பணிபுரிந்த போது, சங்கம் சார்பில் மாவட்ட நூலக அலுவலரிடம் கோரிக்கை வைத்தோம். "இது எங்கள் உரிமை. இதில் நீங்கள் தலையிடக்கூடாது. பணியாளர் நலன் பற்றி மட்டும் போசுங்கள்" என்று அன்றைய மாவட்ட நூலக அலுவலர் கூறிவிட்டார். மற்ற மாவட்ட நூலக அலுவலர்களின் நிலைப்பாடும் அதுவே.
    நூலகர் குரல் என்று ஒரு பத்திரிகை நடத்தினோம். நூலகர்களுக்காக நூலகர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை. அதற்கு மாவட்ட நூலக அலுவலர்களிடம் order வாங்க நடையாக நடந்தோம். சிலர் 'இயக்குநரைப் பாருங்கள்' என்பார்கள். சிலர் 'நிதி இல்லை' என்பார்கள். அப்பாடியே order கிடைத்தாலும் குறைவான எண்ணிக்கையில் தான் கிடைக்கும். சந்தா வசூல் செய்து பத்திரிகை நடத்தினோம். தாக்கு பிடிக்க முடியவில்லை.
    ஓய்வு பெற்ற பொது நூலகத்துறை இணை இயக்குநர் திரு. ந. ஆவுடையப்பன் நூலக உலகம் என்று ஒரு பத்திரிகை நடத்தினார். நூலகத் துறை சார்ந்த செய்திகள், நூலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெற்று இருந்தன.  இவராலும் போதுமான பத்திரிகை ஆர்டர் பெற முடியவில்லை. பத்திரிகை நின்று விட்டது.  இப்படி துறை சார்ந்த பத்திரிகைகளையே நூலகர்களால் வாங்க முடியாமல் இருந்தது. தற்பொழுது நிலைமை மாறி விட்டது. நூலகர்கள் தாங்கள் விரும்பும் பருவ இதழ்களையும் வாங்க முடிகிறது. மகிழ்ச்சி. 
 இந்த திட்டத்தை வடிவமைத்து, அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தந்த பொது நூலக இயக்குநர் திரு க. இளம்பகவத் அவர்களைப் பாராட்டியாக வேண்டும்.
    இதை நூலகர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என்று அவர்கள் மீது இயக்குநர்  வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இதுபோன்ற இணைய வழி தொழில் நுட்ப்பங்களை துறையில் புகுத்தும் போது பணியாளர்களுக்குப் புரிதலும் பயிற்சியும் இருக்க வேண்டியது அவசியம்.
    இந்த திட்டத்தைப் பற்றிய புரிதல் பெரும்பாலான நூலகர்களுக்கு இல்லை. இந்த திட்டத்தைப் பற்றி நூலகர்கள் ஓரளவாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கடந்த இதழில் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தில் நூலகர்களின் பங்கு என்னும் தலைப்பில் விரிவான கட்டுரை எழுதி இருந்தேன்.

அடிப்படை கணினி அறிவு:  
    இணையதளத்தைக் கையாள்வது, இணைய தளத்தில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வது, இணையதளங்களில் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வது போன்ற அனுபவங்கள் நமது நூலகர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பொது நூலகத்துறை வலைத் தளத்தையோ, அண்ணா நூற்றாண்டு நூலக வலைத் தளத்தையோ எத்தனை நூலகர்கள் நோண்டிப் பார்த்திருப்பார்கள்? எல்லோரும் ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருக்கிறார்கள். எத்தனை பேருக்கு மின்னஞ்சல் அனுப்பத் தெரியும்? எத்தனை பேருக்கு மின்னஞ்சல் முகவரி தெரியும்? எத்தனை பேருக்கு பாஸ்வேர்டை பராமரிக்கவும், மாற்றவும், வேறொரு கணினியில் மின்னஞ்சலை அனுப்பவும் தெரியும்? இவையெல்லாம் தெரிந்த நூலகர்கள்  எத்தனை சதவீதம் என்பதை அவரவர் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.      இருந்தாலும், எப்படியோ ஒரு வழியாகக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறித்த நேரத்தில் நூலகர்கள் செய்து முடித்து விட்டார்கள். மகிழ்ச்சி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.    சரி, இவர்களில் எத்தனை பேர் சொந்தமாகக் கணினியில் பதிவேற்றம் செய்தனர்? எத்தனை நூலகர்கள் தங்கள் நூலகங்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளரை வைத்து பதிவேற்றம் செய்திருப்பார்கள்? எத்தனை பேருக்கு அவர் குடும்பத்தார் செய்திருப்பார்கள்? எத்தனை நூலகர்களுக்கு கணினி மையத்தார் செய்திருப்பார்கள்? எல்லாம் அவரவர் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். 
    இத்துடன் இந்த பணி முடிந்து விடுவதில்லை. இதுதான் ஆரம்பம் என்பதை நூலகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை ஆபரேஷன் சக்சஸ் என்று சொல்லலாம். இந்த வெற்றி தொடர வேண்டும். இந்த வெற்றி தொடர வேண்டும் என்றால் நூலகர்கள் குறைந்தபட்ச கணினி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    மற்றவர்களை வைத்து கணினியில் பதிவேற்றம் செய்வது தொடக்கமாகவும் அவசரத்துக்காகவும் என்று வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் மற்றவர்களை நம்பி இருக்கக் கூடாது.

 கால அவகாசம்:
 இந்த ஆண்டு திட்டத்தை வடிவமைக்கவும், அதற்கான மென்பொருளை உருவாக்கவும் கால தாமதம் ஏற்பட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் பருவ இதழ் தேர்வுக்கான பணி மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கி, மூன்றாவது வாரத்தில் முடிப்பதற்கான பணியை இயக்குநர் அலுவலகம் செய்யும் என்று நம்புகிறேன். அப்பொழுதுதான் திட்டம் முழுமை அடையும்.

பத்திரிகைகளின் எண்ணிக்கை:
    அடுத்து பத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பொது நூலகம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவு வாசகர்களுக்கு என்று இல்லாமல் அனைத்து தரப்பு வாசகர்களுக்கான களம் என்னும் அடிப்படையில் பல்வேறு பொருள் சார்ந்த பத்திரிகைகளை வாங்க, தொகை பிரித்து ஒதுக்கப்பட்டது பாராட்டுக்குரியது.
 அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளின் பட்டியலில் மேலும் பல பத்திரிகைகள் சேர்க்க வேண்டும் என்று வாசகர்கள் கருத்து தெரிவித்தனர்.  அவர்கள் கேட்ட பத்திரிகைகள் பட்டியலில் இல்லை. அதனால், அடுத்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகள் பட்டியலில் மேலும் பல பத்திரிகைகள் சேர்க்கப்படும் என்று நம்புகிறேன்.

மென்பொருள்:    
   நூலகங்களுக்கு வாங்கப்படும் பத்திரிகைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதள மென்பொருள் தற்பொழுது எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் இருந்த filter ஆப்ஷன், ஓரளவு கணினி அறிவு உள்ளவர்கள் தான் பயன்படுத்த முடியும். அடுத்து, Next Page ஆப்சன் ஓப்பன் ஆகவில்லை. மேலே உள்ள Rows option வைத்துதான் அடுத்த பக்கங்களை பார்க்க முடிந்தது. இவையெல்லாம் சரி செய்யப்பட்டு விட்டது. முதல் நாளில் இருந்த பத்திரிகை பட்டியலுக்கும் அடுத்த நாள் இருந்த பத்திரிக்கை பட்டியலுக்கும் சில வேறுபாடுகள் இருந்தன. அதனால், வாசகர் வட்ட தீர்மானத்திற்கும், பதிவேற்றம் செய்யப்பட்ட பத்திரிகைகளுக்கும் சிறு வேறுபாடு ஏற்பட்டிருக்கும்.
    அடுத்து, மென்பொருளை Update செய்பவர்கள் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும். ‘மென்பொருள் அப்டேட் செய்யப்படுகிறது அதனால் இணையதளத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை’ என்னும் தகவல் மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் தெரியப்படுத்த வில்லை. நூலகர்களைத் துரிதப்படுத்துவதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். இதனால், பல நூலகர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாக என்னிடம் கூறினார்.  மென்பொருள் பயன்படுத்தும் போதுதான்,  அப்டேட் செய்ய வேண்டியதன் அவசியம் தெரியவரும். இது வழக்கமானது.
    இணைய தளத்தை பயன்படுத்துவது தொடர்பாக இயக்குநர் அவர்களின் உரையில், "பத்திரிகைகள் கொள்முதல் அதிகாரம் நூலகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.  ‘இந்த இயக்குநர் வந்த பிறகு அதிகாரங்கள் அனைத்தும் இயக்குநர் கைக்குப் போய் விட்டது’ என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் பார்த்தல், அதிகாரம் பரவலாக்கப் பட்டுள்ளது (delegation of power) என்று தான் தெரிகிறது. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைச் சரியாக பயன்படுத்துவோம்.

பருவ இதழ்கள் தேர்வில் நூலகர்கள் பங்கு:    
    பருவ இதழ்கள் தேர்வில் வாசகர்கள் பங்கு பாதி என்றால், மீதி நூலகர்களிடம் தான் இருக்க வேண்டும்.  அதற்கு ஏற்ப அறிவை நூலகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.   நூலகர்கள் புத்தக காப்பாளர்கள் அல்ல. அவர்கள் master of all subject. இந்த நூலக வாசகர்களுக்கு என்ன பத்திரிகைகள் வாங்கி வைக்க வேண்டும் என்னும் தெளிவு நம்மிடம் இருக்க வேண்டும். ஒரு மாவட்ட மைய நூலகர் என்னிடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு “குறிப்பிட்ட சில பத்திரிகைகள் மட்டும் வாசகர்கள்  தேர்வு செய்து கொடுக்கிறார்கள். மற்ற பத்திரிகைகளைப் பற்றிக் குறிப்பிட்டால், ‘அவை எல்லாம் வேண்டாம்’ என்று சொல்கிறார்கள். என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.  ”வந்திருக்கும் வாசகர்களில் ஒருவருக்கு ஒரு பத்திரிகை மட்டும் தேர்வு செய்ய அனுமதியுங்கள்.  வந்திருக்கும் 30 வாசகர்கள், இந்த ஊரில் உள்ள 30 ஆயிரம் பொது மக்களுக்கான பிரதிநிதி ஆகாது.  சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யுங்கள்” என்றேன்.

 இந்த திட்டமாகட்டும், அடுத்து வரும் திட்டங்களுக்கும் அடிப்படை கணினி அறிவு அவசியம். நூலகத்துறை பயிற்சி அளிக்கும் என்று நூலகர்கள்  காத்திருக்க வேண்டியதில்லை. நாம் அனைவரும் ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருக்கிறோம். இதை இயக்க நமக்கு யார் பயிற்சி கொடுத்தார்கள்? ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக்கொள்ளலாம். ஊர்ப்புற நூலகங்களைத் தவிர அனைத்து நூலகங்களுக்கும் கணினி வழங்கப்பட்டுள்ளது. பல நூலகங்களுக்கு இணையதள வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நூலகர்கள் கணினி அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.

நூலகர் குரல்...  

  தோழர்களுக்கு, வணக்கம். எந்தவொரு பணியும் செய்யும்போது கஷ்டமாக இருக்கும். ஆனால், அதனை முழுமையாக தெரிந்துக்கொண்டால்  சுலபமாக இருக்கும். எதிர்கால இந்தியாவிற்கு இளைஞர்கள் தேவை என்று கூறுவார்கள்.

    அதுமாதிரிதான் பொது நூலகத்துறையும் பொது நூலகத் துறையினை சீரமைத்து, TNPSCக்கு முக்கியத்துவம் கொடுத்து, நூலகர்களின் வாழ்வாதாரத்தில் ஓளியேற்றி, நூலகர்களின் விருப்பம் அறிந்து ஆன்லைன் மூலமாக நூலகர்களை நேரில் அழைத்து பதவிஉயர்வு / இடம் மாறுதல் வழங்கியது, எனது முப்பது ஆண்டு கால பணிக்காலத்தில் இதுவே முதல் முறை. 

    நூலகத்திற்கு இளைஞர்கள் கூட்டம் வராமல், இருந்த நிலையில், இன்றைக்கு நூலகத்தில் படிக்க இடம் இல்லாமல் படிக்கும் இளைஞர்கள் கூட்டம், ஏழை எளியோரை நூலகத்திற்கு வரவழைத்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றிய நமது நூலகத்துறையின் முதுகெலும்பாக நின்று வழிநடத்தி வரும் பொது நூலக இயக்குநர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றி கலந்த வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    முன்பெல்லாம் பருவஇதழ்கள்  அலுவலகம் மூலமாகவே பெறப்பட்டோம், ஆனால், இன்று ஓவ்வொரு நூலகத்தின் நூலகர்கரும்  அதனை எப்படி வாங்குவது என்னும் முறையை சொல்லிக்கொடுத்துள்ளார். இது நூலகர்கள் பெருமைப்பட வைத்த சம்பவமாக கருதுகிறோம்.

    சென்னை மாவட்டத்திற்கும், சேலம் மாவட்ட த்திற்கும் TNPSC மூலம் வந்த மாவட்ட நூலக அலுவலர் அவர்களை நியமனம் செய்த, நம்மை மதிப்போடு வழிநடத்தும் பொதுநூலக இயக்குநர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.    
- நா. அண்ணாதுரை, 
இரண்டாம் நிலை நூலகர், சென்னை.
வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கையின்படி வாசகர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பருவ இதழ்கள் தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்தில் தேர்வு செய்யப்படுகின்றன. மாவட்ட நூலக ஆய்வாளர் திருமதி. டி. மாதேஸ்வரி, நூலகர் சி. சரவணன், மற்றும் வாசகர்கள்.

10/04/2024 அன்று தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி கிளை நூலகத்தில் திருமதி மு. சரஸ்வதி ஆசிரியை (ஓய்வு) அவர்கள் நூலகரிடம் ரூபாய் ஆயிரம்  செலுத்தி புரவலராக இணைந்து கொண்டார்.

-  சீ. முனிரத்தினம், நூலகர், 
கிளை நூலகம், இலக்கியம்பட்டி.

RRRLF -Donated  Furniture, received by the librarian, village library, Venkatampatti,  Dharmapuri Dt.

 


காந்தி என்னும் மகான்!

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.
எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது,
அவனை மிகவே
யோசிக்க வைத்தது.
அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்.
ஆனால், காந்தியை அவ்வப்போது
உற்றுப் பார்த்தான்.
இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்?
ஏதாவது புத்தகம் கொடுங்கள்  என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான்.
இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது.
ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.
மகழ்ச்சி  எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி.
இன்று உங்களுக்கு
விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி.
ஆனால், உங்களைப் பிரிய
என்னால் முடியவில்லை.
இது வருத்தமான செய்தி என்றான்
ஸ்மட்ஸ்.
காந்தி சொன்னார்,
"நானும் உங்களுக்கு
ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி,
தான் சிறையில் தைத்த பூட்சை  அவரிடம்  கொடுத்தார்.
ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான்,
"இவ்வளவு
துல்லிமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது"
என்று கேட்க,
சிரித்தபடி காந்தி
தனது மார்புத் துண்டை அகற்றினார்;
ஆரம்பத்தில்
ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.
"இந்த வடுக்களை
அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார்.
"தடால்" என்று சத்தம்;
ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக்
கதறினான்.
"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!
என்னை மன்னித்து விடுங்கள்.
இனி யாரையும்
அடிக்க மாட்டேன்" என்றார்.
ஒரு நிமிடத்தில்,
ஒரு கொடிய மிருகம்,
மென்மையான
மனிதனாக மாறியது.
"கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று  இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான்.
"இந்த பூட்ஸ்தான்
இனி எனக்குக் கடவுள்;
இதை மட்டுமே வணங்குவேன்" அணியமாட்டேன்
என்று  சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து அப்படியே
வணங்கினான்.
*"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்".*
மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.
அன்பே சிவம்!!!கருணையே யேசு!!!
     நற்பண்பே நபிகள்!!!!
மனிதன் மகிழ்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட மாமனிதமே மிகச்சிறந்த பண்பு..... 

(வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் வந்தது. 
அனைவரும் படிக்க வேண்டியது.)

கொடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் மாணவிகள். 
(இடம்: ஊர்ப்புற நூலகம், ஒடசல்பட்டி, 
தருமபுரி மாவட்டம்)


வெப்ப நிலை அதிகமாக உள்ளது. தற்காப்பு முறைகள்: 






இரங்கல் செய்தி: 

புதுக்கோட்டை மாவட்ட நூலக ஆணைக் குழு, அறந்தாங்கி முழு நேர கிளை நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராக பணிபுரிந்து வந்த திரு.மா. செந்தில்நாதன் அவர்கள்  திடீர் உடல் நலக்குறைவு காரணமாக 08.04.2023 அன்று இரவு இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அண்னாரின்  ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

- தா.இளங்கோ. 

 நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள்,  கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31