நூலகர் செய்திமடல் 33
ஆசிரியர் உரை:
அனைவருக்கும் வணக்கம்,
இணைய வழியில் நாம் தேர்ந்தெடுத்த பருவ இதழ்கள் அஞ்சல் வழியில் வரத் தொடங்கி விட்டன. இத்தனை ஆண்டுகள் யாரோ தேர்வு செய்த பத்திரிகைகள் நம் நூலகங்களுக்கு வந்தன. ஆனால், இந்த ஆண்டு நம் நூலகத்திற்கான பருவ இதழ்களை நாமே தேர்வு செய்து, பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இதழ்கள் ‘வாசகர் விருப்பம் அறிந்து’ என்று சொல்லப்பட்டாலும், ‘நூலகர் விருப்பம் அறிந்தும்’ என்று சொல்லலாம்.
ஏனென்றால், நூலகர் என்பவர் முதல் வாசகர். நூலகர் என்பவர் வாசகர்களின் பிரதிநிதியும்கூட. நான் சந்தா செலுத்தி சில பத்திரிகைகள் வாங்கி படித்து, வாசகர்களுக்கும் கொடுத்து வந்தேன். அந்த பத்திரிகைகள் தற்பொழுது இணைய வழியில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒரு வாசகரும் படிக்கப்படாத பருவ இதழ்கள் நூலகத்திற்கு வந்த நிலையும் இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. 'ஒரு வாசகருக்கு ஒரு பத்திரிக்கை; ஒரு பத்திரிக்கைக்கு ஒரு வாசகர் என்னும் குறைந்தபட்ச பயன்பாட்டிலாவது பருவ இதழ்கள் இருக்க வேண்டும்' என்கின்ற உயரிய எண்ணத்தில்தான் பருவ இதழ்கள் இணைய வழியில் நூலகர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பருவ இதழ்களுக்கு ஆண்டு சந்தா செலுத்துவதன் மூலம் அவைகளுக்கு வழங்கப்படும் தொகையும் குறைகிறது. நூலகத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களில் இது ஒரு முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
இதேபோல், நூலகங்களுக்கு வாங்கப்படும் செய்தித்தாள்கள் பற்றி முடிவு செய்யும்போது, மாவட்ட நூலக அலுவலர்கள் நூலகர்களிடம் கலந்து பேசுவது நல்லது. ஏனென்றால், நூலகம் அமைந்துள்ள பகுதியில் கிடைக்கும் பத்திரிகைகளுக்குப் பதில், கிடைக்கப்பெறாத செய்தித்தாள்கள் சில இடங்களில் வாங்க அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ் முரசு, மாலை முரசு ஆகிய மாலை செய்தித்தாள்கள் பல நூலகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த செய்தித்தாள்களுக்குப் பல இடங்களில் முகவர்கள் இல்லை. இந்த செய்தித்தாள்களுக்குப் பதில் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மாலை மலர் பத்திரிகையை மாற்றிக் கொடுக்க மாவட்ட நூலக அலுவலர்கள் முன்வர வேண்டும்.
அடுத்து, மே 23 உலக புத்தக தினம். அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல நூலகங்களில் உலக புத்தக தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அனைத்து நூலகங்களிலும் இதுபோன்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்த மாவட்ட நூலக அலுவலர்கள் நூலகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்ச செலவுக்கான நிதியை வழங்குவது அவசியம்.
நூலகங்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இதுபோன்ற விழாக்களை நடத்துவது அவசியம். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விளம்பரப்படுத்தி வருகின்றன. நாமும் நம் பொருட்களை விளம்பரப்படுத்துவது (Marketing Knowledge) அவசியம். அப்பொழுதுதான் நூலக பயன்பாடு அதிகரிக்கும்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, அகில இந்திய வானொலி தருமபுரி பண்பலை வழக்கம்போல் என்னை அழைத்து, ‘வாசிப்பை நேசிப்போம்’ என்னும் தலைப்பில் ஒரு மணிநேர நேரலை நிகழ்ச்சி நடத்தியது. வானொலி நிலையம் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரூ. 2,500 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நூலக அலுவலர்கள் / நூலகர்கள் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. நமக்கு வருமானமும் கிடைக்கிறது. விளம்பரமும் கிடைக்கிறது. ஒரு மணி நேரத்தில் லட்சக் கணக்கானோருக்கு அறிமுகமானவராக ஆகிவிடுகிறோம்.
அடுத்து, எதிர்வரும் மே 22 பொது நூலக தினம். அன்று அனைத்து நூலகங்களிலும் ஏதாவது விழாக்கள் நடத்த நாம் முயற்சி செய்வோம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
- சி.சரவணன், ஆசிரியர்,நூலகர் செய்திமடல்,
- 8668192839.
------------------------------------------------
Comments
Post a Comment